சென்னை, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பண்டிட் ஜவஹர்லால் நேரு பெயர்கள் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் நீக்கப்பட்டதன் காரணத்தை தமிழ்நாடு அரசு விளக்க வேண்டும். இது குறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பேட்டில், இடஒதுக்கீடு மற்றும் சமூகநீதி வரலாற்றைக் கூறும் பகுதியில் இடம் பெற்றிருந்த தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், மற்றும் பண்டிட் ஜவஹர்லால் நேரு ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தன. இது கடும் கண்டனத்திற்கு உள்ளானது. கண்டனக் கணைகளின் தாக்கத்திற்குப் பிறகு, தற்பொழுது அத்தலைவர்களின் பெயர்கள் குறிப்பேட்டில் சேர்க்கப்படும் என அமைச்சர் வி.சம்பத்குமார் கூறியுள்ளார். எனினும், இதற்குக் காரணமானவர்கள் யார் என்ற கேள்விக்கு விடை அளிக்கப்படவில்லை. மதச்சார்பின்மை கொள்கை தந்தை பெரியார்,டாக்டர் அம்பேத்கர், நவீன இந்தியாவின் சிற்பி ஜவஹர்லால் நேரு ஆகியோர் மதச்சார்பின்மை கொள்கையில் உறுதியாக நின்றவர்கள் ஆவர். பிற்போக்குத் தனங்களை, இந்துத்துவ மதவெறி அரசியலை,வகுப்புவாதத்தை வாழ்நாள் முழுவதும் எதிர்த்துப் போராடியவர்கள் ஆவர். நவீன இந்தியாவை உருவாக்குவதில் மகத்தான பங்களிப்பை தத்தம் வழிகளில் செலுத்தியவர்கள் ஆவர். அவர்களை சமூக நீதிக்காகப் போராடியவர்கள் என்று மட்டுமே பார்த்து விட முடியாது. அதற்கும் மேலாக உண்மையான சுதந்திரம்,சமத்துவம்,சகோதரத்துவம் என்ற உன்னதக் கோட்பாட்டை இந்திய மண்ணில் நடைமுறைப்படுத்த வேண்டும் என அயராது பாடுபட்டவர்கள் ஆவர். அப்படிப்பட்ட மகத்தானத் தலைவர்களின் பெயர்கள் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பேட்டிலிருந்து நீக்கப்பட்டது என்பதை, தற்செயலானதாக, சாதாரண ஒரு தவறாக பார்க்க முடியாது. அதை ஒரு திட்டமிட்டச் செயலாகவே கருதவேண்டியுள்ளது. இந்த மாபெரும் தலைவர்களின் பெயர்கள் இந்துத்துவா சக்திகளுக்கு, மத அடிப்படை வாதிகளுக்கு,பிற்போக்குச் சக்திகளுக்கு எப்பொழுதுமே எட்டிக்காய் போன்று கசப்பதாகும். அவர்கள் மீது வெறுப்பு எனும் நெருப்பை இச்சக்திகள் தொடர்ந்து அள்ளி வீசுகின்றன. அத்தலைவர்களை இழிவு படுத்தி வருகின்றன. கடுமையான நடவடிக்கை எனவே, இந்நிலையில், இத்தலைவர்கள் பெயர்கள் ஏன் நீக்கப்பட்டன? இந்த நீக்கத்துக்குப் பின்னால் உள்ள சக்திகள் எவை? என்பவை குறித்து முழுமையான,நேர்மையான விசாரணையை தமிழ்நாடு அரசு நடத்த வேண்டும். இத்தலைவர்களின் பெயர் நீக்கத்திற்குக் காரணமானவர்களை கண்டறித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டுமென,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/removal-of-names-of-periyar-ambedkar-nehru-tamil-nadu-government-should-explain-the-reason-communist-party-of-india




