கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது `சினி'ஸ்கோப் தொடர்! ரமணா: மன்னிப்பை மறுத்தவன்!`சினி'ஸ்கோப் 04 ஓர் இக்கட்டான சூழ்நிலையில் புரொஃபசர் ரமணாவை பார்த்து, தேவகி ஆதங்கப்படுகிறாள். ’இந்த மக்களுக்காக இவ்வளவு செய்றீங்களே, நீங்க யாரு, எப்படி இருப்பீங்கன்னு கூட அவங்களுக்குத் தெரியாது. குறைந்தபட்சம் உங்களோட முகம் அவங்களுக்குத் தெரிஞ்சாக்கூட நீங்க கஷ்டப்படுறதுல ஒரு அர்த்தம் இருக்கும்!’ அதற்குப் பதிலாக புரொபஃசர் ரமணா இப்படிச் சொல்கிறார், ‘இந்தத் துணியை நெசவு பண்ணின தொழிலாளியோட முகம் தெரியுமா உனக்கு? இன்னிக்கு நாம சாப்பிட்ட அரிசியை விதைத்து அறுவடை பண்ணினானே ஒரு விவசாயி, அவனுடைய முகம் தெரியுமா நமக்கு? நாம கால்ல போட்டு இருக்கிற செருப்பைத் தைத்துக் கொடுத்தானே ஒரு உழைப்பாளி, அவனுடைய முகம் தெரியுமா யாருக்காவது? நம்ம முகம் யாருக்குமே தெரியல, நமக்கு யாருமே நன்றி சொல்லலனு இவங்கள்ல யாராவது வருத்தப்படுறாங்களா? அது மாதிரி தான் இதுவும்!’ ரமணா | `சினி'ஸ்கோப் 04 அந்தச் சமயத்தில் சினிமாவில் கேட்ட வசனங்களுள், நம் மனதில் அப்படியே பதிந்து போன ஒன்று இது. இதுபோல இந்தப் படத்தில் பல முக்கியமான காட்சிகளும், வசனங்களும், நுணுக்கங்களும் இருக்கின்றன. இத்தனைக் கச்சிதமான திரைக்கதை அமைப்பையும், ஒவ்வொரு ஐந்து நிமிடத்துக்கும், சுவாரசியமான காட்சிகளோடு கூடிய ஒரு பரபரப்பான திருப்பத்தையும் கொண்டிருந்தது ரமணா. ஒரு கமர்சியல் சினிமாவில் இப்படியான அம்சங்கள் கூடி வருவது அரிதிலும் அரிதான ஒரு நிகழ்வு. தொடக்கத்தில் ஒரு தாசில்தார் கடத்தப்பட்டு விட்டதாக ஒரு நாளிதழின் எடிட்டருக்குத் தகவல் வருகிறது. மறுநாளுக்கான நாளிதழ் அச்சிலேறிக் கொண்டிருக்கும் நேரம் அது. அந்த எடிட்டர் உதவியாளரிடம், ’ஒரு தாசில்தார் கடத்தப்பட்டிருக்கிறார், அதை ஏழாவது பக்கத்தில் ஒரு பெட்டிச் செய்தியாய் சேர்த்துக்கொள்’ என்று சொல்கிறார். கொஞ்ச நேரத்தில் இன்னொரு தாசில்தார் கடத்தப்பட்டு விட்டதாக செய்தி வந்ததும், அதே எடிட்டர் எதையோ கணித்தவர் போல தலைப்புச் செய்தி பக்கத்தை கொஞ்ச நேரம் நிறுத்தி வையுங்கள் என்கிறார். பார்க்கும் நமக்கும் எதிர்பார்ப்பு எகிறுகிறது. சரிதான், நாம் எதிர்பார்த்தது போலவே 15 தாசில்தார்கள் கடத்தப்படுகிறார்கள். அதை ரமணாதான் செய்திருப்பார் என்பதை உணர முடிந்தாலும், இவ்வளவு பெரிய வேலையை அவர் எப்படிச் செய்தார், என்ன காரணமாக இருக்கும் என்று தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறோம். மூன்றாவது நாளில் கடத்தப்பட்டவர்கள் அத்தனை பேரும் விடுதலை செய்யப்படுகிறார்கள். ’என்னடா இது, வேண்டாத வேலை!’ என்று நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கும்போதே, விடுதலை செய்யப்பட்டவர்கள் 14 பேர்தான், அதில் ஒருவர் கொலை செய்யப்பட்டுவிட்டார் என்கிறார்கள். இன்னும் ஆர்வம் எகிறுகிறது. அடுத்த கொஞ்ச நேரத்தில் அவர்கள் எதற்காக கடத்தப்பட்டார்கள், ஏன் விடுதலை செய்யப்பட்டார்கள், ஒருவர் ஏன் கொலை செய்யப்பட்டார் என்பதற்கான அடிப்படை காரணம் கன்வின்சிங்காக சொல்லப்பட்டு விடுகிறது. ஆஹா, அடுத்த பிராஜக்ட் என்னவென்று நாம் ஆர்வமாகிறோம். ரமணா | `சினி'ஸ்கோப் 04 அடுத்து, புரொஃபசரின் வீடும், அவரது வளர்ப்புக் குழந்தைகளும் அறிமுகப்படுத்தப்படுகின்றன. கொஞ்ச நேரத்திலெல்லாம் ஒரு புத்திசாலித்தனமான கான்ஸ்டபிள் சரியான ரூட்டில் துப்பறியத் தொடங்கிவிடுகிறான். அடுத்த கொஞ்ச நேரத்தில் இரண்டாவது கடத்தலுக்கான முன்னறிவிப்பு வருகிறது. அடாடா, முன்னறிவிப்புக் கொடுத்துச் செய்யுமளவுக்கு தில்லாலங்கடியாக இருப்பார் போலிருக்கிறதே என்று நிமிர்ந்து உட்கார்ந்து, எந்தத் துறை அதிகாரிகள் கடத்தப்பட போகிறார்களோ என்று திரைக்கதாபாத்திரங்களோடு சேர்ந்து, நமக்கும் பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. ஆனால், எல்லோரும் வியக்கும் வண்ணம் போலீஸ்துறையிலிருந்தே ஆட்களைத் தூக்கிவிடுகிறார்கள். இப்படியே படம் முடியும் வரை, ஒவ்வொரு ஐந்து நிமிடத்துக்கும் ஓர் எதிர்பாராத சுவாரசியத்தைக் கொண்டிருந்தது இந்த படம்! அழகி: ஒரே வாக்கியத்தில், வாழ்வின் மொத்தக் காதலையும் தந்துவிடுகிறாள் | `சினி'ஸ்கோப் 02 | ஆதி தாமிரா குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இடம், ரமணாவின் முன்கதையாக வரும் பிளாஷ்பேக் காட்சிகள். 20 நிமிடம் வரும் அந்தக் காட்சிகள், படத்தின் ஆதார நோக்கத்தைத் தாங்கி நின்றன. பைலிங் ஒர்க்கால், ஒரு பெரிய அப்பார்ட்மெண்டே சரிந்து நூற்றுக்கணக்கானோர் இறப்பார்கள், தடுக்க வேண்டும் என்று பதற்றத்தோடு ஓர் எஞ்சினியர், பத்ரியைக் கேட்கிறான். பத்ரியின் பதில் ஒரு குற்றத்திலிருந்து தப்பிப்பதற்காக இன்னொரு பெருங்குற்றத்தைச் செய்யத் தயாராகும் குரூர மனநிலையை வெளிப்படுத்தி, நம்மைப் பதறவைக்கிறது. அதன் முடிவில் மனைவி, குழந்தையோடு அனைத்தையும் இழந்து நிற்கும் ரமணாவிடம், அவர்களின் நினைவாக எஞ்சி இருப்பது ஒரு ஸ்கேன் ஃபிலிம் மட்டுமே என்பது ஒரு துயரக் கவிதையாக இருக்கிறது! ரமணா | `சினி'ஸ்கோப் 04 இவற்றுக்கூடாக, வளர்ப்புக் குழந்தைகளின் பின்னணிக் கதை, புரொஃபசரின் நெட்வொர்க் உருவான விதம், இந்தக் கடத்தல் கதையிலிருந்து வேறுபட்ட ஒரு மருத்துவமனை ஊழல் காட்சி, அதற்கான காரணம், பி.டபிள்யூ.டி துறைக் கடத்தலுக்கு முந்தைய ரேஷன் ஊழியர்களின் அட்டகாசங்கள் என வரிசையாக சுவாரசியங்களுக்கும், திருப்பங்களுக்கும் பஞ்சமே இல்லாத கதையமைப்பு. படத்தின் கதை, திரைக்கதையை எழுதி இயக்கியது ஏஆர்.