சென்னை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; “தஞ்சாவூர் மாநகரத்தின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் ஜெபமாலைபுரம் குப்பைக் கிடங்கில் அடிக்கடி பற்றி எரியும் தீயால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. குடியிருப்புகள், பள்ளிகள், திருமண மண்டபங்கள், புகழ்பெற்ற திருக்கோயில்களுக்கு அருகில் அமைந்திருக்கும் இந்த குப்பைக் கிடங்கில் அடிக்கடி பற்றி எரியும் தீயிலிருந்து வெளியாகும் நச்சுப்புகையால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்படுவதோடு, அப்பகுதியின் நிலத்தடி நீரும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரியகோயிலுக்கு அருகே அமைந்திருக்கும் இந்த குப்பைக் கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தும் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். எனவே, தஞ்சாவூர் மாநகரின் மையப்பகுதியிலிருந்து நிலம், நீரோடு, காற்றையும் மாசுபடுத்தும் இக்குப்பைக் கிடங்கை உடனடியாக இடமாற்றம் செய்வதோடு, தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கும், சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கும் குப்பைக் கிடங்குகளை அனைத்தையும் வேறு இடத்திற்கு மாற்றும் வகையில் செயல்திட்டம் ஒன்றை வகுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/relocate-the-garbage-dump-situated-in-the-heart-of-thanjavur-ttv-dhinakaran




