மதுரை ரெயிலில் சென்னை பெண்ணிடம் கொள்ளை போன 26 பவுன் நகையை, தம்பதியிடம் இருந்து 2 மணி நேரத்தில் போலீசார் மீட்டனர். சென்னை தாம்பரம் இரும்புலியூர் பாரதிதாசன் தெருவை சேர்ந்த சேது மனைவி மகாதேவி. இவர் தாம்பரம்-மதுரை கூடல் எக்ஸ்பிரசில் மானாமதுரை செல்வதற்காக சென்னையில் இருந்து வந்துள்ளார். இதற்காக சாதாரண டிக்கெட்டில் ரெயில் என்ஜினுக்கு அடுத்த பொதுப்பெட்டியில் பயணம் செய்தார். 26 பவுன் நகைகள் இதற்கிடையே அவர் கொண்டு வந்த சுமார் 26 பவுன் நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் வைத்திருந்த பையை காணவில்லை என்று கூடல்நகர் ரெயில்வே ஸ்டேசன் மாஸ்டரிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து கூடல்நகர் ஸ்டேசன் மாஸ்டர் இதுகுறித்து மதுரை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் ஏட்டு சத்தியமூர்த்தி ரெயில் மதுரை வந்தவுடன், குறிப்பிட்ட பெட்டியில் ஏறி சோதனை செய்தபோது நகைப்பை எதுவும் கிடைக்கவில்லை. பின்னர் மதுரை ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, வயதான தம்பதி மகாதேவியின் பையுடன் சென்னை-கன்னியாகுமரி சிறப்பு ரெயிலின் பொதுப்பெட்டியில் ஏறியது தெரியவந்தது. 2 மணி நேரத்தில் மீட்பு உடனடியாக விருதுநகர் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் சுடலை, ஏட்டு முருகன் மற்றும் தமிழக ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்குள் ரெயில் விருதுநகர் ரெயில் நிலையத்தை கடந்து விட்டது. பின்னர் விருதுநகர் ரெயில் நிலைய கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து அங்குள்ள ஆட்டோ டிரைவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில், சந்தேகத்துக்கு இடமான தம்பதி ஆட்டோவில் விருதுநகர் பஸ் நிலையம் சென்றது தெரியவந்தது. உடனடியாக ரெயில்வே போலீசார் விருதுநகர் பஸ் நிலையம் சென்றனர். அப்போது அங்கு நின்றிருந்த வயதான தம்பதியை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் சென்னை வண்ணாரப்பேட்டை ஜெ.ஜெ.நகரை சேர்ந்த காளியப்பன் (66), அவரது மனைவி சோலையம்மாள் (62) என்பதும், மகாதேவியின் நகைப்பையை திருடியதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து நகை மற்றும் ரொக்கப்பணம் வைத்திருந்த பையை போலீசார் 2 மணி நேரத்தில் மீட்டனர். இதுதொடர்பாக மதுரை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தம்பதியை கைது செய்து மதுரை 6-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். ஆனால், வயது முதிர்வு காரணமாக அவர்கள் 2 பேரையும் நீதிபதி ஜாமீனில் விடுவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-woman-robbed-of-26-pounds-of-jewellery-couple-arrested-on-train-police-recover-it-in-2-hours




