வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் அமைதியான மலர் வனத்தில் அமைதியற்று அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தாள் சிவரூபா. நின்று பூத்து சிரிக்கும் வண்ண மலர்களை உன்னித்தாள். அவைகளும் இவளை கண்டு ஏளனமாய் சிரிப்பது போல தோன்ற. "என்ன என்னை பார்த்தா உங்களுக்கும் கிண்டலா இருக்கா "என்று அவைகளை சாடினாள். பூக்கள் தன்னிலையில் கிஞ்சித்தும் மாறாமல் புன்னகைக்க. வெகு கோபமாய் "ஒரு நாளில் வாடி கருகி போகும் உங்களுக்கு இவ்ளோ எள்ளல் ஆகாது என்று பொரிந்தவள். போ. உங்களோடு எனக்கென்ன பேச்சு" என்று பழிப்பு கட்டி விட்டு வேறு பக்கம் நகர. அங்கேயும். Representational Image அழகுக்காய் வெட்டி விடப்பட்ட புல்லில், காற்று ஊடாடி சென்றதில் புல்லும் சிலு சிலுவென அசைந்தாட, அவைகளும் கை கொட்டி சிரிப்பது போல தோன்ற. கோபம் தலைக்கு ஏறவே செய்தது. "இதுகளுக்கு என்ன வந்து விட்டது; ஒட்டு மொத்தமாய் சேர்ந்து ஏளனம் செய்வதிலேயே குறியா இருக்குதுங்க வாய்விட்டே புலம்பியவள் மறுபுறம் நகர எத்தனித்தாள். அங்கே. கருங்குயில் ஒன்று லயம் தப்பாது சோக கீதம் இசைக்க.அதுவும் தன் மனதை பிரதிபலித்து, கிண்டல் செய்வதாய் தோன்ற. ச்சே.அதுவுமா தனக்கு மட்டும் கேட்கும் குரலில் முனகிவிட்டு மீண்டும் மகிழ மரத்தடிக்கு வந்து அங்கே இருந்த பெஞ்சில் அமர்ந்து சுற்றி நோட்டம் விட.எப்போதும் இதை எல்லாம் ரசிப்பவள் தான் இவள். இன்று இவளின் மனவெண்ணம் அதனின் வழமையான செயல்களை கூட தவறாக பார்க்க வைத்தது. அன்று என்னவோ பூங்காவில் கூட்டம் மென்பதே இல்லை. எப்போதும் அதிகம் வர மாட்டார்கள் என்பது வேறு விஷயம். ஆங்காங்கே சிற்சிலர் ஓய்வெடுத்து கொண்டிருந்தனர். வார இறுதியில் வேண்டுமானால் சிறு பிள்ளைகள் கூட்டம் கொஞ்சம் வருவதுண்டு. குழந்தைகள் சேட்டை பொறுக்க முடியாமலும், தங்களுக்கு மாறுதல் வேண்டியும் வரும் பெற்றோர்களால். பார்வையில் வெறுமையே தோன்ற, மீண்டும் பேப்பரையும், பேனாவையும் எடுத்த சிவரூபா கடகட வென எழுத ஆரம்பித்தவள். பத்து வரிகள் எழுதி முடித்து மீண்டும் எடுத்து எழுதியதை படித்து பார்த்தவள். திருப்தி வாராமல் பேப்பரை கசக்கி போட்டாள். அவள் கசக்கி போட்ட அத்தனை பேப்பரும் பச்சை புல்வெளியில் வெண் பூக்கள் போல அழகாவே தெரிந்தது. கசக்கி போட்ட எல்லா பேப்பர்க்கும் வாய் இருந்தால், சிவரூபாவை நிற்க வைத்து கேள்வி கேட்டே இருக்கும். உன் எண்ணத்தை பிரதிபலித்து தவறாக எழுதும் பேனாவிற்கு மட்டும் தண்டனை இல்லை. உங்களின் பிழைகளை தாங்கும் எனக்கு தண்டனையாவென. மீண்டும் எழுத துவங்கியவள். 