சென்னை, தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு ஜல்லி மற்றும் கட் டுமான கற்கள் கொண்டு செல்வதற்கு 3 மாதங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குனர் பிரபு சங்கர் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் உள்கட்டமைப்பு மற்றும் வீட்டு வசதித்திட்டங்கள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. இதற்கு தேவையான ஜல்லி, கற்கள், கண்டாஸ், பாறைகள், எம்-சாண்ட், மெட்டல் ஜெல்லி, பாலாஸ்ட், மில் கற்கள் மற்றும் ஹேண்ட் சக்காய்ஸ் போன்ற கட்டுமானப் பொருட்களின் தேவை மாநிலத்துக்குள் அதிகரித்துள்ளது. சட்டவிரோத குவாரி இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து பெருமளவிலான கற்கள் மற்றும் ஜல்லிகள் அண்டை மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இதனால் மாநிலத்துக்குள் கட்டுமானப் பொருட்களின் தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை உயர்வு மற்றும் செயற்கையான தட்டுப்பாடு உருவாகிறது. இது பொது மற்றும் தனியார் உள்கட்டமைப்புத் திட்டங்களை நேரடியாக பாதிக்கிறது. மேலும், அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகள் மற்றும் மல்டி-ஆக்சில் வாகனங்களால் உள்ளூர் சாலைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. இந்த கனரக வாகனங்களால் சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளம் மற்றும் ஆந்திராவில் கற்களுக்கு தட்டுப்பாடு இல்லை. எனினும் தமிழகத்தில் இருந்து அதிகளவில் கற்கள் கொண்டு செல்லப்படுவதால், தேவைக்கும் வினியோகத்துக்கும் இடையே பெரிய இடைவெளி உருவாகிறது. இந்த இடைவெளி, சட்டவிரோத குவாரித் தொழிலுக்கும், அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி கற்களை வெட்டி எடுப்பதற்கும் வழிவகுக்கிறது. இது மாநிலத்தின் சுற்றுச்சூழல் மற்றும் சூழலியலுக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. கடுமையான நடவடிக்கை எனவே, இந்த சூழலை கருத்தில் கொண்டு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் தவிர, பிற மாநிலங்களுக்கு ஜல்லி, கற்கள் மற்றும் கட்டுமானப் பணிகளுக்கு பயன்படும் அனைத்துப் பொருட்களையும் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த தடையை மீறுபவர்கள் மீது தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த உத்தரவைச் செயல்படுத்துவதை உறுதி செய்யுமாறு அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எல்லைப் பகுதிகளில் உள்ள அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தடையை முறையாக அமல்படுத்த வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-transporting-gravel-and-construction-stones-from-tamil-nadu-to-other-states