முருகதாஸ். அவரது இரண்டாவது படம் இது. அவரது திரைப்பயணத்தில் இதற்குப் பிறகு கஜினி, துப்பாக்கி உட்பட குறிப்பிடத் தகுந்த சில படங்களைத் தந்திருந்தாலும், ரமணாவைப் போன்ற ஓர் உயரத்தை அவர் தொடவில்லை என்று தாராளமாகச் சொல்லலாம். புரட்சிக்கலைஞர் விஜயகாந்த், ரமணா பாத்திரத்துக்கு அத்தனைக் கச்சிதமாகப் பொருந்திப் போயிருந்தார். கமல்ஹாசன், ரஜினிகாந்தைக் கூட நம்மால் அந்தப் பாத்திரத்தில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குச் சிறப்பாக இருந்தது அவருடைய பங்களிப்பு. பொதுவாக நாம் விஜயகாந்தை ஒரு தேர்ந்த நடிகராக நினைவுகூராமல், ஒரு கமர்ஷியல் ஆக்சன் ஹீரோவாகவே சுருக்கிவிடுகிறோம். ஆனால், ஒரு நல்ல நடிகராக பல புதிய முயற்சிகளைத் தொடக்கத்திலிருந்தே அவர் செய்து வந்திருக்கிறார். வைதேகி காத்திருந்தாள், செந்தூரப்பூவே, புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், வானத்தைப்போல போன்ற வித்தியாசமான வரிசையில் ரமணாவுக்கும் இடமுண்டு. மரணதண்டனையை அமைதியாகவும், உறுதியாகவும் ஏற்றுக்கொண்டு, அதனால், எதிர்ப்பின் சின்னமாக மாறியவர் லிபியாவின் உமர் முக்தார். அவரது கதையான லயன் ஆஃப் தி டெஸர்ட் (Lion of the Desert) திரைப்படத்தின் நெகிழ வைக்கும் தூக்குத் தண்டனைக் காட்சிக்கு இணையாக, இந்தப் படத்தின் இறுதிக் காட்சியும் ஒப்பிடப்பட்டு பாராட்டப்பட்டது. அதற்கு விஜயகாந்தின் கம்பீரமே காரணமாக அமைந்தது எனலாம். பஞ்சதந்திரம்: கதையை விடுங்க பாஸ், கிரேஸியின் ஆட்டம் இருக்கே. ஸ்ட்ரெஸ் பஸ்டர்! | `சினி'ஸ்கோப் 03 விஜயகாந்தின் மனைவியாக சிம்ரன் நடித்திருந்தார். யூகி சேது, வாய்ப்பு மறுக்கப்படும், ஆர்வமிக்க ஒரு கான்ஸ்டபிளாக சிறப்பாக நடித்திருந்தார். நடிகர் விஜயனின் அனுபவமிக்க நடிப்பு, வில்லன் பத்ரியின் பாத்திரத்துக்கு வலு சேர்த்திருந்தது. மேலும், ரியாஸ்கான், ராஜேஷ், ரவிச்சந்திரன், முகேஷ் ரிஷி போன்றோர் நடித்திருந்தனர். இசை இளையராஜா. பக்கத்து வீட்டுப் பாட்டியாக வரும் தேனி குஞ்சரம்மாள், தேவகியிடம் சொல்லும் தத்துக் குழந்தைகள் குறித்தக் கதை நம்மை நெகிழ வைத்து, கண்ணில் நீர் பூக்க வைக்கும் நேரத்தில் தொடங்குகிறது, ‘வானவில்லே’ பாடல். மனதைக் கரைக்கும் ஓர் அருமையான பாடல். பழநிபாரதியின் வரிகளைப் பாடியது ஹரிஹரன் மற்றும் சாதனா சர்கம். ஒரு பெரும் டிராஜிடிக்கு முன்னால், எத்தகையை மகிழ்ச்சி இங்கே கலைக்கப்படப் போகிறது எனும் வலியை உணர வைப்பதற்காக எழுதப்பட்ட பாடல், ’வானம் அதிரவே’! அது பிளாஷ்பேக்கில் வருகிறது. மு.மேத்தா எழுதிட அதைப் பாடியவர்கள் உன்னிகிருஷ்ணன், சாதனா சர்கம் மற்றும் பவதாரிணி. பின்னணி இசை படத்தை வேறொரு தளத்துக்குக் கொண்டு போயிருந்தது. இளையராஜா பாடிய, ‘ஊருக்கொரு கட்சியும்’, ஹரிஹரன் பாடிய ’வெண்ணிலவின் பேரை மாற்றவா’ போன்ற ஆல்பத்திலிருந்த ஒரு சில பாடல்கள் படத்தில் இடம்பெறவில்லை. ரமணா | `சினி'ஸ்கோப் 04 படத்தின் ஒளிப்பதிவு எம்.