தொழில்நுட்பம் எத்தனை உயரங்களுக்கு சென்றாலும், ஒரு திரைப்படத்தை உருவாக்கி அதை திரையரங்கத்திற்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்றால் அடிப்படையாக தேவைப்படுவது இரண்டே விஷயங்கள்தான். ஒன்று, காட்சிகளை பதிவு செய்யும் ‘கேமரா’. மற்றொன்று, பதிவு செய்யப்பட்ட காட்சிகளை ஒளி வடிவமாக திரையில் காட்டும் ‘புரொஜக்டர்’. மொழி, இனம் என அனைத்து எல்லைகளையும் கடந்து பயணிக்கக் கூடியது சினிமா. ஒரு திரைப்படம் உலகின் எந்த பகுதியில் உள்ள திரையரங்கிலும் திரையிடப்பட வேண்டும் என்றால், கேமரா மற்றும் புரொஜக்டர் தொழில்நுட்பத்தில் வேறுபாடுகள் இல்லாமல் இருக்க வேண்டியது அவசியம். 19-ம் நூற்றாண்டின் இறுதியில் தாமஸ் ஆல்வா எடிசன் போன்ற கண்டுபிடிப்பாளர்கள், நகரும் படங்களுக்கு(Motion Pictures) 35 மி.மீ. அளவை ஒரே தரநிலையாக(Standard Size) மாற்ற உதவினர். தொடர்ந்து 1909-ம் ஆண்டுக்குப் பின், சினிமா எடுப்பதற்கு 35 மி.மீ. பிலிம் கேமராவை பயன்படுத்துவது ஒரு அதிகாரப்பூர்வ விதியாக மாறிவிட்டது. இந்த கேமராவில் 35 மி.மீ. அகலம் கொண்ட படச்சுருள்(Film Roll) பயன்படுத்தப்பட்டிருக்கும். அந்த பிலிமில் காட்சிகள் புகைப்படங்களாக பதிவாகும். ஒவ்வொரு புகைப்படமும் ஒரு பிக்சர் பிரேம்(Picture Frame) என அழைக்கப்படும். புரொஜக்டர் கருவியில் பிலிம் ரோல் வேகமாக சுற்றும்போது, அது நகரும் படமாக திரையில் காட்டப்படும். இதற்காக பிலிம் ரோலின் இடது மற்றும் வலது புறங்களில் துளைகள் போடப்பட்டிருக்கும். எனவே, 35 மி.மீ. அகலம் கொண்ட படச்சுருளில் இருக்கும் பிக்சர் பிரேமின் அகலம் 24.9 மி.மீ. ஆக மட்டுமே இருக்கும். ஒரு பிலிமின் அகலத்தை மாற்ற முடியாது. எனவே பிக்சர் பிரேமின் அகலத்தையும் மாற்ற முடியாது. ஆனால், பிக்சர் பிரேம்களின் உயரத்தை மாற்றக்கொள்ள முடியும். அதன்படி 35 மி.மீ. பிலிமில் ஒரு பிக்சர் பிரேம் அதிகபட்சமாக 18.7 மி.மீ. உயரம் வரை இருக்க முடியும். ‘ஐமேக்ஸ்’ கேமரா பிக்சர் பிரேம்களின் உயரத்தை அதிகரிக்க முடிந்ததுபோல், அதன் அகலத்தையும் அதிகரிக்க முடிந்தால் திரையில் வரும் காட்சிகளில் இன்னும் அதிகமான தகவல்களை காட்ட முடியும் என்று இயக்குநர்கள் உணர்ந்தனர். ஆனால் பாரம்பரிய 35 மி.மீ. கேமராக்களை வைத்துக் கொண்டு இதை செய்ய முடியாது. இந்த சிக்கலை தீர்க்க ‘ஐமேக்ஸ்’ கேமரா உதவியது. ஒரு சாதாரண 35 மி.மீ. பிலிமில், பிக்சர் பிரேம் அளவு அதிகபட்சமாக 24.9 மி.மீ அகலம், 18.7 மி.மீ. உயரமாக இருக்கும். இதுவே ஐமேக்ஸ் பிலிமின் பிக்சர் பிரேம் அளவு 70 மி.மீ. அகலம், 48 மி.மீ. உயரம் ஆகும். ஐமேக்ஸ் பிலிமில் பதிவாகும் காட்சி, பாரம்பரிய 35 மி.