Fuld artikel
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் ஹென்ரியேட்டா சுவான் லீவிட் ஒரு புகழ்பெற்ற அமெரிக்க வானியலாளர் ஆவார். பிரபஞ்சத்தின் அளவை துல்லியமாக அளவிடுவதற்கான "ஒளிர்மை-அலைவுநேரத் தொடர்பை" (Period-Luminosity relationship) கண்டறிந்ததன் மூலம் நவீன அண்டவியலுக்கு (Cosmology) மாபெரும் அடித்தளம் அமைத்தவர். லீவிடின் தந்தை ஜார்ஜ் ரோஸ்வெல் லீவிட் புகழ்பெற்ற காங்கிரிகேஷனல் திருச்சபை பாதிரியார். இவரது தாயார் பெயர் ஹென்ரியேட்டா ஸ்வான் கென்ட்ரிக். லீவிட் மாசசூசெட்ஸின் லான்காஸ்டர் நகரில் வசதியான, மத நல்லிணக்கமும் ஒழுக்கமும் மிக்க பாரம்பரியமிக்க குடும்பத்தில் 1868-ஆம் ஆண்டு ஜூலை 4 ல் பிறந்தார். லீவிட் குழந்தையாக இருந்தபோது, அவரது தந்தை ஓஹியோவில் உள்ள ஒரு தேவாலயத்தில் பாதிரியாராகப் பொறுப்பேற்றார். இதனால் இவர்களது குடும்பம் ஓஹியோ மாநிலத்தின் கிளீவ்லேண்ட் நகருக்குக் குடிபெயர்ந்தது. ஓஹியோவில் உள்ள பள்ளிகளில் தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை முடித்த லீவிட், 1885-ஆம் ஆண்டு ஓஹியோவில் உள்ள ஒபர்லின் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு அவர் கலை மற்றும் அறிவியல் சார்ந்த படிப்புகளைப் பயின்றார். அவரது குடும்பம் மீண்டும் மாசசூசெட்ஸ் திரும்பியதால், கேம்பிரிட்ஜில் உள்ள "பெண்களுக்கான சொசைட்டி ஃபார் தி காலேஜியேட் இன்ஸ்ட்ரக்ஷன் ஆப் வுமன்" நிறுவனத்தில் சேர்ந்தார். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் இந்த மகளிர் பிரிவு பின்னாளில் புகழ்பெற்ற ராட்க்ளிஃப் கல்லூரி என மாறியது. லீவிட் தனது கல்லூரிப் படிப்பின் இறுதி ஆண்டில் வானியல் பாடத்தை ஒரு விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுத்துப் படித்தார். இந்த ஒரு பாடம் அவரது வாழ்க்கையையே மாற்றியமைத்தது. கல்லூரிப் படிப்பை முடித்த சில காலத்தில் கடுமையான நோயால் பாதிக்கப்பட்ட லீவிட் தனது கேட்கும் திறனை முழுமையாக இழந்தார். எனினும், இந்த காது கேளாமை சவால் அவரது வானியல் ஆர்வத்தை ஒருபோதும் குறைக்கவில்லை. 1895-ஆம் ஆண்டு ஹார்வர்ட் கல்லூரி ஆய்வகத்தில் ஒரு தன்னார்வலராக இணைந்து தனது வரலாற்றுச் சிறப்புமிக்க ஆராய்ச்சிப் பயணத்தைத் தொடங்கினார். பெரிய தொலைநோக்கிகளை இயக்க ஹார்வர்ட் ஆய்வகம் பெண்களை அனுமதிக்காத அக்காலத்தில்,அதற்குப் பதிலாக, நட்சத்திரங்களின் புகைப்படத் தகடுகளை (Photographic plates) ஆராய்ந்து கணக்கிடும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள் "ஹார்வர்ட் கம்ப்யூட்டர்கள்" என்று அழைக்கப்பட்டனர். பூமியின் தென் அரைக்கோளத்தில் இருந்து எடுக்கப்பட்ட மகன்மதிக்கடல் விண்மீன் திரள் (Magellanic Clouds - பெரிய மற்றும் சிறிய மேகங்கள்) கூட்ட புகைப்படத் தகடுகளை ஆராய்ந்தார். லீவிட் அதில் மிக முக்கியமானவர். பிரபஞ்சத்தின் அளவையே மாற்றியமைத்த இந்த விஞ்ஞானிக்கு ஆரம்பத்தில் இந்தப் பணியில் ஒரு மணி நேரத்திற்கு வெறும் 25 சென்ட்டுகள் மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டது. இந்த விண்மீன் திரள்களுக்குள் மட்டும் அவர் சுமார் 1,777 மாறும் விண்மீன்களைக் கண்டறிந்து, அவற்றின் பிரகாச மாறுபாடுகளைக் குறித்துக் கொண்டார். லீவிட், இரவு வானத்தில் பிரகாசம் தொடர்ந்து மாறும் செஃபீட் மாறும் விண்மீன்களைப் (Cepheid variables) பற்றி ஆய்வு செய்தார். விண்வெளியில் உள்ள சில நட்சத்திரங்களின் பிரகாசம்ஒரே சீராக இருக்காது. அவை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் பிரகாசமாக