சென்னை, காவிரி கழிவுநீர்க் கால்வாயாக மாறுவது ஏன்? என்று வேல்முருகன் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- சுத்திகரிப்புக்கான கட்டமைப்பு இல்லை பெங்களூருக்குக் காவிரி மற்றும் ஆழ்துளைக் கிணறுகள் உள்ளிட்ட ஆதாரங்களிலிருந்து நாளொன்றுக்கு சுமார் 2,825 மில்லியன் லிட்டர் தண்ணீர் கிடைக்கிறது. அதே நகரில் நாளொன்றுக்கு சுமார் 2,580 மில்லியன் லிட்டர் கழிவுநீர் உற்பத்தியாகிறது. ஆனால், பெங்களூரு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் கீழ் செயல்படும் 37 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் தற்போதைய சுத்திகரிப்புத் திறன் 1,364.5 மில்லியன் லிட்டர் மட்டுமே. இதனால் நாளொன்றுக்கு 1,215.5 மில்லியன் லிட்டர் அளவுக்குச் சுத்திகரிப்புத் திறன் பற்றாக்குறை இருப்பது கர்நாடக அரசின் அதிகாரிகளாலேயே ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இதன் பொருள், பெங்களூரில் உருவாகும் கழிவுநீரில் பெரும் பகுதியைச் சுத்திகரிப்பதற்குத் தேவையான கட்டமைப்பு இன்னும் முழுமையாக இல்லை என்பதுதான். குடிநீராகப் பயன்படுத்தப்படும் நதியில் கழிவுநீர் கலப்பது வெறும் சுற்றுச்சூழல் பிரச்சினையல்ல. அது ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் உயிருடன் தொடர்புடைய தலையாய பிரச்சினை. காவிரி கர்நாடகத்தின் வழியாக மட்டுமே ஓடும் நதியல்ல. அதன் நீரை நம்பித் தமிழ்நாட்டில் குடிநீர் பெறும் கோடிக்கணக்கான மக்கள் உள்ளனர். பாசனம் செய்யும் விவசாயிகள் உள்ளனர். தலைமுறை தலைமுறையாகத் தமிழ்நாட்டின் வாழ்வாதாரம் அதனுடன் பின்னிப் பிணைந்திருக்கிறது. தண்ணீரின் தரத்தை பாதுகாக்க வேண்டும் ஒருபுறம் காவிரி நீர்ப் பங்கீட்டிற்காகத் தமிழ்நாடு தொடர் உரிமைப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது. மறுபுறம், அதே நதியின் நீர்த் தரம் பாழாகும் அளவுக்குக் கழிவுநீர் மேலாண்மையில் இத்தகைய மெத்தனமும் குறைபாடும் நீடிப்பது எந்த வகையில் நியாயம்? தண்ணீரின் அளவை உறுதி செய்வதுடன் நின்றுவிடாமல், அதன் தரத்தையும் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். சுத்திகரிக்கப்படாதக் கழிவுநீர், நீர்நிலைகளில் கலப்பதைக் கர்நாடக அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். அதே வேளையில், இதில் தமிழ்நாடு அரசுக்கும் மிகப்பெரிய தலையாய கடமை உண்டு. கர்நாடகத்திலிருந்து தமிழ்நாட்டிற்குள் நுழையும் எல்லையான பிலிகுண்டுலு பகுதியில், காவிரியின் நீர்த் தரம் குறித்து தமிழ்நாடு அரசு தனது மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் தினசரி ஆய்வுகளைத் தீவிரப்படுத்த வேண்டும். நச்சுத் தன்மையோ கழிவுநீரோ கலந்திருப்பது கண்டறியப்பட்டால், உடனடியாக காவிரி நீர் மேலாண்மை ஆணையம், ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்று கர்நாடகத்திற்கு எதிராகக் கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். நீரின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும் தமிழக மக்களின் உயிர் மற்றும் உடல்நலம் சார்ந்த இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு வேடிக்கை பார்க்காமல், அழுத்தமான எதிர்வினையாற்றுவதே தனது தலையாய கடமை என்பதை உணர வேண்டும். காவிரி வெறும் நீரோட்டம் அல்ல. அது தமிழ்நாட்டின் குடிநீர், விவசாயம், உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் அனைத்தையும் சுமந்து வரும் உயிர்நாடி. அந்த உயிர்நாடியை நஞ்சாக மாற விடாமல் தடுத்து, எல்லையோர நீரின் தரத்தை ஆய்வுக்குட்படுத்தி, அதன் உண்மைத் தன்மையை மாதந்தோறும் பொதுவெளியில் வெளிப்படையாக தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/why-is-the-cauvery-turning-into-a-sewage-canal-velmurugan