மீ. பிலிமில் பதிவாகும் காட்சியை விட 8 மடங்கு பெரியதாக இருக்கும். இதனால் காட்சிகளில் அதிக தகவல்கள் இருப்பதோடு, துல்லியமாகவும், தரமாகவும் இருக்கும். பிலிம் அளவு பெரியதாக இருப்பதால், ஐமேக்ஸ் கேமராவுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்படும் ‘கார்ல் ஸெய்ஸ்’(Carl Zeiss) லென்ஸ் உள்ளிட்ட குறிப்பிட்ட வகை லென்ஸ்கள் மட்டுமே அதில் பயன்படுத்தப்படுகின்றன. ‘ஐமேக்ஸ்’ திரை ஐமேக்ஸ் கேமராவில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் பெரிதாக இருக்கும்போது, அதை திரையிடுவதற்கான திரையும் பெரிதாக இருந்தாக வேண்டுமே? சாதாரண திரையரங்கத்தில் உள்ள திரையின் அளவு அதிகபட்சமாக சுமார் 20 மீட்டர் அகலம், 9 மீட்டர் உயரம் கொண்டதாக இருக்கும். அதே சமயம், ஐமேக்ஸ் திரையரங்கத்தில் உள்ள திரையானது சுமார் 24 மீட்டர் அகலம், 18 மீட்டர் உயரம் கொண்டதாக இருக்கும். இதன் தோற்ற விகிதம்(Aspect Ratio) 1.43:1 ஆகும். ‘ஐமேக்ஸ்’ புரொஜக்டர் சுமார் ஒரு நூற்றாண்டுக்கு மேலாக திரைத்துறையில் கோலோச்சி வந்த பாரம்பரிய 35 மி.மீ. கேமராக்கள், 21-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் டிஜிட்டல் கேமராக்களின் வருகை அதிகரித்த பின்னர் மெல்ல விடைபெற ஆரம்பித்தன. தற்போது சினிமா உலகத்தை டிஜிட்டல் கேமராக்கள் முழுவதுமாக ஆக்கிரமித்துவிட்டன. கேமராக்களைப் போல் புரொஜக்டர் கருவிகளும் டிஜிட்டல் புரொஜக்ஷன் தொழில்நுட்பத்திற்கு மாறிவிட்டன. தற்போது வரை ஐமேக்ஸ் கேமராக்கள் பிலிம் ரோல்களை மட்டுமே பயன்படுத்தி வருகின்றன. அதே சமயம், ஐமேக்ஸ் புரொஜக்டர் கருவிகள் டிஜிட்டல் முறைக்கு மாறிவிட்டன. கடந்த 2008-ம் ஆண்டு ஐமேக்ஸ் நிறுவனம் தனது முதல் 2k டிஜிட்டல் புரொஜக்டரையும், தொடர்ந்து 2014-ம் ஆண்டு 4k டிஜிட்டல் புரொஜக்டரையும் அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் ஐமேக்ஸ் கேமராக்களில் எடுக்கப்பட்ட படங்களை பிரத்யேக ஐமேக்ஸ் திரையரங்குகள் மட்டுமின்றி, டிஜிட்டல் புரொஜக்டரை கொண்ட சாதாரண திரையரங்குகளிலும் திரையிட முடிந்தது. பின்னடைவுகள் உலகில் தற்போது வெறும் 26 அசல் ஐமேக்ஸ் கேமராக்கள் மட்டுமே உள்ளதாக கூறப்படுகிறது. ஐமேக்ஸ் நிறுவனமே இவற்றை தயாரித்து, பராமரித்து வருவதால், உலகம் முழுவதும் இவற்றின் இருப்பு குறைவாகவே உள்ளது. மேலும், இந்த கேமராக்கள் அதிக எடை கொண்டதாகவும், அதிக சத்தம் எழுப்பக் கூடியதாகவும் இருக்கின்றன. இதனால் ஐமேக்ஸ் கேமராவை பயன்படுத்தி ‘கிளோஸ் அப்’ ஷாட்களை எடுப்பது கடினமான வேலையாகி விடுகிறது. மேலும் ஐமேக்ஸ் கேமராக்களை வாடகைக்கு வாங்கி திரைப்படம் எடுப்பதற்கான செலவும் அதிகமாகும். அதே போல், ஐமேக்ஸ் கேமராக்களுக்கு தேவைப்படும் பிலிம் ரோல்களின் விலையும் அதிகம் என்பதால், அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு மட்டுமே ஐமேக்ஸ் கேமராவை பயன்படுத்த முடியும் என்ற நிலை தற்போது உள்ளது. அதோடு, 