அன்புதான் சிவம். சிவம்தான் அன்பு. இதில் இரண்டு கருத்து இல்லை. அன்பும் சிவமும் இரண்டு என்பார் அறிவிலார். அன்பு சிவமாவது யாரும் அறிகிலார். அன்பு சிவமாவது அறிந்த பின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே. ஆக, அன்புதான் நம்மை வழிநடத்தும் பரம்பொருள் என்பதை அகிலம் முழுவதும் நாம் உணர, மணிவாசக பெருமான் கரைந்து உருகுவார். இறைவனை எல்லா இடங்களிலும் தேடித் தேடிப் பார்க்கிறார். பிரபஞ்சத்தில் அங்கும் இங்கும் எங்கும் என அவன் அருளாட்சி மறைந்திருப்பதை, நிறைந்திருப்பதை நமக்கு அடையாளம் காட்டுகிறார். வானாகி, மண்ணாகி, வழியாகி, ஒளியாகி, ஊனாகி, உயிராகி, உண்மையுமாய் இன்மையுமாய், கோனாகி, யான் எனது என்று அவரவரை கூத்தாட்டுவானாகி நின்றாயே. என் சொல்லி வாழ்த்துவனே என்று கரைந்து உருகுவார். இறைவா, அளவற்ற அருளாளனே, நிகரற்ற பரம்பொருளே! நீ விண்ணில் விரிந்திருக்கிறாய். மண்ணுக்குள் மறைந்திருக்கிறாய். காற்றில் கலந்திருக்கிறாய். நீரில் நிறைந்திருக்கிறாய். நெருப்பில் உரைந்திருக்கிறாய். அண்டசராசரங்கள் அனைத்தும் அவன் ஆளுமைதான். அகிலம் முழுவதும் அவன் ஆளுமைதான். குன்றக்குடி முருகன் ஆக, உலகம் முழுக்க, அண்டம் முழுக்க நிறைந்திருக்கிற பரம்பொருளை எங்கெல்லாம் நாம் தேடுகிறோம்? திருக்கோயில்களில் தேடுகிறோம். திருக்கோயில்களில் தேடித் தேடிப் பார்க்கிறோம். நமக்கு அவன் தென்படுகிறானா? எப்போது அவன் நமக்குக் காட்சி தருவான்? நம்முடைய திருக்கோயில்கள் வெறும் கற்றளிகள் அல்ல. அவை கலைகள் வளர்த்த பல்கலைக்கழகங்கள். மானுட சமூகத்தின் மையங்கள். இந்த திருக்கோயிலிலே தான் கற்கள் எல்லாம் பேசும் பொற்சிலைகளாக மாறியிருக்கின்றன. மண்ணெல்லாம் விண்முட்டும் கோபுரங்களாக உயர்ந்திருக்கின்றன. வண்ணங்கள் எல்லாம் உயிர்ப்புடைய ஓவியங்களாக உருப்பெற்றிருக்கின்றன. இந்தத் திருக்கோயில்கள் இறைவன் எழுந்து அருள்பாலிப்பதற்கு மட்டுமா? அப்படி ஓர் இருப்பிடத்தை அவன் நம்மிடம் கேட்டானா? மணிவாசகபெருமான் கூறியதைப்போல, அகிலம் முழுக்க, பிரபஞ்சம் முழுக்க நிறைந்திருக்கிற இறைவன், ஒரு சின்னஞ்சிறிய இடத்திற்குள்தான் இருப்பேன் என்று நம்மிடம் சொன்னானா? இல்லை. அவன் எங்கும் இருக்கிறான். எதிலும் இருக்கிறான். எப்படியும் இருக்கிறான். அப்படி இருக்க, இந்தத் திருக்கோயில் யாருக்கு? ஆண்டவனுக்கு மட்டுமா? இல்லை. பேசும் பொற்சிலைகளாக மாறியிருக்கிற திருக்கோயில், உயர்ந்த கோபுரங்களை உடைய திருக்கோயில், வண்ண வண்ண உயிரோட்டமுடைய ஓவியங்கள் நிறைந்திருக்கிற திருக்கோயில் அனைத்தும் மனித சமூகம் கலந்து நிறைந்து வாழ்வதற்குதான். முன்பு நம் திருக்கோயில்களிலே சோழர் காலத்துக் கல்வெட்டு செய்திகள் சொல்லுகிற செய்தி இதுதான். திருக்கோயில்களிலேதான் கல்வி கற்றுத் தருகிற கல்விச்சாலைகள் இருந்தன. இப்போது முறை சார்ந்த பள்ளிகள். அப்போதோ திருக்கோயில் வளாகம்தான் கற்றுத் தருகிற பள்ளிக்கூடம். 