சில வெற்றிகள் வெறும் பதக்கங்களாக மட்டும் இருப்பதில்லை. அவை ஒரு தலைமுறைக்கான நம்பிக்கையாக மாறுகின்றன. சில அம்புகள் இலக்கை மட்டும் துளைப்பதில்லை; வரலாற்றின் பக்கங்களையும் துளைத்து எழுதுகின்றன. அப்படியொரு வரலாற்றை 17 வயதிலேயே படைத்திருக்கிறார் இந்திய வில்வித்தை வீராங்கனை கும்கும் மோஹோத். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தனிநபர் ரிகர்வ் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம், இந்தப் பிரிவில் இறுதிப்போட்டியை எட்டிய முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றதுடன், பட்டத்தையும் வென்று புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளார் கும்கும் மோஹோத். அதுமட்டுமல்ல… அவரது இந்த வெற்றி, லாஸ் ஏஞ்சல்ஸ் 2028 ஒலிம்பிக் போட்டிகளுக்கான இந்தியாவின் தனிநபர் ஒதுக்கீட்டு இடத்தையும் உறுதி செய்துள்ளது. Kumkum Mohod இறுதிப்போட்டியில் கும்குமுக்கு எதிராக களமிறங்கியவர் தென்கொரியாவின் யேஜின் ஓ. போட்டியின் தொடக்கத்திலேயே கும்குமுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. முதல் செட்டை 29-27 என்ற கணக்கில் இழந்ததால், யேஜின் ஓ 2-0 என்ற முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டும் 29-29 என சமநிலையில் முடிந்தது. இதனால் தென்கொரிய வீராங்கனை 3-1 என முன்னிலையில் இருந்தார். ஒருபுறம் எதிரணி வீராங்கனை முன்னிலை… மறுபுறம் ஆசிய விளையாட்டுப் போட்டியின் இறுதிப்போட்டி… 17 வயது மட்டுமே ஆன இளம் வீராங்கனைக்கு அழுத்தம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. ஆனால் குங்கும் பின்வாங்கவில்லை, மூன்றாவது செட்டில் அவர் காட்டிய பதில், அவரது மனஉறுதியை வெளிப்படுத்தியது. தொடர்ச்சியாக மூன்று முறை 10 புள்ளிகளைத் துல்லியமாகத் தொட்டு, முழுமையாக 30 புள்ளிகளைப் பெற்றார். யேஜின் ஓ 29 புள்ளிகளுடன் முடித்த நிலையில், குங்கும் 3-3 என போட்டியை மீண்டும் சமநிலைக்கு கொண்டு வந்தார். அடுத்த செட்டில் மீண்டும் பதற்றம்! 28-27 என்ற கணக்கில் நான்காவது செட்டை யேஜின் ஓ கைப்பற்றினார். இதனால் 5-3 என்ற முன்னிலை. இன்னும் ஒரு செட்டை வென்றால் போதும்… தங்கம் தென்கொரியாவுக்குச் சென்றுவிடும் என்ற சூழல். Kumkum Mohod அந்த நேரத்தில் கும்குமுக்கு முன்னால் இருந்தது இரண்டு வழிகள் மட்டுமே — சரணடைவது அல்லது போராடுவது. அவர் இரண்டாவதையே தேர்ந்தெடுத்தார். ஐந்தாவது செட்டில் முதல் அம்பிலேயே 10 புள்ளிகளைத் தொட்ட கும்கும், அடுத்த இரண்டு அம்புகளிலும் 10 புள்ளிகளைப் பதிவு செய்தார். மூன்று அம்புகளிலும் துல்லியம். 