இறுதிப்போட்டி என்றாலே பரபரப்பு இருக்கும் அதுவும் கோப்பையை முடிவு செய்யும் ஆட்டம் என்றால், கடைசி பந்து வரை யார் பக்கம் ஆட்டம் திரும்பும் என்று கணிக்க முடியாது. ஆனால் சேப்பாக்கத்தில் நேற்று நடந்த TNPL 2026 இறுதிப்போட்டியில், அந்தக் கணக்கு வேறு மாதிரி எழுதப்பட்டது. முதலில் பேட்டிங்கில் 182 ரன்கள் குவித்த கோவை கிங்ஸ், அடுத்து மதுரை பாந்தர்ஸை வெறும் 98 ரன்களுக்கு சுருட்டி 84 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டாஸ் வென்ற கோவை கிங்ஸ் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும், பாலசுப்ரமணியம் சச்சின் - ஆண்ட்ரே சித்தார்த் இணை களத்தில் நிலைத்து நின்றது. TNPL 2026 Final இருவரும் சேர்ந்து 117 ரன்கள் குவித்து கோவையின் இன்னிங்ஸை வலுப்படுத்தினர். சச்சின் 39 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ஆண்ட்ரே சித்தார்த் தனது அதிரடியைத் தொடர்ந்தார். 47 பந்துகளில் 82 ரன்கள்! 7 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் விளாசிய ஆண்ட்ரே சித்தார்த், இறுதிப்போட்டியில் கோவை அணிக்கு தேவையான வேகத்தை கொடுத்தார். அவரது அதிரடி ஆட்டத்தின் காரணமாக கோவை கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. மதுரை தரப்பில் பி. சரவணன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 183 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மதுரைக்கு ஆரம்பமே அதிர்ச்சி. தொடக்க வீரர்கள் ராம் குமார், சித்தார்த் மகாதேவன் இருவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். என்.எஸ். சதுர்வேத் 28 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து போராடினார். ஹரி ராகவேந்திரா 24 ரன்களும், கேப்டன் அனிருத் 24 ரன்களும் எடுத்தனர். ஆனால், கோவையின் பந்துவீச்சுக்கு முன்பு அந்தப் போராட்டம் நீடிக்கவில்லை. ஆண்ட்ரே சித்தார்த்- ஆட்டநாயகன் விருது பெற்றவர் 14.2 ஓவர்களில் மதுரை அணி 98 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கோவை தரப்பில் மணிமாறன் சித்தார்த், ஷாருக்கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் மூலம் 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கோவை கிங்ஸ், TNPL 2026 சாம்பியன் ஆனது. இறுதிப்போட்டியில் 82 ரன்கள் விளாசிய ஆண்ட்ரே சித்தார்த் ஆட்டநாயகனாகவும், தொடரில் 428 ரன்கள் குவித்த பாலசுப்ரமணியம் சச்சின் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர். TNPL 2026: திருச்சியை திணறடித்த ஹாட்ரிக் விக்கெட். சாதனை படைத்த தீபன் லிங்கேஷ்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://sports.vikatan.com/cricket/kovai-kings-achieved-a-magnificent-victory-over-madurai-panthers-by-a-margin-of-84-runs