'ப்ச் என்ன எழுதி என்னதுக்கு ஆகுது, ஒரு வாசிப்பு இல்ல ஊக்கபடுத்தும் விமர்சனம் இல்ல,ஒரு பரிசு இல்ல, யாருக்காக எழுதணும் இந்த போட்டியில் எழுதினால் மட்டும் நம்மை யாருக்கு தெரிய போகுது, இனி எழுதவே கூடாது' என முனுமுனுத்து கொண்டே பேப்பரை பேடில் இருந்து இழுத்து கசக்க போக. "ஏம்மா அப்படியென்னா எழுதற கசக்கி போட்டு இருக்க இவ்ளோ காகிதத்தை" என்ற குரல் கேட்டு தலை நிமிர்ந்தாள் சிவரூபா. எதிரில். அழகிய பெண் ஒருத்தி. இதழில் குறுநகை நெளிய நின்றிருந்தாள். இன்னதென கணிக்க இயலாத வயது. தெய்வீக அழகு என்று சொல்வார்களே அது இவளுக்கே பொருந்தும். பலவண்ணம் இழைத்த பருத்தி புடவையை அணிந்து, நெற்றியில் குங்குமம், கழுத்தில் முத்துமணி மாலை, காதில் அதுக்கேற்ற சிறிய ஜிமிக்கி தோடு. மதி முகம்,கையிலும் அதே பலவண்ண வளையல்.இடை வரை நீண்ட பின்னல் கொடி போல தேகவாகு இப்படி அடுக்கி கொண்டே போகலாம் அவள் அழகை. "அதுவாங்க நான் ஒரு எழுத்தாளர். எழுதி எழுதி பார்க்கிறேன் என் மனசுக்கு திருப்தி வரலை. அதான் கிழிச்சு போட்டுட்டு மறுபடியும் எழுத முயற்சிக்கிறேன்." "ஓகோ அதுதானா விஷயம். ஆனால் இனி நான் எழுத போவதில்லை என்று முனகின மாதிரி இருந்துச்சே." அப் பெண் மர்ம புன்னகையோடு வினவ. திடுக்கிட்டு போனாள் சிவரூபா நாம மெதுவாய் முனுமுனுத்தது இவங்களுக்கு எப்படி கேட்டு இருக்கும் சந்தேகமாய் ஆராய்ந்து கொண்டே, "அப்படியெல்லாம் ஒன்னும் இல்லையே ஆமா நீங்க யாரு?" "நானா உனக்கு வேண்டபட்டவனு வச்சுகேயேன் " "வேண்ட பட்டவங்களா உங்களை எங்குமே பார்த்த நியாபகம் இல்லையே ஆமா உங்க பேர் என்ன? " "என் பேர் கிடக்கட்டும் அது இப்போ முக்கியம் இல்ல. யாருக்காக எழுதணும் எதுக்கு எழுதணும் இப்படி பல புலம்பல் கேட்டுச்சே அதான் என்னனு கேட்டு போக வந்தேன். " "என்னாது நான் நினைச்சதை அப்படியே சொல்லுறாங்க. ஒருவேளை நம் நினைப்பதை தெரிஞ்சுக்க மாந்திரீகம் படிச்சு இருப்பாங்களோ "சிவரூபா நினைக்க. "உம் மனசை அறிய அவ்ளோ எல்லாம் மெனக்கெட வேண்டியது இல்ல."அப் பெண் சொல்லவும். சட்டென கோபம் வந்தது ரூபாக்கு.ஆனாலும் அப் பெண்ணின் சாத்வீக தோற்றம் இவளை ஏதோ செய்ய."சரிம்மா உங்ககூட எனக்கு என்ன பேச்சு நீங்க போகலாம் என்னை தொந்திரவு செய்யாமல் " "நான் வந்ததே உன்னை பார்க்க பேசத்தானே பின்னெப்படி போவேன்." "நம் இருவருக்குள்ளும் அறிமுகம் கிடையாது; பிறகு என்கிட்ட பேச என்ன இருக்கு " "நீ வேணா என்னை மறந்து இருக்கலாம் என்னால மறக்க மறுக்க முடியாது என்று கூறிக்கொண்டே அவளின் அருகில் அமர்ந்தாள் அந்த அழகிய பெண்."ம் இப்போ சொல் சிவரூபா உனக்கு என்ன பிரச்சனை. ஏன் இப்படி அலைபாஞ்சுக்கிட்டு இருக்க" அப் பெண் கனிவான குரலில் வினவ. "ஹான் என்னோட பெயர் உங்களுக்கு எப்படி தெரியும் வியாப்பாய் கேட்டாள் ரூபா. "எனக்கு தெரியாதா என்ன. உனக்கு பேர் வைக்கும் போதும் உன்னோடு இருந்தேனே." "இவங்களுக்கு ஒரு வேளை பைத்தியம் கிய்த்தியம் பிடிச்சு இருக்குமோ" என்றே அவள் பார்க்க. "நியாயமா நீங்க எல்லாம் என்னை பண்ற தொல்லைக்கு பிடிச்சு இருக்கணும் ஆனால் இன்னும் சுயநினைவோடு தான் இருக்கேன் "அப் பெண் பதில் தர. "அம்மா தாயே என கை எடுத்து கும்பிட்ட சிவரூபா போதும் இதுக்கு மேலும் என்னை குழப்பாதீங்க. உங்க வழிய பாத்து கிளம்புங்க நானும் கிளம்புறேன் என்றவள். தன் பொருட்களை எடுக்க போக. "இரு ரூபா அவசரம் வேண்டாம். இப்போ ஏதோ புலம்பிகிட்டு இருந்தாயே அதுக்காக உதவி செய்யதான் வந்தே." சற்று நிதானித்த ரூபா. "நீங்க என்ன உதவி செய்ய முடியும் எனக்கு" அப் பெண்ணை உற்று நோக்கியவாறே கேட்க. "இல்ல உன் எழுத்தை மேம்படுத்த ஏதாவது உதவி செய்யாலாமேனு." அப் பெண் முடிப்பதற்குள்.