திருப்பதி, திருமலை-திருப்பதி மலைப்பாதையில் திருடப்பட்ட ஆஞ்சநேயர் சிலை 14 மணி நேரத்தில் மீட்கப்பட்டது. இதையடுத்து ஆகம முறைப்படி சிலை மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆஞ்சநேயர் சிலை திருட்டு திருமலையில் இருந்து திருப்பதி செல்லும் முதல் மலைச்சாலையின் 7-வது மைல் பகுதியில் பெரிய ஆஞ்சநேயர் சிலை உள்ளது. இதன் அருகே பல ஆண்டுகளுக்கு முன்பு பிரதிஷ்டை செய்து தினமும் பக்தர்கள் வழிபட்டு வந்த சுமார் ஒரு அடி உயரமுள்ள சிறிய கல்லால் ஆன ஆஞ்சநேயர் சிலை உள்ளது. இந்த சிலையை ஒருவர் நேற்று முன்தினம் அதி காலை திருடிச்சென்றார். இதையடுத்து கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில் அவர் ஜீப்பில் ஏறி வந்து 7-வது மைல் ஆஞ்சநேயர் சிலை அருகே சிறிதுநேரம் தங்கி, அதன் பிறகு அலிபிரி நடைபாதை தொடங்கும் பகுதி அருகே இறங்கியது தெரிய வந்தது. சிலை மீட்பு இதையடுத்து அவரை பிடிக்க திருப்பதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுப்பராயுடு உத்தரவின் பேரில் 20 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் ஓங்கோல் ரெயில் நிலையத்தில் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் தப்பி வந்த அந்த நபரை ரெயில்வே போலீசார் மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவர் விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஜஸ்வந்த்குமார் (வயது 35) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, திருப்பதிக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரிடம் இருந்து ஆஞ்சநேயர் சிலை மீட்கப்பட்டது. மீண்டும் பிரதிஷ்டை அதைத்தொடர்ந்து திருமலை- திருப்பதி தேவஸ்தான கூடுதல் செயல் அலுவலர் சி.எச். வெங்கையா சவுத்ரி ஆகம விதிகளின்படி மீண்டும் ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் என்று தெரிவித்தார். அதன்படி நேற்று காலை 8.30 மணி முதல் 9 மணி வரை சிலை இருந்த அதே இடத்தில் ஆகம விதிகளின்படி புண்யாவாசனம், ஜலசம்போக்ஷணம் உள்ளிட்ட சடங்குகள் செய்து, சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதுகுறித்து திருமலை - திருப்பதி தேவஸ்தான கூடுதல் செயல் அலுவலர் சி.எச். வெங்கையா சவுத்ரி கூறியதாவது:- நவீன தொழில்நுட்பம், கண்காணிப்பு கேமரா, தேவஸ்தான விழிப்புணர்வு பணியாளர்களின் எச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மாவட்ட காவல்துறையுடன் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைப்பு காரணமாக மிகக் குறுகிய நேரத்தில் சிலையை மீட்க முடிந்தது. உயர்தர கண்காணிப்பு கேமராக்கள் இத்தகைய சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க, மலைப்பாதையில் சாலையோர சிறிய கோவில்கள் மற்றும் சிலைகளுக்கு பாதுகாப்பு கிரில்கள் அமைப்பதுடன், உயர்தர கண்காணிப்பு கேமராக்களும் நிறுவப்படவுள்ளன. திருமலை மலைப்பாதையில் உள்ள சாலைகளில் பல தசாப்தங்களாக பக்தர்கள் பிரதிஷ்டை செய்த பல சாமி சிலைகள் உள்ளன். அவற்றின் புனிதத்தன்மையை அனைவரும் மதிக்க வேண்டும். சந்தேகத்திற்கிடமான எந்தவொரு நடவடிக்கையையும் கண்டால் உடனடியாக தேவஸ்தான கட்டணமில்லா உதவி எண் அல்லது விழிப்புணர்வு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பணபாகா லட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். போலீஸ் அதிகாரிகளுக்கு பாராட்டு இந்த வழக்கை விரைவாக விசாரித்து 14 மணி நேரத்தில் சிலையை மீட்ட அதிகாரிகள் மற்றும் போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எல்.சுப்பராயுடு மற்றும் விஜிலென்ஸ் அதிகாரி முரளி கிருஷ்ணா ஆகியோர் பாராட்டினர். கைது செய்யப்பட்ட ஜஸ்வந்த்குமார் பொறியியல் படிப்பை முடித்துள்ளார். தற்போது வேலை இன்றி உள்ளார். மேலும், கடந்த 3 ஆண்டுகளாக மன நலப் பிரச்சினையால் அவதிப்பட்டு குடும்பத்தினருடன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக விஜயநகரம் மாவட்டம் கோர்லமண்டலில் உள்ள புவனேஸ்வரி பீடம் ஆன்மிக அமைப்புடன் தொடர்பு கொண்டு அதன் ஆன்மிக வழிபாட்டு முறைகளை அவர் பின்பற்றி வந்துள்ளார். கடந்த 5-ந் தேதி நண்பர்களுடன் ஜஸ்வந்த்குமார் திருமலைக்கு வந்துள்ளார். அப்போது அங்குள்ள ஆஞ்சநேயர் சிலையை பார்த்ததும், அதை வீட்டிற்கு எடுத்துச் சென்று வழிபட வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு தனியாக அவர் மீண்டும் திருமலைக்கு வந்து தரிசனம் செய்துள்ளார். பின்னர் திரும்பும் வழியில் கோவில் அருகே ஜீப்பில் இருந்து இறங்கி சிலையை எடுத்துச் சென்றதாக அவர் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/devotional/tirumala-stolen-hanuman-idol-was-recovered-and-reinstalled-as-per-agama-traditions




