Fuld artikel
நாஞ்சில் நாட்டில் அருளும் தலங்களில் முக்கியமானது சுசீந்திரம். இங்குதான் சுவாமி தாணுமாலயனாகக் காட்சி அருள்கிறார். நாகர்கோவிலிலிருந்து கன்னியாகுமரி செல்லும் பாதையில், நாகர்கோவிலிலிருந்து 7 கி.மீ தொலைவிலும், கன்னியாகுமரியில் இருந்து 12 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது இந்தக் கோயில். 'சுசீ' என்றால் வடமொழியில் 'தூய்மை' என்று பொருள். பாவம் செய்த இந்திரன் இங்கு தூய்மை பெற்றதால் இந்த ஊர் சுசீந்திரம் என்றானது. இந்த ஆலயம் முற்காலத்தில் இந்திரனால் கட்டப்பட்டது என்கிறார்கள். 9-ம் நூற்றாண்டில் இதை மன்னர்கள் விரிவாக்கம் செய்தனர். ‘சுசிந்திரமுடையார் பரமசிவன்’ என்று கல்வெட்டு இங்குள்ள ஈசனைக் குறிக்கிறது. பின்னர் திருமலை நாயக்கர் மற்றும் திருவிதாங்கூர் மன்னர்களால் திருப்பணிகள் கண்டன என்கிறார்கள். இந்த ஆலயமே சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டாக அழகுற அமைந்துள்ளது என ஆய்வாளர்கள் வியக்கின்றனர். இங்குள்ள செண்பகராமன் மண்டபம், குலசேகர மண்டபம், ஊஞ்சல் மண்டபம், வசந்த மண்டபம், சித்திர சபை என எங்கு நோக்கினும் கல்லிலே கலை வண்ணம் காணலாம். இங்குள்ள இசைத் தூண்களும் உலகப் புகழ் கொண்டவை. சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் மூலவர் தாணுமாலயனை நள்ளிரவில் தேவேந்திரனே பூஜை செய்கிறான் என்பது நம்பிக்கை. இதனால் இங்கு இரவு அர்த்த ஜாம பூஜை கிடையாது. மாலையில் பூஜைப் பொருள்களை வைத்துவிட்டு கதவை மூடிவிடுவார்கள். முதல் நாள் மாலை பூஜித்த அர்ச்சகர் மறுநாள் காலை கதவைத் திறக்க மாட்டார். அவர் வைத்துவிட்டுச் சென்ற பொருள்கள் மாறியிருப்பதை அவர் காணக் கூடாது என்பது விதி. காலையில் திருக்கதவு திறப்பவர் அகம் கண்டது புறம் கூறேன் என்று உறுதி அளித்த பிறகே கதவு திறப்பார் என்பது இக்கோயிலில் உள்ள அதிசயம். கருவறையில் தாணுமாலய சுவாமி லிங்க வடிவில் தங்கக் கவசத்தில், திருமுகம் ஜொலிக்க அதன் மேல்புறம் 14 சந்திர பிறைகளும், அதன்மேல் ஆதிசேஷனும் குடை விரித்துக் காட்சி தருகிறார். இதுவே மும்மூர்த்திகளும் இணைந்த கோலம். அம்பிகை அறம் வளர்த்த அம்மன். தலதீர்த்தம் கோயிலுக்கு முன்புள்ள திருக்குளமான ஸ்ரீசக்ர அபிஷேக தீர்த்தம், பிரபஞ்ச தீர்த்தம் மற்றும் பழையாறு. இந்திரனோடு மருந்துவாழ் மலைக்கு வந்த ஐராவதம் தனது தந்ததால் கீறி உருவாக்கியதே கோட்டாறு எனப்படுகிறது. பாணாசுரனை அழிக்க அவதரித்த குமரியை மணக்க தாணு மூர்த்தி இங்கே தங்கியிருந்தார் என்பதும் கூடுதல் தகவல். இங்கு திருப்பணிக்காக நிலத்தைத் தோண்டும்போது அனுமன் சிலை கண்டெடுக்கப்பட்டது. 18 அடி உயரம் கொண்ட இச்சிலை ராமபிரானின் கருவறைக்கு எதிரில் அமைந்துள்ளது. கணேசினி என்ற திருநாமம் கொண்ட பெண்ணுரு பிள்ளையார் அமைந்திருப்பது இன்னொரு சிறப்பு. ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ள நவ கிரகங்களின் சிற்பம் மேற்கூரையில் உள்ளன. பள்ளிகொண்ட பெருமாள், கயிலாசநாதர், மூடு விநாயகர், துர்கை அம்மன், சங்கர நாராயணர், சண்டிகேஸ்வரர், நடராஜர் என பல சந்நிதிகள் கொண்ட ஆலயமிது. பிரதோஷ நாளில் ரிஷப வாகனத்தில் ஈசனும், கருட வாகனத்தில் பெருமாளும் பிராகாரத்தில் பவனி வருவது சிறப்பு. இது வேறெங்கும் நடைபெறாத அதிசயம். 15-ம் நூற்றாண்டில் சுசீந்திரம் அருகே தேரூர் என்ற ஊரில் வாழ்ந்த பள்ளியறை நாச்சியார் என்ற பெண் இக்கோயிலை வலம் வந்தபோதே ஈசனோடு கலந்தாள் என்று தலபுராணம் கூறுகிறது. அதன் தொடர்ச்சியாக மாசி மாதம் திருக்கல்யாண விழா நடைபெறுகிறது என்றும் கூறுகிறார்கள். தாணுமாலயன் கோயிலுக்கு வெளியே அமைந்துள்ளது முன்னுதித்த நங்கை கோயில். இங்கு அன்னை மஹிஷாசுர மர்த்தினியாக இருக்கிறாள். தட்சனின் யாகத்துக்குச் சென்று வந்த தாட்சாயினியை ஈசன் விலக்கி வைத்ததால், தெப்பக்குளத்துக்கு வடக்கே குடியேறினாள். அவளை `முன்னுதித்தவள் நீயே’ என தேவர்கள் வழிபட்டதால் முந்நூற்று நங்கை என்ற பெயர் கொண்டு இவ்வூர் காவல் தேவியாக விளங்கி வருகிறாள். இங்கு உள்ள பெருமைமிக்க ஆஞ்சநேயர் சந்நிதி உலகப் புகழ்பெற்றது. சகல நோய்களையும் தோஷங்களையும் நீக்கவல்ல இந்த ஆஞ்சநேயர் சிலை 18 அடி உயரம் கொண்டது. சுசீந்திரம் ஆலயத்துக்கு மேலக்கோபுர வாயிலுக்கான நிலத்தைத் தோண்டும்போது இந்த அனுமன் சிலை கிடைத்தது. 1929-ம் ஆண்டில் ராமபிரானின் கருவறைக்கு எதிரில் இந்தத் திருமேனி நிறுவப்பட்டது. விஸ்வரூப ஆஞ்சநேயர் என்று அழைக்கப்படும் இவருக்கு வெற்றிலை மாலை சாத்தி வழிபட்டால் காரிய ஸித்தி கிடைக்கும் என்பர். தலைக்கு மேல் அமைந்துள்ள இவரது வாலுக்கே முதல் விசேஷம் என்கிறார்கள். ஆஞ்சநேயருக்கு நல்லெண்ணெய், மஞ்சள், அரிசி மாவு, நெய், இளநீர், பன்னீர், பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், கரும்புச்சாறு, எலுமிச்சைச் சாறு, விபூதி, குங்குமம், களபம், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் அபிஷேகம் செய்து வழிபட்டால் ஒவ்வொரு அபிஷேகத்துக்கும் உண்டான விசேஷ பலன்களைப் பெறுவார்கள் என்கிறது தல வரலாறு. பல நூறு ஆண்டுகள் பழைமையான இந்த ஆஞ்சநேயர் திருமேனி 1740-ம் ஆண்டு அந்நியர்களின் படையெடுப்பின் போது இக்கோயில் சிலைகளைக் காப்பாற்றும் பொருட்டு மண்ணில் புதைக்கப்பட்டிருந்தது என்றும் அது மீண்டும் சுமார் 200 ஆண்டுகள் கழித்து பிரதிஷ்டை செய்யப்பட்டது என்றும் கூறுகிறார்கள். வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை சுசீந்திரம் சென்று தாணுமாலயனையும் விஸ்வரூப ஆஞ்சநேயரையும் தரிசனம் செய்துவாருங்கள். வாழ்க்கை வளமாகும் நலமாகும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Fuld artikel — se linket nedenfor



