டெல்லியில் ஜந்தர் மந்தர் அருகே நடுரோட்டில் ஒரு பெண் படுத்துக்கொண்டு தமிழக முதல்வரும், நடிகருமான விஜய் தன்னைச் சந்தித்துக் கட்டிப்பிடிக்கும் வரை அங்கிருந்து செல்ல மாட்டேன் என்று கூறி ரகளையில் ஈடுபட்டார். வினோதமான இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோவை சையத் கமர் அலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் ரோட்டில் படுத்துக்கொண்டு ரகளை செய்து கொண்டிருந்த அந்தப் பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சரி செய்ய போலீஸார் முயன்றனர். ஆனால் அப்பெண் போலீஸார் கேட்டுக்கொண்ட பிறகும் அங்கிருந்து செல்லாமல் தொடர்ந்து சாலையில் அமர்ந்தும், படுத்தும் பிரச்னை பண்ணிக்கொண்டிருந்தார். தமிழக முதல்வர் விஜய் வந்து தன்னை கட்டிப்பிடிக்காதவரை இங்கிருந்து நகர்மாட்டேன் என்று கூறிக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில், இரண்டு பெண் போலீஸ் அதிகாரிகள் அவரை சாலையில் இருந்து அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது அந்த பெண் அதனை எதிர்த்து, "என்னைத் தொடாதே, இது என் உரிமை" என்று கூறினார். அதனை வீடியோ எடுத்தவர் அந்தப் பெண்ணிடம், சாலையில் இருந்து பயணிகளுக்கும் போலீஸ் அதிகாரிகளுக்கும் ஏன் அசௌகரியத்தை ஏற்படுத்துகிறாய் என்று அவரிடம் கேள்வி கேட்டார். இச்சம்பவம் தொடர்பான அப்பெண்ணின் இந்த வீடியோ ஆன்லைனில் வெளியானதைத் தொடர்ந்து அப்பெண்ணின் செயல் குறித்து பலரும் விமர்சித்துள்ளனர். ஒருவர் வெளியிட்டுள்ள பதிவில், ''அந்தப் பெண் விஜய்க்காகக் காத்திருக்க விரும்பினால், டெல்லிக்குப் பதிலாக சென்னையில் காத்திருந்திருக்கலாம்'' என்று கிண்டலாகப் பரிந்துரைத்தார். சிலர் இந்தப் பிரச்னையைக் கையாண்ட போலீஸாருக்காகத் தங்களது அனுதாபத்தைத் தெரிவித்தனர். வழக்கத்திற்கு மாறான முறையில் அந்தப் பெண் தமிழக முதல்வர் விஜய்யைச் சந்திக்க முயன்றதால் இந்தச் சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அவர் எதற்காக அந்தப் பகுதியில் இது போன்று நடந்து கொண்டார் என்பது குறித்து அல்லது அவர் மீது அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்பது குறித்து தெளிவான தகவல் கிடைக்கவில்லை. `தவெக அரசு வழக்கறிஞர் நியமனத்தில் ஊழல்; பல கோடி ரூபாய் Party Fundக்கு வாங்கப்பட்டதா?' ஆர்.எஸ்.பாரதி முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/trending/i-want-to-hug-thalapathy-vijay-young-woman-causes-scene-by-lying-down-on-delhi