3 நிமிடங்களுக்கு மேல் ஒரு ஷாட்டை எடுக்க முடியாது என்பதும் இதில் உள்ள ஒரு பின்னடைவாகும். கிறிஸ்டோபர் நோலனை கவர்ந்த ‘ஐமேக்ஸ்’ இந்த டிஜிட்டல் யுகத்தில் ஐமேக்ஸ் கேமராவை வைத்து படம் எடுப்பதில் பல சிக்கல்கள் இருந்தாலும், இயக்குநர்களுக்கு ஐமேக்ஸ் கேமரா மீது தனி காதல் எப்போதும் இருந்து வருகிறது. ரசிகர்களுக்கு துல்லியமான காட்சி அனுபவத்தை கொடுக்கக் கூடிய ஐமேக்ஸ் கேமராவை பயன்படுத்தி படம் எடுக்க ஹாலிவுட்டில் பல முன்னணி இயக்குநர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதில் மிக முக்கியமானவர் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன். நோலன் தனது 16-வது வயதில் முதல் முறையாக ஐமேக்ஸ் திரையரங்கத்திற்கு சென்றுள்ளார். அந்த பிரம்மாண்ட திரையரங்கத்தில் ஒரு ஆவணப்படம் திரையிடப்பட்டுள்ளது. சுமார் 5 மாடி உயரம் கொண்ட திரையைக் கண்டு வியந்துபோன நோலன், சினிமாவில் இயக்குநரான பிறகு ஐமேக்ஸ் கேமராவை பயன்படுத்தி படம் எடுத்தே தீர வேண்டும் என்ற உறுதியோடு இருந்துள்ளார். ‘தி ஒடிசி’ படத்திற்காக புதிய மாற்றம் ஹாலிவுட்டில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘தி டார்க் நைட்’ படத்தின் சில ஆக்ஷன் காட்சிகளை படம்பிடிக்க ஐமேக்ஸ் கேமராவை நோலன் பயன்படுத்தினார். அதன் பிறகு இண்டர்ஸ்டெல்லார், டெனட், ஓப்பன்ஹைமர் போன்ற படங்களிலும் குறிப்பிட்ட சில காட்சிகளில் ஐமேக்ஸ் கேமராவை பயன்படுத்திய நோலன், அடுத்ததாக ‘தி ஒடிசி’ திரைப்படத்தை முழுக்க முழுக்க ஐமேக்ஸ் கேமராவை வைத்து படமாக்கியுள்ளார். இந்த படத்தில் பயன்படுத்துவதற்காக நோலனின் வேண்டுகோளுக்கிணங்க, ஐமேக்ஸ் கேமராவில் ஒரு புதிய மாற்றத்தை ஐமேக்ஸ் நிறுவனம் செய்துள்ளது. அதாவது, ஐமேக்ஸ் கேமராக்களில் சத்தம் அதிகமாக வருகிறது என்ற குற்றச்சாட்டு இருந்தது. அதை சரிசெய்யும் வகையில் கேமராவை முழுவதுமாக மூடும் வகையில் கேமராவை சுற்றி ஒரு பிரத்யேக பெட்டகம் போன்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் கேமராவில் இருந்து வரும் சத்தம் பெருமளவு குறைந்துள்ளது. ஐமேக்ஸ் திரையரங்கத்தில் ஒரு படத்தை நாம் பார்க்கும்போது, அந்த பிரம்மாண்ட திரை நமது பார்வையை முழுமையாக சூழ்ந்து விடுகிறது. இதன் மூலம் ரசிகர்களுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையிலான காட்சி அனுபவத்தையும், பிரம்மாண்டத்தையும் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்த முடியும் என்று நோலன் கூறுகிறார். உலகிலேயே ஐமேக்ஸ் கேமராவை வைத்து எடுக்கப்பட்ட முதல் முழுநீள திரைப்படம் நோலனின் ‘தி ஒடிசி’ திரைப்படம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/the-awe-inspiring-imax-the-story-behind-the-camera-that-captivated-christopher-nolan




