சென்னை, தமிழ்நாட்டில் ஒரே நாளில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் நடத்தப்பட்ட லஞ்ச வேட்டையில் ரூ.58 லட்சம் சிக்கியது. இந்த நேரத்தில், அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் என்ன தண்டனை என்பதையும் தெரிந்துகொள்வது அவசியம். 'ஆட்சி' மாறினாலும் 'காட்சி' மாறவில்லை தமிழகத்தில் த.வெ.க. தலைமையில் புதிய அரசு ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில், முதல்-அமைச்சர் விஜய், "வெளிப்படையான நிர்வாகம், ஊழலற்ற ஆட்சி வழங்கப்படும்" என்று அறிவித்தார். ஆனால், 'ஆட்சி' மாறினாலும் 'காட்சி' மாறவில்லை என்ற நிலையில், அரசு அலுவலகங்களில் மக்கள் சேவைக்கு லஞ்சம் வாங்கப்படுவதாக தொடர்ந்து அரசுக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. லஞ்சம் கேட்பதாக குற்றச்சாட்டு லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநராக அருண் நியமிக்கப்பட்ட பிறகு, அவ்வப்போது அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு வேட்டை நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. கடந்த மாதம் 60 சார்-பதிவாளர் அலுவலகங்களிலும், பல ஆர்.டி.ஓ. அலுவலகங்களிலும் நடத்தப்பட்ட லஞ்ச வேட்டையில், பல லட்சம் ரூபாய் ரொக்க பணம் சிக்கியது. இந்த நிலையில், சொத்து வரி பெயர் மாற்றம், பிறப்பு-இறப்பு சான்றிதழ் வாங்குவது போன்றவற்றுக்கு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் அரசுக்கான சேவை கட்டணத்தையும் தாண்டி ஊழியர்கள் லஞ்சப் பணம் கேட்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. ரூ.58 லட்சம் சிக்கியது அதனைத் தொடர்ந்து, நேற்று ஒரே நாளில் தமிழ்நாட்டில் உள்ள 41 மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென சோதனை நடத்தினார்கள். சோதனை நடைபெற்ற 41 அலுவலகங்களிலுமே லஞ்சப் பணம் சிக்கியது. மொத்தம் ரூ.57 லட்சத்து 98 ஆயிரத்து 100 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கணக்கில் வராத ரூ.31 லட்சத்து 27 ஆயிரத்து 110 ரொக்கப் பணமும், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஜி-பே பரிவர்த்தனை ரூ.26 லட்சத்து 70 ஆயிரத்து 990-ம் கண்டுபிடிக்கப்பட்டது. அதிகபட்சமாக ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் ரூ.3 லட்சத்து 66 ஆயிரம் ரொக்கப் பணமும், காரைக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் ரூ.8 லட்சத்து 6 ஆயிரம் பணம் ஜி-பே மூலம் பெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லஞ்சம் வாங்கி சிக்கினால் என்ன தண்டனை? முன்பெல்லாம், லஞ்சப் பணத்தை ஆதாரமில்லாத வகையில், ரகசிய இடத்தில் ரொக்கமாக வாங்கிக் கொள்வதை கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால், இப்போது ஜி-பே மூலம் லஞ்சம் வாங்கினால், அது ஆதாரமாகிவிடும் என்பது தெரிந்தும் பயம் இல்லாமல் லஞ்சம் வாங்குகிறார்கள் என்றால், அந்த அளவுக்கு அரசு அலுவலகங்களில் லஞ்சம் புரையோடிக்கிடக்கிறது. அவ்வாறு தவறு செய்யும் அரசு ஊழியர்களுக்கும் பயம் என்பது இல்லாமல் போய்விட்டதையே இது காட்டுகிறது. இனி லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கு என்ன தண்டனை? என்பதை தொடர்ந்து பார்ப்போம். முன் அனுமதி தேவையா? பொதுவாக, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு அரசு ஊழியர் மீது வழக்கு பதிவு (எப்.ஐ.ஆர்.) செய்ய, பிரிவு 17ஏ-ன் படி அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும். ஆனால், லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பிடிபட்டால் இதுபோன்ற முன் அனுமதி தேவையில்லை. உடனடியாக, அந்த ஊழியரை போலீசார் கைது செய்து விசாரணையைத் தொடங்கலாம். கைது செய்த பிறகு, அந்த அரசு ஊழியர் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய பிரிவு 19-ன் படி அரசின் அனுமதி தேவை ஆகும். ஆனால், இதுபோன்ற நிகழ்வுகளின்போது, அரசு அனுமதி கொடுக்காமல் தாமதம் செய்வதாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது. 4 மாதங்களுக்குள் முடிவு ஆனால், மத்திய அரசின் புதிய சட்டத் திருத்தங்களின்படி, அரசு அனுமதி கோரும் விண்ணப்பத்தின் மீது 4 மாதங்களுக்குள் (120 நாட்கள்) முடிவெடுக்க வேண்டும். புதிய பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பி.என்.எஸ்.எஸ்.) சட்டத்தின்படி, அரசு 120 நாட்களுக்குள் (4 மாதங்கள்) அனுமதி வழங்கவோ அல்லது மறுக்கவோ இல்லை என்றால், நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அனுமதி அளித்ததாகவே கருதப்படும். இதன் பிறகு நீதிமன்றம் தானாகவே வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அந்த அதிகாரியின் பதவி பறிக்கப்பட்டு, அரசுப் பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். புகார் அளிப்பது எப்படி? அரசு சேவைக்கு பொதுமக்களிடம் லஞ்சம் கேட்கப்பட்டால், தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையின் Tamil Nadu Vigilance and Anti-Corruption அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கலாம். அல்லது அவர்களின் கட்டணமில்லா உதவி எண் 1064-ஐ அழைக்கலாம். பொதுமக்கள் அளிக்கும் புகாரில், லஞ்சம் கேட்கும் அதிகாரியின் பெயர், பதவி மற்றும் துறை சார்ந்த விவரங்களை முழுமையாகக் குறிப்பிட வேண்டும். தங்களுக்கு எந்த அரசு துறையில் லஞ்சம் தொடர்பான சிக்கல் ஏற்பட்டுள்ளது? அந்த அதிகாரியின் துறை மற்றும் அவர்கள் லஞ்சம் கேட்பதற்கான ஆதாரங்கள் உங்களிடம் உள்ளதா? என்பதையும் தெரிவிக்க வேண்டும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/what-punishment-do-tn-government-employees-face-for-taking-bribes-full-details



