தென்காசின்னு சொன்னாலே நம்ம நினைவுக்கு வர்றது முதல்ல குற்றாலம்தான். அருவி, சாரல், பசுமைன்னு இயற்கையோட அழகை அள்ளிக் கொடுக்கிற குற்றாலத்துக்கு சீசன் நேரத்துல கூட்டமும் அலைமோதும். ஆனா, தென்காசியோட அழகு குற்றாலத்தோட மட்டும் முடிஞ்சிடாது. மாவட்டத்தோட பல பகுதிகள்ல இயற்கையையும் சினிமா நினைவுகளையும் சேர்த்து வைத்திருக்கிற சின்னச் சின்ன அழகான இடங்கள் நிறைய இருக்கு. அப்படி இப்போ கொஞ்சம் கொஞ்சமா கவனம் பெற ஆரம்பிச்சிருக்கிற இடம்தான் கீழப்புலியூர்ல இருக்கிற ‘அந்நியன் பாறை’. கீழப்புலியூர் பக்கம் போனாலே ஒரு பக்கம் பசுமையா விரிஞ்சு கிடக்கிற வயல்வெளி, இன்னொரு பக்கம் அமைதியா கிடக்கிற குளம், இதுக்கு நடுவுல கிராமத்து இயற்கைச் சூழல் நம்மள அப்படியே வரவேற்கும். அந்த இயற்கைக் காட்சிகளுக்கு நடுவுல கம்பீரமா நின்னுட்டிருக்கும் அந்தப் பாறைதான் அந்நியன் பாறை. அந்நியன் பாறை இதை வெறும் பாறைன்னு சொல்லிட்டு கடந்து போயிட முடியாது. இந்தப் பாறைக்கும் சினிமாவுக்கும் ஒரு சுவாரஸ்யமான தொடர்பு இருக்கு. பாறையில சினிமா பிரபலங்களோட ஓவியங்கள் வரையப்பட்டிருக்குது. அதுமட்டுமல்லாம, ‘அந்நியன்’ திரைப்படத்தோட ஒரு பாடல் காட்சியிலும் இந்தப் பகுதி இடம்பெற்றிருக்கிறது. அதுக்குப் பிறகுதான் இந்தப் பாறை ‘அந்நியன் பாறை’ன்னு அழைக்கப்பட ஆரம்பிச்சிருக்கு. சினிமா ரசிகர்களுக்கு இந்தத் தகவல் ஆர்வத்தை ஏற்படுத்தும். அதே நேரத்துல, இந்தப் பகுதி மக்களுக்கும் இந்தப் பாறை அவங்களோட ஊருக்கே ஒரு முக்கியமான அடையாளமா மாறியிருக்கு. அந்நியன் பாறை இப்போ பாறையும் புதுப்பிக்கப்பட்டு புதுப் பொலிவோட காட்சியளிக்குது. பழைய நினைவுகளை அப்படியே விட்டுட்டு, அதுக்கு ஒரு புது தோற்றம் கொடுத்திருக்கிற மாதிரி இருக்கு. ஆனா, இந்த இடத்தோட அழகு அந்தப் பாறையோட மட்டும் நின்னுடாது. பாறையைச் சுற்றியிருக்கிற இயற்கைக் காட்சிகள்தான் இன்னும் அதிகமா கவனத்தை ஈர்க்குது. கண்ணுக்கு எட்டின தூரம் வரைக்கும் பசுமையான வயல்வெளி, பக்கத்துல பரந்து கிடக்கிற குளம், இதமான காற்று. நகரத்தோட பரபரப்புக்கு முற்றிலும் மாறான ஒரு அமைதியான சூழல் இங்கே கிடைக்குது. இயற்கையை ரசிக்கணும்னு சொன்னாலே எங்கயாவது தூரமா போகணும்னு அவசியமில்லைன்னு இந்த இடம் நமக்கு உணர்த்துது. எந்த அவசரமும் இல்லாம வயல்வெளியைப் பார்த்துக்கிட்டு, குளக்கரையில காற்றை ரசிச்சுக்கிட்டு கொஞ்ச நேரம் இருந்தாலே போதும். மனசுக்கு ஒரு சின்ன ரிலாக்ஸேஷன் கிடைச்ச மாதிரி இருக்கும். அந்நியன் பாறையைப் பார்த்துட்டு அப்படியே திரும்பிடாம, பக்கத்துல இருக்கிற சுந்தரபாண்டியபுரம் பக்கமும் ஒரு