இடையிட்ட சிவரூபா. "ஓகோ எனக்கு உதவி செய்யகூடிய அளவுக்கு பெரிய ஆளோ;நீங்க பெரிய எழுத்தாளரோ!எத்தனை புத்தகம் வெளியிட்டு இருக்கீங்க, ஏதாவது பரிசு, அவார்டு வாங்கி இருக்கீங்களா?என்ன பேரில் எழுதறீங்க." ரூபா வினாக்களை அடுக்க. "இல்லைம்மா.நான் எழுதுவது இல்லை." "பிறகு " "ஆனால் எழுத்தை படைத்தவள் என்பதால் பற்றி கொஞ்சம் தெரியும் " "இவங்க ஒரே குழப்ப வாதியாவே இருக்காங்க. எழுத்தையே படைச்சவள் என்கிறாங்ககளே நல்லா இவங்க கிட்ட மாட்டிகிட்டே ச்சே எனக்கு நேரமே சரியில்லை போல." நினைத்தாள் சிவரூபா. மெல்லிய புன்னகையோடு. நீ என்ன மாதிரி கதைகள் எழுதற ரூபா, இலக்கண கதைகளா? இலக்கிய கதைகளா? வரலாற்று புனைவுகளா. பெண் கேட்க. "அய்யய்யோ இலக்கண, இலக்கிய கதைகள் எழுதற அளவுக்கு எல்லாம் எனக்கு திறனும் இல்ல அவற்றை வாசிக்க ஆளும் இல்ல " "உனக்கு அப்படி எழுத ஆசையா இருக்கா. சொல்லு அப்படி எழுதும் வல்லமையை தரேன். " "எது நீங்க அதை தரீங்களா. அதெல்லாம் வேண்டாம் எனக்கு" "வேறு,சாகித்திய அகடாமி விருதுகள் ஏதும் வாங்க ஆசையா. இல்ல உலக புகழ் பெரும் அளவுக்கு கதை எழுத ஆசையா! அந்த மாதிரி புத்தகத்தை தேர்வு செய்து தரேன்.அதையும் படிச்சிட்டு எப்படி எழுதலாம், எழுத கூடாதுனு தெரிஞ்சுப்பே இல்ல."அப் பெண்ணும் விடாமல் வினாவை அடுக்க. ஒருக்கணம் சற்று சபலமே வந்தது சிவரூபாக்கு இந்த பெண் மாயமந்திரம் அறிந்தவர்களா இருப்பாங்களோ.அதான் இவ்ளோ உறுதியாக சொல்லுறாங்க. என்ன தான் சொல்லுறாங்கன்னு கேட்டு பாப்போமா என நினைத்தாலும்,"மத்தவங்க எழுத்த படிக்கும் அளவுக்கு பொறுமையோ, நேரமே இல்ல அது நம்ம எழுத்துக்கு செய்யும் துரோகமும் கூட. "என்ன மாதிரி கதைகள் எழுதுவ நீ. இதுவரை எத்தனை எழுதி இருக்க, எத்தனை புத்தகமா வெளி வந்து இருக்கு." நான் சாதாரண மனிதர்களின் எல்லாவித உணர்வுககளை வெளிப்படுத்தும் கருத்துக்களை தான் என் எழுத்தில் சொல்லுவேன். ரெண்டு மூணு நாவல்கள் தான் எழுதி இருக்கிறேன். புத்தகம் ஏதும் இதுவரை வெளியிடவில்லை" சிவரூபா சற்றே சங்கோசமாய் பதில் தர. "அப்போ தனிப்பட்ட யாருக்காவது பிடிக்கணும்னு மனசில வச்சு எழுதறியோ!அவங்க வாசிக்கலைன்னு வருத்தப்படுறியோ " "இல்ல இல்ல. அப்படி இல்லவே இல்லை. நான் எனக்காக, என் மனதிருப்திக்காக மட்டுமே எழுதறேன். யார் வாசிச்சா என்ன வாசிக் காட்டி என்ன? யாருக்கும் என் எழுத்து நடையை மாத்திக்க மாட்டேன்.