'கற்றல் கேட்டல் உடையார் பெரியார்' என்று திருஞானசம்பந்த பெருமான் பாடுவார். கல்வியும் கேள்வியும் வளர்ந்த பள்ளியாக திருக்கோயில் வளாகம் இயங்கியது. இந்தத் திருக்கோயிலிலேதான் எல்லாக் கலைகளும் வளர்ந்தன. இயல், இசை, நாடகம் என்ற நுண்கலைகள் அனைத்தும் வளர்ந்த பல்கலைக்கழகங்களாக நம் திருக்கோயில்கள் விளங்கின. தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஏன். ஊரை மேலாண்மை செய்ய வேண்டும். ஊரை மேலாண்மை செய்கிற தலைமைப் பொறுப்பைத் தேர்ந்தெடுக்கிற இடமும் திருக்கோயில் வளாகம்தான். இப்போது எலக்சன் கமிஷன், தேர்தல் ஆணையம், வாக்குச்சீட்டு முறை. அப்போது ஊர் அனைத்தும்கூடி திருக்கோயில் வளாகத்தில் குடவோலை முறைப்படி ஊர்த் தலைவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள். ஆக, ஊராட்சி முறையைக் கற்றுத் தந்த இடமும் நம்முடைய திருக்கோயில்கள்தான். அதைப்போல நீதி வழங்கும் சபைகள். இன்று நிறைய நீதிமன்றங்கள் மாவட்ட அளவில் தொடங்கி தலைநகரம்வரை, தமிழகத்தின் தலைநகரம், இந்தியாவின் தலைநகரம்வரை இருக்கின்றன. ஆனால் அன்று நீதிமன்றங்கள், நீதி வழங்கும் சபைகள் அனைத்தும் நம் திருக்கோயில்களிலே இயங்கின. இறைவனுக்கே ஒரு வழக்கு. அந்த வழக்கை திருவெண்ணைநல்லூர் திருக்கோயிலிலே வைக்கிறார்கள். வாதியாக இறைவன், பிரதிவாதியாக சுந்தர பெருமான். இரண்டு பேருக்கும் வழக்கு. இறைவன் போட்ட வழக்கு, சுந்தர பெருமான் எனக்கு அடிமை என்று போட்ட வழக்கு. அந்த வழக்குக்குத் தீர்ப்பை சொன்னவர்கள் திருவெண்ணைநல்லூர் திருக்கோயில் வளாகத்தில் இருந்த சான்றோர் பெருமக்கள். ஆக, நீதி வழங்குகிற சபைகள் நம் திருக்கோயில்களில் இயங்கின என்பதற்கான அடையாளம்தான் இது. ஆக, திருக்கோயில் என்பது மனித சமூகத்தின் வாழ்க்கையோடு நிறைந்திருந்தது. அன்பை வளர்த்து தந்தது. கலைகளை வளர்த்து தந்தது. பண்பை வளர்த்து தந்தது. மானுடத்தை உயர்த்திப் பிடித்தது. மானுடம் உறவு கொண்டு வாழ்வதற்கான வாழ்க்கை முறை அங்கு இருந்தது. காதல் வாழ்க்கையைக்கூட கற்றுத் தந்த இடம் திருக்கோயில் வளாகம்தான். பரவை நாச்சியாருக்கும் சுந்தர பெருமானுக்கும் உறவு ஏற்பட்டது திருக்கோயில் வளாகத்தில்தான். ஆக, காதல் வாழ்க்கையை கற்றுத் தருகிற இடமாகவும் திருக்கோயில் இருந்தது. தோழமை வாழ்க்கையைக் கற்றுத் தருகிற இடமாகவும் திருக்கோயில் இயங்கியது. சுந்தர பெருமானுக்கும் இறைவனுக்கும் ஏற்பட்ட நட்பு திருக்கோயில் வளாகத்தில்தான். தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் உரையை வீடியோ வடிவில் காண ஆக, இப்படியெல்லாம் காதலை, நட்பை, பண்பை, கலாசாரத்தை, கலைகளை, கல்வியை, நீதியை வழங்குகிற இடமாகத் திருக்கோயில் இருந்ததால்தான் அது மனித சமூகத்தின் மையம் என்று அழைக்கப்பட்டது. இந்தத் திருக்கோயில்கள்தான் பண்பாட்டை வளர்க்கிற பண்பாட்டு உறைவிடங்களாக இருந்த காரணத்தால், நம் மகாசன்னிதானம் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் ஆன்மிகப் பெருவழியில் வைத்த உரத்த முழக்கம் இதுதான்: 'கோயிலைத் தழுவிய குடிகள், குடிகளைத் தழுவிய கோயில்.' கோயிலுக்கும் குடிமக்களுக்கும் இருக்கிற நெருங்கிய உறவை, அன்பான உறவை, மனிதத்தை வளர்க்கிற உறவைத் தான் 'கோயிலைத் தழுவிய குடிகள், குடிகளைத் தழுவிய கோவில்' என்றார். கடவுளைப் போற்றி, மனிதனை நினைத்து மதிக்கிற போக்கில் நம் ஆன்மிகம் வளரட்டும். அதற்குத்தான் அன்பே சிவமாக மாறுகிற நிலை, சிவமே அன்பாய்க் காட்சி தருகிற நிலை, அன்பும் சிவமும் இரண்டு இல்லை என்பதை அடையாளம் காட்டுகிற நிலை. அந்த நிலையில் மானுடம் பயணிக்கட்டும். அன்பு எங்கும் தலைக்கட்டும். ஆன்மிகம் எந்நாளும் செழிக்க! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/spiritual/gods/anbe-sivam-part-1-where-do-we-seek-god-thavathiru-kundrakudi-ponnambala-adigalar