ரவுண்டு போகலாம். குறிப்பா, சூரியகாந்தி பூக்கள் பூத்துக் குலுங்குற காலத்துல இந்தப் பகுதியோட அழகு இன்னும் கொஞ்சம் கூடிடும். மஞ்சள் நிறத்துல வரிசையா விரிஞ்சு கிடக்கிற சூரியகாந்தி வயல்கள் பார்ப்பதற்கே அழகான காட்சியா மாறிடும். அந்நியன் பாறை பாறை, குளம், வயல்வெளி, சூரியகாந்தி பூக்கள்னு எல்லாமே ஒன்றோட ஒன்று சேரும்போது, போட்டோ எடுக்கிறவங்களுக்கு வேற எதுவுமே தேவையில்லை. இயற்கையே ஓர் அழகான பேக்டிராப்பா மாறிடுது. இதனால சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்லாம புகைப்படக் கலைஞர்களோட கவனமும் இந்தப் பகுதிகள் மீது திரும்ப ஆரம்பிச்சிருக்கு. இயற்கையான லொகேஷன்களைத் தேடுற சினிமா படப்பிடிப்பு குழுக்களுக்கும் இந்தப் பகுதிகள் நல்ல வாய்ப்புள்ள இடங்களா மாறிட்டு வருது. இப்போ சமூக வலைதளங்களோட காலம். பெரிய சுற்றுலாத் தலங்களுக்குத்தான் கவனம் கிடைக்கணும்னு அவசியமே இல்ல. உள்ளூர் மக்களுக்கு பல வருஷமா தெரிஞ்சிருந்த ஒரு சின்ன இடம்கூட, ஒரு நல்ல போட்டோ மூலமோ வீடியோ மூலமோ ஒரே நாள்ல பல பேரோட கவனத்துக்கு வந்துடும். அந்த வகையிலதான் அந்நியன் பாறையும் இப்போ புதுசா கவனம் பெற ஆரம்பிச்சிருக்கு. இது எதிர்காலத்துல ஒரு முக்கியமான சுற்றுலாத் தலமா மாறுமா? அதைக் காலம்தான் சொல்லணும். ஆனா, அதுக்கு முன்னாடியே இந்த இடத்தோட இயற்கைச் சூழலைப் பாதுகாக்க வேண்டியது ரொம்ப முக்கியம். சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமானால் குப்பைகள் சேராம பார்த்துக்கணும். பாறையில இருக்கிற ஓவியங்கள் சேதமடையாம பாதுகாக்கணும். அதேபோல குளம், வயல்வெளி என இந்தப் பகுதியோட இயற்கைத் தன்மையும் கெட்டுப் போகாம பார்த்துக்கணும். ஏன்னா, ஒரு இடத்தோட அழகு நம்மள ஈர்க்கிறதோட முடிஞ்சிடக் கூடாது. அந்த அழகை அடுத்த தலைமுறையும் ரசிக்கிற மாதிரி பாதுகாத்து வைக்கிறதுதான் அதோட உண்மையான மதிப்பு. அதனால அடுத்த முறை தென்காசி போகும்போது குற்றாலத்தை மட்டும் சுற்றிப் பார்த்துட்டு வராம, கொஞ்சம் ரூட்டை மாத்திப் பாருங்க. சினிமா நினைவுகள், கம்பீரமா நின்னுக்கிட்டிருக்கிற பாறை, பசுமையான வயல்வெளிகள், அமைதியான குளம், மஞ்சள் நிறத்துல பூத்துக் குலுங்குற சூரியகாந்தி மலர்கள் என இயற்கையும் நினைவுகளும் ஒன்றா கலந்திருக்கிற கீழப்புலியூரின் ‘அந்நியன் பாறை’, தென்காசியோட இன்னொரு சுவாரஸ்யமான அடையாளமா இப்போ மாறிக்கிட்டிருக்கு. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/lifestyle/travel/anniyan-paarai-in-tenkasi-cinema-nostalgia-scenic-lake-and-lush-green-fields