என்னோட சுயநடையை விட்டும் கொடுக்க மாட்டேன் மனதில் தோணுவதை மட்டுமே எழுதுவேன்" சிவரூபா நிமிர்வாக சொல்ல. சட்டென கோபம் கொண்ட அப் பெண். சிவ ரூபா தலையில் சுள்ளேன்று ஒரு கொட்டு வைக்க. கொட்டா அது அப் பெண் சாதாரணமாய் தான் கொட்டியாதாய் தோன்றியது, ஆனாலும் மெய் எங்கும் வலி ஓரு நிமிஷத்துக்கு ஊடுருவி சென்று அவளை துணுக்குற வைத்ததென்னவோ உண்மை. அலமலண்டு போன ரூபா அப்படியே தலையை பிடித்து கொண்டு "ஏன்மா உனக்கு என்ன ஆச்சு இப்படி கொட்டுறீங்க" தலையை தடவி கொடுத்து கொண்டே கேட்க. "யாரு சொல்லுறதையும் கேட்க மாட்ட, எப்படி எழுத்து இருக்கணும்னு தெரிஞ்சு எழுத மாட்ட; எந்த பரிசும் விருப்பம் இல்ல எந்த அவார்டும் இலக்கு இல்ல.யாரும் வாசிக்கவில்லை என்றாலும் கவலை இல்ல. இதுல ஒன்னை பின்பற்றினாலும் உன் சுயமரியாதை அடிப்படும்." திரு திருவென விழித்தாள் சிவரூபா. மேலும் அப் பெண்ணே தொடர்ந்து "அப்புறம் எதுக்கு இந்த புலம்பல். சும்மா நொய் நொய்யினு, யாரும் படிக்கல, யாருக்கும் பிடிக்கலைனு, எழுதறரத நிறுத்த போறேன்னு.சொல்லாமலே நிறுத்தி தொலைஞ்சுச்சுட்டு போக வேண்டியது தானே இல்ல அமைதியா எழுதிட்டு போகணும். ஒரு பூ கூட துளிர் விட்டு மொட்டாகி மலர்ந்து மணம் வீச முப்பது நாற்பது நாட்கள் ஆகுது. உனக்கு மூணு கதை எழுதிய உடனே பெரிய எழுத்தாளர் ஆகிட்டதா அகம்பாவம் ஹூம். முதலில் அகம்பாவத்தை விடுத்து உன்னை சுற்றி நடப்பதை கவனி;பொறுமையை கத்துக்கோ, விமர்சனத்தை இயல்பாக எடுத்துக்கோ. பிறகு எல்லாம் தானா கை வரும் "அப் பெண் கடுக்கடுக்க. "நான் ஆயிரம் புலம்புவேன்; என் புலம்பலில் உங்களுக்கு என்ன நஷ்டம்.என்னை ஏன் கவனிக்கிறீங்க நீங்க பாட்டுக்கு போக வேண்டியது தானே." "எங்க போய் தொலைய உன்னோட மனச்சாட்சியே நான் தானே. உன்னோட எண்ண ஒட்டங்கள் தாங்க முடியாமல் தான் வெளியே குதிச்சு வந்து இவ்ளோ நேரம் வாதடினேன்." "என்னது என்னோட மன சாட்சியா நீ அதான் எங்கேயோ பார்த்த சாயலில் இருக்கியேனு நினைச்சேன்." "ஆமா இவ்ளோ நேரம் உத்து உத்து பாத்தியே உன் மூஞ்சியே உனக்கு தெரியலையே. அப்புறம் எங்க வாசகரை ஈர்க்கிற மாதிரி கதை எழுத போறே. இதோ பாரு ஒழுங்கா புலம்பாம எழுதறதா இருந்தா எழுது. மறுபடியும் ஒரு வார்த்தை புலம்பல் வந்துச்சு நான் வெளில வரவேண்டி இருக்கும். உன் மண்டை வீங்க வேண்டி இருக்கும்." எச்சரிக்கை செய்த மனச்சாட்சி சட்டென மறைய. மகிழ மரத்தின் சிறுகிளை ஒன்று சிவ ரூபா மேல் விழ. பதட்டமாய் எழுந்தவள் 'ச்சே அத்தனையும் கனவா.என்ன கனவு இது.நான் என்னின் சுயம் என்று நினைத்ததை எல்லாம் அக்குவேரு, ஆணிவேராய் பிச்சு போட்டுட்டு போயிடுச்சே;அதிலும் நியாயம் இருக்கும் போலவே 'யோசிக்க தொடங்கினாள். வாசிக்கிற நீங்களே சொல்லுங்களேன்;சிவரூபாவின் மனச்சாட்சி சொன்னது எல்லாம் சரியா என்றே. -சுசீலா சிவா மேட்டூர் அணை. வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம். இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே. Link: விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம். உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/literature/a-tamil-short-story-on-writers-block-and-ego




