நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள காந்தமலை குன்றின் மேல் அமைந்துள்ளது பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். இங்குள்ள முருகப்பெருமான், பழனியை போலவே மேற்கு நோக்கி காட்சி தருகிறார். தல சிறப்பு ஞானப்பழம் கிடைக்காததால் பெற்றோரிடம் கோபம் கொண்ட முருகப்பெருமான், கயிலாயத்தில் இருந்து தென் திசை நோக்கி வந்தார். சிவபெருமானும், பார்வதி தேவியும் எவ்வளவு சமாதானம் செய்தும் முருகப்பெருமான் கேட்கவில்லை. முருகப்பெருமானை பின்தொடர்ந்த பார்வதி, 'மகனே நில்' என்று கூறி, கயிலாயத்துக்கு வரும்படி அழைத்தார். தாயின் சொல் கேட்டு நின்ற முருகப்பெருமான், தான் தனியாக இருக்க விரும்புவதாக கூறி அங்கிருந்து புறப்பட்டு பழனியில் குடிகொண்டார். பார்வதி தேவி 'மகனே நில்' என்று கூற, முருகப்பெருமான் நின்ற இடமே மோகனூர் என தல புராணம் கூறுகிறது. அதன் அடிப்படையிலேயே இங்கு முருகப்பெருமானுக்கு கோவில் எழுப்பப்பட்டுள்ளது. சிவன்-பார்வதியின் மகனான முருகப்பெருமான் நின்ற தலம் என்பதால் முதலில் மகனூர் என அழைக்கப்பட்டு, பின்னர் மருவி 'மோகனூர்' என மாறியதாக கூறப்படுகிறது. மேலும் சோழ மண்டலத்தின் மேற்கு எல்லையாகவும், சோழ மண்டலத்தின் முகம் போன்றும் அமைந்த காரணத்தால் இவ்வூர் 'முகவனூர்' என அழைக்கப்பட்டதாகவும் தெரிகிறது. கோவில் அமைப்பு கோவிலுக்கு செல்ல படிகளும், வாகனங்கள் மூலம் செல்ல வழிப்பாதையும் அமைக்கப்பட்டுள்ளன. கோவிலை அடைய மொத்தம் 39 படிகளை ஏறிச் செல்ல வேண்டும். இந்த 39 படிகளும், 12 ராசிகளையும், 27 நட்சத்திரங்களையும் குறிப்பதாக உள்ளன. மேற்கு திசை நோக்கி அருள்பாலிக்கும் முருகப் பெருமான், தன் வலது கையில் தண்டம் வைத்து, ஆவுடையார் மேல் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். இந்த தோற்றத்தை வேறு எந்த தலத்திலும் காண முடியாது. கோவில் முன்மண்டபத்தில் அருணகிரிநாதர் உள்ளார். ஆனி மாதம் மூலம் நட்சத்திரத்தில் இருவருக்கு ஜெயந்தி விழா நடத்தப்படுகிறது. கால பைரவர் தனிச் சன்னிதியில் காணப்படுகிறார். தேய்பிறை அஷ்டமியில் இவருக்கு 108 சங்காபிஷேகம் நடைபெறும். இக்கோவிலில் அரச விநாயகர், வல்லப விநாயகர், இடும்பன், சிவதுர்க்கை, விஸ்வநாதர், விசாலாட்சி, வீரபாகு, சூரிய பகவான், சனீஸ்வரர், சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள் ஆகியோரையும் தரிசிக்கலாம். வழிபாடுகள் மற்றும் திருவிழாக்கள் ஜாதகத்தில் நட்சத்திர தோஷம் உள்ளவர்கள், செவ்வாய் தோஷத்தால் திருமணத் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இங்குள்ள முருகப்பெருமானை மனதார வேண்டி வழிபட்டால் அவர்களின் பிரார்த்தனைகள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. செவ்வாய்க்கிழமைகளில் முருகனுக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றியும், அரளிப்பூ மாலை அணிவித்தும் பக்தர்கள் வேண்டிக் கொள்கிறார்கள். இந்த ஆலயத்தில் தைப்பூசம், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம் போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/devotional/aalaya-varalaru/mohanur-kandhamalai-balasubramania-swamy-temple




