லக்னோ, உத்தரப் பிரதேச மாநில பிரபல ஹரியான்வி பாடகரும் யூடியூபருமான அங்கித் பாலியான் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த 2 பேரை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர். ஜிம் வெளியே நடந்த கொடூரம் உத்தரப் பிரதேச மாநிலம், ஷாம்லி மாவட்டத்தில் உள்ள பண்டிகேரா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அங்கித் பாலியான் (வயது 32). அங்கித் பிரபல ஹரியான்வி நாட்டுப்புறப் பாடகர், நடிகர் மற்றும் யூடியூபர். இவர் வழக்கம்போல கடந்த (புதன்கிழமை) அன்று, ஷாம்லி பகுதியில் உள்ள உடற்பயிற்சி மையத்திற்கு சென்றார். அவர் பயிற்சி முடிந்த பின்னர் வெளியே வந்தபோது 2 பைக்கில் வந்த 4 மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த படுகொலைக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டமைப்பைச் சேர்ந்த 'கோகி கேங்' பொறுப்பேற்றது. சிறையில் கொல்லப்பட்ட தங்களது கும்பல் தலைவன் ஜித்தேந்தர் மான் குறித்து அங்கித் அவதூறாகப் பாடல் பாடியதே இந்த கொலைக்கு காரணம் என அந்த கும்பல் சமூக வலைதளத்தில் பதிவிட்டது. துப்பாக்கி சண்டை இந்த கொலையில் தொடர்புடைய 4 பேரை பிடிக்க போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இன்று (திங்கட்கிழமை) அதிகாலை சுமார் 4 மணியளவில், ஷாம்லியின் கைரானா சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த 2 பேரை சந்தேகத்தின்பேரில் நிறுத்த முயன்றபோது, அவர்கள் போலீசாரை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டுவிட்டு தப்பிக்க முயன்றனர். இதையடுத்து தற்காப்பிற்காக போலீசார் நடத்திய அதிரடி பதில் தாக்குதலில், 2 பேரும் தோட்டா பாய்ந்து படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். விசாரணையில் அவர்கள் கூலிப்படையைச் சேர்ந்த மோஹித் (வயது 22) மற்றும் சுமித் (வயது 24) என்பதும் பாடகர் கொலை வழக்கில் சம்மந்தப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இந்த துப்பாக்கிச் சூட்டில் ஹர்விந்தர் மற்றும் பிரதீப் என்ற 2 போலீசாரும் காயமடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பறிமுதல் -அடுத்தகட்ட நடவடிக்கை என்கவுண்டர் நடந்த இடத்திலிருந்து 3 பிஸ்டல்கள், தோட்டாக்கள் மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கொல்லப்பட்ட 2 பேர் மீதும் தலா ரூ.50,000 வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த கொலையில் மொத்தம் 4 பேர் ஈடுபட்டுள்ள நிலையில், தப்பியோடிய சத்யம் மற்றும் ஆர்யன் ஆகிய மற்ற 2 பேரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். போலீசாரின் இந்த உடனடி நடவடிக்கைக்கு அங்கித் பாலியானின் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் நன்றி தெரிவித்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/uttar-pradesh-two-shot-dead-in-haryana-singer-murder-case




