நாக தேவதைகளை வழிபடுவதற்கு உகந்த நாள் 'நாக சதுர்த்தி' ஆகும். ஆடி அல்லது ஆவணி மாதங்களில் வரும் சதுர்த்தி திதியில் நாக சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. கருட பஞ்சமிக்கு முந்தைய நாளாக இந்த நாள் வருகிறது. நாக சதுர்த்தி குறித்தும், நாக வழிபாடு குறித்தும் பல புராணக் கதைகள் கூறப்படுகின்றன. காசியப முனிவருக்கும், கத்ருவுக்கும் பிறந்தவர்களே நாகர்கள். அவர்களில் ஆதிசேஷன், வாசுகி, தட்சகன், கார்கோடகன் போன்றோர் மிகவும் புகழ்பெற்றவர்கள். ஒரு சமயம் பரீட்சித் என்ற மன்னன், நாகங்களின் தலைவனாக விளங்கிய தட்சகனால் தீண்டப்பட்டு உயிரிழந்தார். இதனால் கோபம் கொண்ட பரீட்சித் மன்னனின் மகனான ஜனமேஜயன், அனைத்து நாகங்களையும் அழிப்பதற்காக 'சர்ப்ப யாகம்' ஒன்றை நடத்தினான். அந்த யாகத் தீயில் விழுந்து பல நாகங்கள் மாண்டன. நாக இனம் அழிவதை அறிந்த ஜரத்காரு முனிவரின் மகனான ஆஸ்தீக முனிவர், யாக சாலைக்கு வந்தார். அவர், தனது வார்த்தைகளால் ஜனமேஜயனை சமாதானப்படுத்தினார். இதையடுத்து மன்னன் யாகத்தை நிறுத்தினான். இதனால் நாக குலம் காக்கப்பட்டது. இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையிலேயே நாக சதுர்த்தி கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது. அஷ்ட நாகங்கள் இந்த நாளில் அஷ்ட நாகங்களாக கருதப்படும் அனந்தன் (ஆதிசேஷன்), வாசுகி, தட்சகன், கார்கோடகன், பத்மன், மகாபத்மன், சங்கன், குளிகன் ஆகிய நாகங்களை வழிபடுவது சிறந்தது. ஆதி சேஷன், மகாவிஷ்ணுவின் படுக்கையாகவும் குடையாகவும், பூமியை தாங்கும் பாக்கியம் பெற்றார். தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் வேண்டி திருபாற்கடலை கடைந்தபோது, வாசுகியை கயிறாக பயன்படுத்தினர். மகா பத்மன், வடதிசையின் காவலன். கார்கோடகன், ஈசனின் மோதிரமாக திகழ்கிறார். தட்சகன், பரீட்சித்து மன்னரை தீண்டி வைகுண்டம் அனுப்பினார். சங்கன், ஈசனின் சிகரத்தை அலங்கரிக்கும் பாக்கியத்தை பெற்றார். இந்த ஆண்டு நாக சதுர்த்தி, 16-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அன்றைய தினம் அதிகாலையில் நீராடி விரதத்தை தொடங்க வேண்டும். வீட்டின் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று, அங்குள்ள நாக புற்று அல்லது நாக சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள், குங்குமம் அணிவித்தும், மலர் சாற்றியும் வழிபடலாம். புற்று மண்ணை பிரசாதமாக அணிந்து கொள்ளலாம். கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள், நாகர் சிலை இருந்தால் அதற்கு பாலாபிஷேகம் செய்து வழிபடலாம். இல்லையென்றால், அம்பாளுடன் நாகர் இருக்கும் படங்களை வைத்து, அதற்கு மஞ்சள், குங்குமம் இட்டு அலங்கரிக்கலாம். நாகருக்கு உகந்த உளுந்து, கொள்ளு தானியங்களை கொண்டு நைவேத்தியம் படைக்கலாம். நாக வழிபாடும் பலன்களும் நாக வழிபாடு செய்வதன் மூலம் குடும்ப நலம் மேம்படும், புத்திர பாக்கியம் கிட்டும், திருமணத் தடை நீங்கும், செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. அருகில் உள்ள ஆலயங்களுக்கு சென்று, நவக்கிரகங்களை வழிபடலாம். அதில் உள்ள ராகு - கேது பகவான்களுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது மிகுந்த பலனை தரும். நாக சதுர்த்தி விரதம் மேற்கொண்டால் தலைமுறை தலைமுறையாக உள்ள தோஷங்கள் விலகும். சர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம், ராகு - கேது தோஷம் போன்றவை நீங்கும். கணவன் - மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடு விலகி, ஒற்றுமை பலப்படும். நோய்கள் நீங்கி ஆரோக்கியமான வாழ்க்கை அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/devotional/naga-chaturthi-worship-helps-to-removes-kala-sarpa-dosha