மாறுவதும், பின்னர் மங்குவதுமாக இருக்கும். இந்த துடிப்புத் தன்மை கொண்ட நட்சத்திரங்களே செஃபீட் மாறும் விண்மீன்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த நட்சத்திரங்கள் அனைத்தும் ஒரே விண்மீன் திரளுக்குள் இருந்ததால், "இவை அனைத்தும் பூமியிலிருந்து தோராயமாக ஒரே தொலைவில்தான் இருக்க வேண்டும்" என்ற யூகத்தின் அடிப்படையில் நட்சத்திரத்தின் உண்மையான பிரகாசத்திற்கும், அது பிரகாசமாகி மங்குவதற்கு எடுத்துக் கொள்ளும் காலத்திற்கும் நேரடித் தொடர்பு இருப்பதைக் லீவிட் கண்டுபிடித்தார். நீண்ட காலம் (துடிப்பு நீளம்) எடுத்துக் கொள்ளும் நட்சத்திரங்கள் அதிக ஒளிர்திறன் (பிரகாசம்) கொண்டுள்ளன என்பதைக் கண்டறிந்தார். நட்சத்திரங்களின் இந்த துடிப்பு காலத்தை அளவிடுவதன் மூலம், பூமியிலிருந்து அவற்றின் உண்மையான தூரத்தை கணக்கிட முடியும் என்பதை நிரூபித்தார். லீவிட் கண்டறிந்த இந்த முறை (லீவிட் விதி) வானியலில் தொலைவுகளை அளக்கும் ஒரு "அளவுகோலாக" மாறியது. லீவிட் தனது வாழ்நாளில் 2,400-க்கும் மேற்பட்ட மாறும் விண்மீன்களைக் (Variable stars) கண்டறிந்து பட்டியலிட்டார். இது அக்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மொத்த மாறும் விண்மீன்களில் பாதியாகும். எட்வின் ஹப்பிள் (Edwin Hubble) போன்ற அறிவியலாளர்கள் லீவிட்டின் இந்த விதியைப் பயன்படுத்தியே, நம் பால்வெளி அண்டத்தைத் தாண்டி மற்ற விண்மீன் திரள்களும் இருப்பதை நிரூபித்தனர். மேலும், பிரபஞ்சம் விரிவடைந்து வருகிறது என்ற பெருவெடிப்பு (Big Bang) கோட்பாட்டின் அடிப்படையான கண்டுபிடிப்புக்கும் லீவிட்டின் ஆய்வே முக்கியக் காரணியாக அமைந்தது. வாழ்நாள் முழுவதும் வானியலுக்காக உழைத்த இவர் 1921-ஆம் ஆண்டு தனது 53-வது வயதில் புற்றுநோயால் காலமானார். இவரது மறைவுக்குப் பிறகே, லீவிட்டின் கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவம் முழுமையாக உலகிற்குத் தெரியவந்தது. பிரபஞ்சத்தின் எல்லையை அறிய உதவிய இவரைப் போற்றும் வகையில், சந்திரனில் உள்ள ஒரு பள்ளத்திற்கும், 5383 Leavitt என்ற சிறுகோளுக்கும் இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. 1924-ஆம் ஆண்டு ஸ்வீடிஷ் கணிதவியலாளர் கோஸ்டா மிட்டாக்-லெஃப்லர் (Gösta Mittag-Leffler), லீவிட்டை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்க விரும்பினார். ஆனால், அதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்பே லீவிட் காலமானதை அவர் அறிந்திருக்கவில்லை. நோபல் பரிசு மரணத்திற்குப் பின் வழங்கப்படுவதில்லை என்பதால் லீவிட்டிற்கு அப்பரிசு கிடைக்காமல் போனது. பிரபஞ்சம் எவ்வளவு வேகத்தில் விரிவடைகிறது என்பதைக் குறிக்கும் ஹப்பிள் மாறிலியைக் கணக்கிட, லீவிட்டின் விதியே தற்போதும் அடிப்படையாக உள்ளது. பெருவெடிப்பு கதிர்வீச்சுத் தரவுகளும், செஃபீட் விண்மீன்கள் தரும் நவீனத் தரவுகளும் பிரபஞ்ச விரிவடைதல் வேகத்தில் முரண்படுவதைக் காட்டும் லீவிட் விதி, புதிய இயற்பியல் விதிகளின் தேடலை வேகப்படுத்தி உள்ளது. செஃபீட்கள் மூலம் அண்டத்தின் துல்லியமான தூரங்களை அளவிட்ட பிறகே, பேரண்டத்தை முடுக்கும் விசித்திரமான இருண்ட ஆற்றல் கண்டறியப்பட்டது. லீவிட் விதியின் மூலம், நவீன தொலைநோக்கிகள் பிரபஞ்சத்தின் வயதை 13.8 பில்லியன் ஆண்டுகள் எனத் துல்லியமாக உறுதி செய்துள்ளன. வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...! Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Fuld artikel — se linket nedenfor



