சென்னை, பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், சென்னை பள்ளிகளில் மாணவிகளுக்கு பாதுகாப்பான மற்றும் உள்ளடக்கிய கல்வி சூழலை உருவாக்கும் நோக்கில், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- “பெருநகர சென்னை மாநகராட்சியானது, பாலினம் மற்றும் கொள்கை ஆய்வகம் (Gender and Policy Lab - GPL) மூலம், மாணவர்களுக்கு, குறிப்பாக வளர் இளம் பெண் மாணவிகளுக்கு பாதுகாப்பான மற்றும் உள்ளடக்கிய கல்வி சூழலை உருவாக்கும் நோக்கில், அனைத்து சென்னை பள்ளிகளிலும் பாதுகாப்பு தணிக்கைகளை (Safety Audits) மேற்கொண்டு வருகிறது. இம்முயற்சியை, குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகளை மேலும் வலுப்படுத்தவும், தேவையான ஆதரவு சேவைகளுக்கு உரிய பரிந்துரைகளை வழங்கவும், மாநகராட்சி பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்ய ஒருங்கிணைந்த அணுகுமுறையை ஏற்படுத்தவும், குழந்தைகள் நலத்துறையுடன் இணைந்து சென்னை மாநகராட்சியின் பாலினம் மற்றும் கொள்கை ஆய்வகம் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னை மாநகராட்சியின் பாலினம் மற்றும் கொள்கை ஆய்வகம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுடன் (District Child Protection Unit - DCPU) இணைந்து, பெண் மாணவிகளுக்கான குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. மேலும், ஒற்றைப் பெற்றோர் குடும்பங்களைச் சேர்ந்த தகுதியான மாணவர்கள் ஒற்றைக் குழந்தை ஆதரவுத் திட்டத்தில் (Single Child Sponsorship Programme) சேர்க்கப்படுவதற்காக அடையாளம் காணப்படுகின்றனர். பள்ளி மாணவிகளுடன் கலந்துரையாடல்கள் நடத்தி, பள்ளிக்குள்ளும் பள்ளியைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அவர்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்பு சார்ந்த கருத்துகள் மற்றும் சவால்கள் அறியப்படுகின்றன. அதேவேளையில், வகுப்பறைகள், கழிப்பறை வசதிகள், விளக்குகள், அணுகல்தன்மை மற்றும் பிற அத்தியாவசிய பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்ட பள்ளி உள்கட்டமைப்புகளும் பாதுகாப்பு தணிக்கையின் மூலம் மதிப்பீடு செய்யப்படுகின்றன. பாதுகாப்பு தணிக்கைகள் மற்றும் மாணவர்களுடனான கலந்துரையாடல்களின் மூலம் பெறப்படும் தகவல்கள், பள்ளி பாதுகாப்பை மேம்படுத்தவும், பாலின சமத்துவத்தை மையமாகக் கொண்ட திட்டமிடலை வலுப்படுத்தவும் ஆதாரப்பூர்வமான பரிந்துரைகளை உருவாக்கவும் உதவும். அனைத்து குழந்தைகளுக்கும் பாதுகாப்பான, உள்ளடக்கிய மற்றும் குழந்தை நட்பு கல்விச் சூழலை உருவாக்குவதில் சென்னை மாநகராட்சி தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது. இதன் ஒரு பகுதியாக, நேற்று (16.07.2026) பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், வார்டு-170க்குட்பட்ட சின்னமலை, சென்னை மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு, துண்டுப் பிரசுரங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு, பள்ளியின் சுவர்களில் ஒட்டப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, இன்று (17.07.2026) பெருநகர சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-141க்குட்பட்ட சி.ஐ.டி. நகர், சென்னை மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு, துண்டுப் பிரசுரங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு, பள்ளியின் சுவர்களில் ஒட்டப்பட்டது.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/awareness-programs-aimed-at-creating-a-safe-educational-environment-for-female-students-in-chennai-schools




