சென்னை, ஆரோவில்(Auroville) என்பது தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம் மற்றும் புதுச்சேரி எல்லைக்கு அருகில் அமைந்துள்ள ஒரு சர்வதேச சோதனை நகரமாகும். சாதி, மதம், இனம், அரசியல் எல்லைகளைக் கடந்து மனிதர்கள் ஒற்றுமையாக வாழ்வதை பரிசோதிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். உலகம் முழுவதிலும் இருந்து வந்த மக்கள் இங்கு இணைந்து வாழ்கின்றனர். இந்நிலையில், சர்வதேசப் பெருவெளி ஆரோவில்லின் நிலத்தையும் அதன் மாண்பையும் பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;- “உலக அமைதிக்கும் மனித ஒருமைப்பாட்டிக்குமான சர்வதேசப் பெருவெளி ஆரோவில். அது எந்தவொரு மதவாத கும்பலின் ஆதிக்க சொத்தும் அல்ல, அரசியல் வேட்டைக்காடும் அல்ல. தற்போது, நிலப் பரிமாற்ற ஊழல்கள், இயற்கை வளச் சுரண்டல்கள் என அரவிந்தர் அன்னையின் கனவைச் சீரழிக்கும் நிர்வாகத் துரோகங்கள் எல்லை மீறிவிட்டன. தலைமுறை தலைமுறையாகப் பாதுகாக்கப்பட்ட ‘அன்னபூர்ணா’ இயற்கை விவசாயப் பண்ணையின் 100 ஏக்கர் நிலத்தைச் சென்னை ஐ.ஐ.டி.க்கு 33 ஆண்டுகள் குறைந்த தொகையிலான குத்தகைக்குத் தாரைவார்த்த நிர்வாகத்தின் அதிகாரத் திமிரையும், ஆரோவில்லின் நிர்வாகத்தை ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்துத்துவ சக்திகள் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் துடிக்கும் அப்பட்டமான அத்துமீறல்களையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். பன்னாட்டு மனிதர்களின் அமைதிப் பூங்காவை ஆக்கிரமிப்பாளர்களுக்கும் கார்ப்பரேட் ஏவலாளர்களுக்கும் விற்றுத் தீர்க்க எவருக்கும் உரிமையில்லை. நில முறைகேடுகள், பண்ணைத் தாரைவார்ப்பு, இந்துத்துவ அதிகாரத் திணிப்பு என அனைத்தின் மீதும் தயவுதாட்சண்யமற்ற சுயாதீன விசாரணையை மத்திய - மாநில அரசுகள் உடனடியாக நடத்தி உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும். ஆரோவில்லின் நிலத்தையும் அதன் மாண்பையும் பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/measures-must-be-taken-to-protect-the-land-and-dignity-of-auroville-velmurugan-urges




