புதுக்கோட்டை அருகே ஓடும் அரசுப் பேருந்தின் கதவு திடீரென திறந்ததில், பேருந்தில் பயணம் செய்த 10 பள்ளி மாணவிகள் நிலைதடுமாறி சாலையில் கீழே விழுந்து படுகாயமடைந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து தொடர்பாக ஓட்டுநர் அர்ஜுனன் மற்றும் நடத்துநர் மணிகண்டன் ஆகிய இருவரைப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உடனடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளனர். இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தன் எக்ஸ் பக்கத்தில், ``புதுக்கோட்டை மாவட்டம் இரங்கம்மா சத்திரம் பகுதியைச் சேர்ந்த பழங்குடியின நரிக்குறவர் சமுதாயப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் அரசுப் பேருந்தில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்டுப் படுகாயமடைந்த கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் உலுக்கியுள்ளது. காயமடைந்த பள்ளி மாணவிகள் கல்வி பயிலச் சென்ற பெண் குழந்தைகள் மீது பேருந்தில் காட்டப்பட்ட தீண்டாமைப் புறக்கணிப்பும் அலட்சியமும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்தவுடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் பென்னட் உடனடியாக அப்பகுதிக்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட மாணவிகள், குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்களிடம் நிலைமைகளைக் கேட்டறிந்தார். நாட்டின் விளிம்புநிலை மக்களான பழங்குடியினர் மற்றும் பட்டியலினத்தவர்கள் மீது தொடர்ச்சியாகக் கட்டவிழ்த்து விடப்படும் இத்தகைய உளவியல் மற்றும் சமூக ஒடுக்குமுறைகளுக்குப் பின்னால் ஊடுருவியிருப்பது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நச்சுத்தனமான வெறுப்பு அரசியல் சித்தாந்தமே ஆகும். சக மனிதனைச் சமமாகப் பார்க்க விடாமல், எளிய மக்களைத் தீண்டத்தகாதவர்களாகவும் இரண்டாந்தரக் குடிமக்களாகவும் சித்தரிக்கும் இந்த மனுவாத வெறுப்பு அரசியலையும் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தையும் நாம் முற்றிலுமாக முறியடித்தாக வேண்டும். இத்தகைய வெறுப்புணர்வை வேரறுக்காமல் சமூக நீதியையும் சமத்துவத்தையும் பாதுகாப்பது சாத்தியமில்லை. ஆர்.எஸ்.எஸ் பழங்குடியின மாணவிகள் தங்களின் கல்வி உரிமைக்காக நாள்தோறும் பெரும் போராட்டத்தை எதிர்கொண்டு வருகின்றனர். அப்பகுதியில் இருந்து புதுக்கோட்டை நகருக்குப் பள்ளி, கல்லூரி செல்ல 4 முதல் 5 கிலோமீட்டர் தூரத்திற்குப் பேருந்துப் போக்குவரத்தே ஒரே வாழ்வாதாரமாக உள்ளது. ஆனால், குறிப்பிட்ட அந்த நிறுத்தத்தில் அரசுப் பேருந்துகள் முறையாக நிற்பதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. பேருந்தில் ஏற முயலும் குழந்தைகளை அவமதிப்பது, கம்பிப் பிடியைத் தட்டிவிடுவது மற்றும் தானியங்கி கதவை அமுக்கி மாணவிகளை ஆபத்துக்குள்ளாக்கியது போன்ற செயல்கள் மனிதநேயமற்ற கொடுஞ்செயல்கள் ஆகும். ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த பிரத்யேக வாகன வசதியை, பள்ளிக் கல்வித் துறையா அல்லது வருவாய்த் துறையா செலவை ஏற்பது என்ற அதிகாரத்துவப் பூசலால் நிறுத்தி வைத்துள்ளனர். துறைகளின் இந்த அலட்சியமே இன்று 10 மாணவிகள் ரத்தக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படக் காரணமாகியுள்ளது. அரசுத் துறைகளுக்கு இடையேயான இந்த ஒருங்கிணைப்பின்மைக்கு மாவட்ட ஆட்சியரே முழுப் பொறுப்பேற்க வேண்டும். மாணிக்கம் தாகூர் பேருந்து நிறுத்தத்தில் தற்காலிகமாக அதிகாரிகளை நிறுத்துவது நிரந்தரத் தீர்வாகாது என்பதால், பள்ளி மற்றும் கல்லூரி நேரங்களில் இரங்கம்மா சத்திரம் வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்கவோ அல்லது நிறுத்தப்பட்ட மாணவிகளுக்கான தனி வாகன வசதியை மீண்டும் தடையின்றித் தொடங்கவோ மாவட்ட ஆட்சியர் நேரடித் தலையீடு செய்து உடனடியாகத் தீர்வு காண வேண்டும். மேலும், இச்சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது பாரபட்சமின்றித் தீண்டாமை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சையையும், நிவாரணத்தையும் அரசு உடனடியாக வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்புநிலை மக்களின் நலனுக்காகவும் சமத்துவத்திற்காகவும் பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது என்பதை உணர்கிறோம்; இருப்பினும், கள அளவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறும் இதுபோன்ற துரதிர்ஷ்டவசமான தீண்டாமைச் சம்பவங்களையும் நிர்வாகக் குறைபாடுகளையும் அரசு தீவிரமாகக் கவனத்தில் கொண்டு, இனி எங்கும் இத்தகைய நிகழ்வுகள் எழாத வண்ணம் கண்காணிப்பையும் தடுப்பு நடவடிக்கைகளையும் மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வலியுறுத்துகிறது." எனக் குறிப்பிட்டிருக்கிறார். திடீரென திறந்த அரசுப் பேருந்து கதவு; கீழே விழுந்து காயமடைந்த பள்ளி மாணவிகள் - பாய்ந்த நடவடிக்கை! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/government-and-politics/manickam-tagore-has-commented-on-government-bus-students-injured-issue



