சென்னை, அறிவுசார் கண்டுணர்வு பயணத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 23 பட்டு விவசாயிகள் மற்றும் பட்டுவளர்ச்சித் துறை அலுவலர்கள் பங்கேற்றனர். இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சரின் 2026–27 நிதிநிலை அறிவிப்பின் கீழ், பட்டு வளர்ச்சித் துறையில் அறிவியல் தொழில்நுட்பங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளை முன்னோடி மாநிலங்களிலிருந்து அறிந்து, தமிழ்நாட்டில் செயல்படுத்துவதற்காக “அறிவுசார் கண்டுணர்வு பயணம்” திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அறிவுசார் கண்டுணர்வு பயணம் இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக தெலங்கானா மாநிலத்தில் முதல் அறிவுசார் பயணம் 18.09.2026 மற்றும் 19.09.2026 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த அறிவுசார் கண்டுணர்வு பயணத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 23 பட்டு விவசாயிகள் மற்றும் பட்டுவளர்ச்சித் துறை அலுவலர்கள் பங்கேற்றனர். இப்பயணத்தில் திருமலகிரி இளம்புழு வளர்ப்பு மையம், சித்திபேட் பகுதிகளில் களப்பார்வை மற்றும் தொழில்நுட்ப கலந்துரையாடல் நடைபெற்றது. விவசாயிகள் அறிவியல் நீர்ப்பாசன முறைகள், பல்வேறு கம்போஸ்டிங் தொழில்நுட்பங்கள், Rain Gun பயன்பாடு, இயந்திரமயமாக்கப்பட்ட பட்டுவளர்ப்பு நடைமுறைகளின் செயல்திறன் மற்றும் விவசாயி–விவசாயி அறிவுப் பரிமாற்ற (Farmer-to-Farmer Extension) முறைகள் குறித்து நேரடியாக அறிந்து கொண்டனர். அதனை தொடர்ந்து, இன்று (19.09.2026), குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன்ராஜா இந்த அறிவுசார் பயணத்தில் பங்கேற்று தெலங்கானா மாநிலத்திற்குட்பட்ட தலகொண்டப்பள்ளி பகுதியில் உள்ள பட்டு விவசாயிகளுடன் கலந்துரையாடி, கள ஆய்வு மேற்கொண்டார். புதிய தொழில்நுட்ப முறை பின்னர், அமைச்சர் விவசாயிகளிடம் பேசுகையில், இப்பயணத்தில் கற்றுக்கொள்ளப்படும் சிறந்த நடைமுறைகளையும், நவீன முறையைப் பின்பற்றி பட்டு வளர்ப்பதும், புதிய தொழில்நுட்ப முறைகளையும், பிற விவசாயிகளிடமும் பகிர்ந்து, தமிழ்நாட்டில் பட்டுவளர்ச்சித் துறையின் வளர்ச்சிக்கு முன்னோடி விவசாயிகளாக செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார். தெலங்கானாவில் நடைபெற்ற அறிவுசார் கண்டுணர்வு பயணத்திற்கான அனைத்து ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளும் தெலங்கானா பட்டுவளர்ச்சித் துறையின் இணை இயக்குநர் லதா தலைமையிலான குழுவால் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டன. இப்பயணம் களப்பார்வையாக மட்டுமல்லாமல், தமிழ்நாடு மற்றும் தெலங்கானா மாநிலங்களின் பட்டுவளர்ச்சி தொழில்நுட்பங்கள், சாகுபடி மேலாண்மை மற்றும் விவசாயி மையப்படுத்தப்பட்ட விரிவாக்கப் பணிமுறைகளை ஒப்பிட்டு அறியும் அறிவுப் பரிமாற்ற தளமாகவும் அமைந்தது. இதன்மூலம் முன்னோடி விவசாயிகள் தங்கள் பகுதிகளில் சிறந்த நடைமுறைகளை பரப்பும் வகையில் செயல்பட வழிகாட்டுதல் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ்நாடு பட்டுவளர்ச்சித் துறை இணை இயக்குநர், பொன்மாரி, மண்டல இணை இயக்குநர், இளையராஜா, தமிழ்நாடு மற்றும் தெலங்கானா மாநில பட்டுவளர்ச்சித் துறை உயர் அலுவலர்கள் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-madan-raja-reviews-modern-methods-with-telangana-silk-farmers




