ஒரு கொலை. அதை மறைக்கத் தமிழ் சினிமா பாணியில் போடப்பட்ட திட்டம். ஆனால், வெறும் 5 மணி நேரத்தில் அத்தனை ‘ஸ்கெட்சையும்’ காலி செய்து, கொலையாளிகளைச் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் தள்ளியிருக்கிறது காவல்துறை. சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள சூரக்குடியில் 70 வயதான பூச்சியம்மாள் என்ற மூதாட்டி கொடூரமாகக் கொல்லப்பட்டு, உடல் மீது சர்க்கரை தூவப்பட்டுக் கிடந்த சம்பவம், தமிழ்நாடு முழுவதையும் அதிர வைத்திருக்கிறது. தடம் தெரியாமல் தப்பிக்க நினைத்த ஜோடியை சில மணி நேரங்களில் தட்டித் தூக்கிய பின்னணி குறித்து எஸ்.வி.மங்கலம் காவல்துறையினர் நம்மிடம் விரிவாகப் பகிர்ந்துகொண்டனர். ``சூரக்குடியைச் சேர்ந்த சாமுண்டீஸ்வரியோட கணவர் ஒரு வருஷத்துக்கு முன்னாடி இறந்துட்டாரு. ரெண்டு குழந்தைகளோட சென்னையில அவர் தங்கியிருந்தப்போ, சரவணன் என்பவரோட பழக்கம் ஏற்பட்டிருக்கு. ரெண்டு பேரும் திருவிழாவுக்காக ஊருக்கு வந்தப்போதான் அதே ஊரைச் சேர்ந்த, தனது உறவினரான பூச்சியம்மாள் நகையைப் பார்த்து கணக்கு போட்டிருக்காங்க. பூச்சியம்மாள் எப்போதும் தங்க நகை அணிந்திருக்கும் பழக்கம் உள்ளவர். கொலை செய்யப்பட்ட பூச்சியம்மாள் சரவணனுக்கு இருந்த கடனை அடைக்க மூதாட்டியைக் கொன்றுவிட்டு நகையைக் கொள்ளையடிக்க முடிவு பண்ணியிருக்காங்க. முதல்ல தயங்கினாலும், சரவணனின் ஆசை வார்த்தையில சாமுண்டீஸ்வரியும் சம்மதிச்சிருக்காங்க. கடந்த சனிக்கிழமை மாலை, உறவினர் வீட்டுக்குப் போறதா சொல்லிட்டுப்போன பூச்சியம்மாளை, சாமுண்டீஸ்வரி ஆசையா பேசித் தன் வீட்டுக்கு கூட்டிட்டுப் போயிருக்காங்க. வீட்டுக்குள்ள வந்ததும், சரவணனும் சாமுண்டீஸ்வரியும் சேர்ந்து மூதாட்டியின் மூச்சு அடங்குற வரைக்கும் போர்வையால முகத்தை அமுக்கிக் கொடூரமா கொலை பண்ணியிருக்காங்க. மூச்சுப் பேச்சில்லாம சுருண்டு விழுந்ததும், அவங்க உடம்பில் இருந்த 10.5 சவரன் தங்க நகைகளைக் கழட்டிக்கிட்டு, சடலத்தை ஒரு சாக்குல கட்டி எம்.சூரக்குடி அரசுப் பள்ளி பக்கத்துல இருக்குற கால்வாயில வீசியிருக்காங்க. செல்போனை ஊரணியிலும், செருப்பை வயல் பகுதியிலும் வீசி இருக்காங்க. அதன் பின், காரில் காளாப்பூர் வரை சென்று விட்டு, மீண்டும் ஊருக்குள் வந்து மற்றவர்களுடன் சேர்ந்து பூச்சியம்மாளை தேடியிருக்காங்க. சடலத்தின்மீது சர்க்கரை. பகீர் வாக்குமூலம்! ஞாயிற்றுக்கிழமை காலையில சடலத்தைக் கைப்பற்றியபோது எங்களுக்குப் பெரிய அதிர்ச்சி. மூதாட்டியோட உடல் முழுக்க கிலோ கணக்குல சர்க்கரையைத் தூவியிருந்தாங்க. 'எதுக்காக இந்த சர்க்கரை?'னு கைது செய்யப்பட்ட சரவணன்கிட்ட விசாரிச்சப்போதான் அந்த பகீர் உண்மை வெளிவந்துச்சு. 'சமீபத்துல ஒரு தமிழ் சினிமா படம் பார்த்தேன். அதுல கொலையைப் பண்ணிட்டு பிணத்தைச் சுத்தி சர்க்கரையைத் தூவி விடுவாங்க. சர்க்கரை இருந்தா எறும்புகளும் பூச்சிகளும் வந்து மொய்க்கும். அப்படி மொய்க்கும்போது நாங்க விட்டுட்டுப் போன கால்தடங்கள், கைரேகைகள் எல்லாத்தையும் எறும்புகளே அழிச்சிடும்னு நம்பினேன். அதுமட்டுமல்லாம சர்க்கரை இருந்தா பிணம் சீக்கிரமா அழுகிடும், துர்நாற்றமும் வராதுனு நினைச்சேன்.' அப்படின்னு சொல்லி அதிர வைச்சாரு. சரவணன், சாமுண்டீஸ்வரி சினிமா லாஜிக் நிஜத்துக்கு செட் ஆகாதுங்கிறதும், எறும்புகளால தடயவியல் சான்றுகளை அழிக்க முடியாதுங்கிற அறிவியல் உண்மையும் அந்த ஜோடிக்குத் தெரியலை. ஐந்து மணி நேரத்துல 'ஸ்கெட்ச்' காலி! சடலம் கிடைச்சவுடனே மோப்ப நாய், தடயவியல் நிபுணர்களைக் களத்துல இறக்கினோம். இன்னொரு பக்கம், மூதாட்டி வீட்டை விட்டு வெளியேறியதில் இருந்து கால்வாய் வரைக்கும் இருந்த சிசிடிவி கேமராக்களை அலசினோம். அவ்வளவுதான். சடலம் கிடைச்ச 5 மணி நேரத்துக்குள்ள ரெண்டு பேரையும் மடக்கிப் பிடிச்சோம். நாங்க பிடிச்சுடுவோம்னு பயந்து தங்களோட செல்போன், செருப்புகளை வெவ்வேறு இடங்களில் வீசி எறிஞ்சு திசை திருப்பப் பார்த்திருக்காங்க. ஆனா, சாமுண்டீஸ்வரியோட கார்ல மறைச்சு வச்சிருந்த 10.5 சவரன் நகைகளையும் மீட்டுட்டோம்…” என்றனர். சினிமா வித்தையைக் காட்டி தப்ப நினைத்த ஜோடி, தற்போது சிறைக் கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கிறது முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/crime/police-arrested-a-couple-in-sivagangai-elder-woman-murder-case