எஸ்.பிரபு. படம் நெடுக படத்தின் தன்மை கொஞ்சமும் கெட்டுப்போகாமல் கொண்டு போயிருந்தார். படத்தொகுப்பு சுரேஷ் அர்ஸ். மிகச்சிறப்பான பங்களிப்பைச் செய்திருந்தார். சிறையில் தாக்கப்படும் மகனைப் பார்க்க வரும் கலைராணியின் காட்சி எடிட்டிங்கால் வீரியமாகியிருந்தது. ஆஸ்கர் ஃபிலிம்ஸ் சார்பாக இந்தப் படத்தை தயாரித்தவர் வி.ரவிச்சந்திரன். இத்தனைச் சிறப்புகளை அடுக்கினாலும், படத்தில் ஒரு சில அபத்தமான காட்சிகள் இருந்தன என்பதை மறுக்க முடியாது. சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் கடைசிவரை எந்த விசாரணையும் செய்யாமல், ஒரு அறைக்குள்ளேயே உட்கார்ந்து கடைசி பேசிக் கொண்டிருந்தது ஒரு குறைதான். அதுவும் ஐந்து பேரும் ஒரே மாதிரியான ஹைட்டு, வெயிட்டில், தொப்பையோடு பொம்மைகள் போல காட்சியளித்தது கொஞ்சம் இந்தக் கதைக்குப் பொருத்தமற்றிருந்தது. குறிப்பாக ஓரிரு இடங்கள் நம்மைச் சிரிப்புக்கு ஆளாக்கின. தொடக்கத்தில் 15 தாசில்தார்கள் கடத்தப்பட்ட முதல் சம்பவத்தில், ஒரு காவல் அதிகாரியிடம் ஒரு காவலர் சொல்கிறார், ’சார் நாம் உடனடியாக மீதமிருக்கும் தாசில்தார்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும்’. அந்த நியாயமான யோசனைக்கு அந்த அதிகாரியின் பதிலைப் பாருங்கள்: ’அப்படியானால் இந்த 15 பேரை அப்படியே விட்டுவிட வேண்டும் என்று சொல்கிறாயா? அவங்க உயிருக்கு ஏதாவது ஒரு ஆபத்து என்றால் யார் பொறுப்பாவது?’ என்று திட்டுகிறார். அந்த காவலர் சொன்னது என்ன, இந்த அதிகாரி சொல்வது என்ன? போலவே, முதல் தாசில்தார் கொல்லப்பட்ட பின்னர், கமிஷனர் வந்து லோக்கல் அதிகாரியை கேட்கிறார், ’மூன்று மணி நேரமாக இந்த பாடி இங்கே தொங்கிக் கொண்டிருக்கிறது. இறக்காமல் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?’ அதற்கு அவரது பதில்: ‘இவர்தான் தாசில்தார் என்று இப்போதுதான் சார் தெரிந்தது’. அவர் என்ன கேள்வி கேட்கிறார், அதற்கு இவர் என்ன பதில் சொல்கிறார் பாருங்கள். இப்படிச் சில இடங்கள் இருந்தாலுமே, படத்தின் ஓட்டம் எங்குமே தடைபடாமல் பரபரவென செல்கிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. லஞ்ச ஊழல் என்பதை நாம் நார்மலைஸ் செய்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில், லஞ்ச ஊழலின் பின்விளைவுகள் எத்தனை ஆபத்தானது என்பதை ஒரு கமர்ஷியல் படத்தில், வலிக்கும்படியாக காட்சிப்படுத்திய வகையில், ரமணாவுக்கு நிச்சயம் ஒரு முக்கியமான இடம் உண்டு. (தொடரும்) முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://cinema.vikatan.com/kollywood/a-cinema-series-on-classic-cinema-part-4-ramana




