சென்னை, குற்றம் நடந்த பிறகு குற்றவாளிகளைத் தேடுவது மட்டும் போதாது. குற்றம் நிகழ்வதற்கு முன்பே தடுத்து நிறுத்தும் வகையில் காவல்துறையைச் செயல்பட வைக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக, வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- இரங்கல் சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில், இளைஞர் அஜித் தனது வீட்டு வாசலில் தாயுடன் பேசிக்கொண்டிருந்தபோதே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோரின் கண்முன்னே நடந்த இந்தக் கொடூரப் படுகொலைக்கு எனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்கிறேன். மகனை இழந்து நிற்கும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். கைது சென்னை பெசன்ட் நகர் பகுதியில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், திருவொற்றியூரில் கொலை, பழைய வண்ணாரப்பேட்டையில் கொலை என தலைநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து கொலைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இத்தகைய சம்பவங்களைத் தொடர்ந்து, குற்றங்களைத் தடுக்கும் நடவடிக்கையாக சென்னையில் 285 பேர் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. ஆனால், நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டிருக்கும்போதே, மக்கள் வசிக்கும் பகுதிகளில், பெற்றோரின் கண்முன்னேயே உயிர்கள் பறிக்கப்படுகின்றன என்றால், காவல்துறையின் தடுப்பு நடவடிக்கை எங்கே போதுமானதாக இருக்கிறது? வலியுறுத்தல் உணவு பொருட்களின் விலையும், கொலை சம்பவங்களும் போட்டிபோட்டு உயர்வதுபோல் தமிழ்நாட்டில் மக்களின் அச்சமும் அதிகரிக்கிறது. மக்களின் உயிரைக் காப்பதுதான் அரசின் முதல் கடமை. குற்றம் நடந்த பிறகு குற்றவாளிகளைத் தேடுவது மட்டும் போதாது. குற்றம் நிகழ்வதற்கு முன்பே தடுத்து நிறுத்தும் வகையில் காவல்துறையைச் செயல்பட வைக்க வேண்டும். சென்னை போன்ற தலைநகரில் பொதுமக்கள் தங்கள் வீட்டு வாசலில்கூட பாதுகாப்பாக இருக்க முடியாத நிலை தொடரக்கூடாது. எனவே, சென்னையில் தொடரும் கொலைச் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் காவல்துறையை நேரடியாக வழிநடத்தி, குற்றவாளிகளை விரைந்து கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதுடன், பொதுமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் முழுமையான பாதுகாப்பை உறுதி செய்ய முதல்-அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/police-should-be-made-to-act-to-prevent-crimes-in-advance-velmurugan