30 புள்ளிகள். யேஜின் ஓ 28 புள்ளிகளில் முடிந்தார். போட்டி 5-5 என சமநிலைக்கு வந்தது. இப்போது தங்கத்தை தீர்மானிக்கப் போவது ஒரே ஒரு அம்பு. பல மணி நேரப் பயிற்சி… எண்ணற்ற போட்டிகள்… தோல்விகளிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள்… நாட்டின் எதிர்பார்ப்பு… அனைத்தும் அந்த ஒரு அம்பில் சுருங்கின. ஷூட்-ஆஃப். யேஜின் ஓ எய்த அம்பு 8 புள்ளிகளில் நின்றது. இப்போது கும்குமின் முறை, அவர் வில்லில் அம்பை பொருத்தி இலக்கை நோக்கிப் பார்த்தார். அழுத்தம் நிறைந்த அந்தத் தருணத்தில், 17 வயது இளம் வீராங்கனை தனது நிதானத்தை இழக்கவில்லை. அந்த ஒரே அம்பு குங்குமுக்கு தங்கத்தையும், இந்தியாவுக்கு வரலாற்றையும் பெற்றுத் தந்தது. 6-5 என்ற கணக்கில் வெற்றி. வெறும் ஒரு புள்ளி வித்தியாசம்… ஆனால் அந்த ஒரு புள்ளி, இந்திய வில்வித்தை வரலாற்றில் மிகப் பெரிய பக்கமாக மாறியது. இந்த வெற்றிக்கு முன்பே கும்குமின் பயணம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. தரவரிசைச் சுற்றில் 10-வது இடத்தில் தகுதி பெற்ற அவர், காலிறுதியில் தென்கொரியாவின் நடப்பு உலக சாம்பியனும் ஒலிம்பிக் குழு தங்கப் பதக்க வெற்றியாளருமான காங் சேயோங்கை வீழ்த்தினார். அதன் தொடர்ச்சியாக அரையிறுதியில் சீனாவின் ஜிங்யி ஜூவை 6-2 என்ற கணக்கில் வீழ்த்தினார். 2025 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்த ஜூவுக்கு எதிரான அந்த வெற்றியும் கும்குவின் நம்பிக்கையை மேலும் உயர்த்தியது. இறுதியில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் தனிநபர் ரிகர்வ் பிரிவில் இறுதிப்போட்டியை எட்டிய முதல் இந்தியப் பெண் என்ற சாதனையையும், அதே இறுதிப்போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற வரலாற்றையும் தனது பெயரில் எழுதினார். இந்த வெற்றியின் இன்னொரு முக்கியமான பக்கம் LA28. கும்கும் பெற்ற தங்கம், தனிப்பட்ட சாதனையாக மட்டுமின்றி, லாஸ் ஏஞ்சல்ஸ் 2028 ஒலிம்பிக் போட்டிகளுக்கான இந்தியாவின் தனிநபர் ஒதுக்கீட்டு இடத்தையும் உறுதி செய்துள்ளது. ஒரு சிறுமியின் கையில் இருந்த வில்… ஒரு இலக்கை நோக்கிய பார்வை… அழுத்தத்துக்கு நடுவிலும் தளராத மனம்… இறுதியில் 10 புள்ளிகளைத் தொட்ட ஒரே ஒரு அம்பு, அந்த அம்பு தங்கத்தை மட்டும் வெல்லவில்லை. “இந்தியப் பெண்களால் முடியுமா?” என்ற கேள்விக்கு, 17 வயது கும்கும் மோஹோத் தனது வில்லால் பதில் சொல்லியிருக்கிறார். ஒரு பதக்கம் கழுத்தில் மின்னுகிறது. ஒரு ஒதுக்கீட்டு இடம் இந்தியாவின் எதிர்காலத்தை நோக்கி கதவைத் திறக்கிறது. ஆனால் எல்லாவற்றையும் விட முக்கியமாக, ஒரு இளம் வீராங்கனையின் பெயர் இன்று வரலாற்றில் பதிந்திருக்கிறது. Asian Games: குத்துச் சண்டையில் ஆதிக்கம், ஹாக்கியில் வரலாற்றுத் தங்கம் - இந்தியாவின் பதக்க வேட்டை! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://sports.vikatan.com/asian-games-17-year-old-kumkum-mohod-wins-historic-gold-in-archery




