சென்னை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; "சேலம் மாவட்டம், கெங்கவல்லிக்கு அருகேயிருக்கும் ஒதியத்தூர் பகுதியில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலையைத் திறப்பது தொடர்பாக இரு தரப்பினரிடையே எழுந்திருக்கும் பதற்றச்சூழலும், மோதல்போக்கும் வேதனை அளிக்கிறது. அண்ணல் அம்பேத்கர் அவர்கள் கால் மேல் கால் போட்டு இருப்பதாய் வடிவமைக்கப்பட்டு இருப்பதாலேயே அச்சிலையைத் திறக்க எதிர்ப்புத் தெரிவிப்பது அறிவிலித்தனத்தின் உச்சமாகும். தமிழ்ப்பேரினம் எண்ணற்ற சிக்கல்களையும், உரிமை இழப்புகளையும், வளச்சுரண்டலையும், அடையாள அழிப்பையும், வரலாற்றுத் திரிபையும் நாள்தோறும் எதிர்கொண்டு வரும் தற்காலச்சூழலிலும், ஒன்றுபட்டு ஓரினமாய் நிற்காது, சாதியின் பெயரால் பிளவுப்பட்டு நிற்பதும், தன்னினப்பகை கொண்டு வீழ்வதும் சமகாலத்தில் நிகழும் பேரவலமாகும். அண்ணல் அம்பேத்கர் அவர்கள் ஒரு சாதிக்கானவர் இல்லை; ஒட்டுமொத்தச் சமூகத்துக்குமானவர்; அறிவாசான் அம்பேத்கர் அவர்கள் உலகம் பார்த்து வியந்த மாபெரும் கல்வியாளர்; சமூக விடுதலைக்காகப் பாடுபட்ட ஒப்பற்றப் புரட்சியாளர். அவரை ஒடுக்குமுறைக்கு எதிரானப் பொதுக்குறியீடாகவும், அறிவுலக மாமேதைகளில் உச்சம் தொட்டப் பேராசானாகவுமே பார்க்க வேண்டும். அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பட்டியல் பிரிவைச் சேர்ந்த மக்களுக்கு மட்டுமாகப் போராடவில்லை. ஒட்டுமொத்த மக்களுக்குமாகத்தான் பாடுபட்டார். இடைநிலைச்சமூகங்களுக்கென வகுப்புவாரிப்பிரதிநிதித்துவப் பங்கீட்டில் இருக்கும், ‘இதர பிற்படுத்தப்பட்டப் பிரிவினர்’ எனும் வகைப்பாட்டை உருவாக்கித் தந்தது அம்பேத்கர்தான். சட்ட அமைச்சர் பதவியைத் துறந்தபோது, பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன்களுக்கென ஆணையம் அமைக்க வில்லை என்பதைப் பதவி விலகலுக்கானக் காரணங்களில் ஒன்றாகக் குறிப்பட்டவரும் அம்பேத்கர்தான். வெள்ளைய ஆட்சிக்காலத்தில் குறிப்பிட்ட சமூகங்களைக் குற்றப்பரம்பரையினர் என அடையாளப்படுத்தி, அவர்களுக்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டபோது அதனைக் கடுமையாக எதிர்த்தவர்களில் அம்பேத்கரும் முதன்மையானவர். இதுமட்டுமல்லாது, தொழிலாளர்களுக்கு எட்டுமணி நேரம்தான் வேலை எனச் சட்டம் கொண்டு வந்தவரும், மகப்பேறு காலத்தில் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை எனச் சட்டமியற்றியவரும் அம்பேத்கர்தான். அவர் ஆதிக்குடிகளுக்காக மட்டும் போராடவில்லை; பிற்படுத்தப்பட்ட மக்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள், பழங்குடிகள், விளிம்புநிலை மக்கள், பெண்கள் என சமூகத்தின் அத்தனைத் தரப்பினரின் நலன்களுக்காகவும் தனது வாழ்நாள் முழுமைக்கும் பாடுபட்டப் பெருந்தகை அண்ணல் அம்பேத்கர் ஆவார். எந்த மக்களுக்காக அவர் பாடுபட்டாரோ, அந்த மக்களில் ஒரு பகுதியினரே அவரைத் தவறாகப் புரிந்துகொண்டு, அவருக்கு எதிராக வரிந்துகட்டிக் கொண்டு இன்றைக்கு நிற்பதெல்லாம் வரலாற்றுத்துயரமாகும். 2021ஆம் ஆண்டு ஓதியத்தூர் பகுதியில் அமைக்கப்பட்ட அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலை 5 ஆண்டுகளாகத் திறக்கப்படாது கிடப்பில் போடப்பட்டது வெட்கக்கேடானது. சமூக நீதியென்று வாய்கிழியப் பேசும் திமுகவின் ஆட்சியில் அம்பேத்கரின் சிலையைத் திறக்கக்கூட வழிசெய்யாது வாக்கரசியலுக்காக சமரசம் செய்துகொண்டது மோசடித்தனமாகும். அண்ணல் அம்பேத்கர் அவர்களைக் கொள்கைத் தலைவரெனக் கூறிக் கொள்ளும் முதல்வர் விஜய் அவர்கள் தலைமையிலான தவெகவின் ஆட்சியிலும், அச்சிலையை முறையாகத் திறக்கவும், சமூகப் பதற்றத்தைத் தணிக்கவும் நடவடிக்கைகளை எடுக்காது, சிக்கலை மேலும் பெரிதாக்குவது கடும் கண்டனத்திற்குரியது. சாதியவாதத்தாலும், புரிதலின்மையாலும் எழுந்திருக்கும் இச்சிக்கலைக்கூட தீர்க்க இயலாது திராணியற்றுப் போய்விட்டதா தவெக அரசு? இதுதான் கொள்கைத் தலைவர் மீது நீங்கள் கொண்டிருக்கும் பற்றா? கேலிக்கூத்து! ஆகவே, சேலம் மாவட்டம், ஒதியத்தூர் பகுதியில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலையைத் திறக்க வேண்டுமெனவும், தேவையற்ற சமூகப்பதற்றமும், மோதலும் ஏற்படுவதை முற்றாகத் தடுத்து, ஓர்மையும், நல்லிணக்கமும் நிலவுவதை உறுதிசெய்ய வேண்டுமெனவும் தவெக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/salem-the-government-must-resolve-the-issues-surrounding-the-unveiling-of-the-ambedkar-statue-seeman




