"என் கணவர், தாய், தந்தை, சகோதரி என என் ஒட்டுமொத்த குடும்பமும் என் கண்முன்னேயே அந்தச் சகதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்கள். எதுவும் மிஞ்சவில்லை." கண்ணீரும் செம்மண்ணும் கலந்து வழியும் முகத்தோடு, நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தைச் சேர்ந்த கல்பனா மல்லா கதறும் இந்தக் குரல் அங்கு நிகழ்ந்த பேரழிவின் இரக்கமற்ற சாட்சி. நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் புதன்கிழமை ஏற்பட்ட திடீர் பேரழிவு வெள்ளத்தால் கிராமங்கள் தடம் தெரியாமல் அழிந்துபோயின. நிலநடுக்கம் ஏற்பட்டது போன்ற பயங்கர அதிர்வுடன் பெருக்கெடுத்து வந்த சேறும் சகதியுமான வெள்ளப்பெருக்கில் சிக்கி, இதுவரை 320-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. 1500-க்கும் மேற்பட்டோர் நிலவரம் என்னவென்று தெரியாமல் காணாமல் போயுள்ளனர். நேபாள் வெள்ளம் இந்த வெள்ளப் பேரழிவு குறித்து மிரட்சியுடன் தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த கல்பனா மல்லா, ``மாடி வீட்டின் கூரை மீது ஏறி நின்றதால் நானும் என் மகனும் மட்டும் நூலிழையில் உயிர் பிழைத்தோம். என் தங்கைக்கு எனது போனைக் கொடுத்திருந்தேன். இப்போது தொடர்பு கொள்ளவே முடியவில்லை. அவளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருப்பாளோ என்று பதறுகிறது. இப்போது என் மகனுக்கும் உடல் நலமில்லை" எனக் கண்ணீர் மல்கக் கூறுகிறார். மறுபுறம் கோமா பண்டிட் என்ற பெண்மணி, "வீடு வாசலைத் தவிர்த்து, என் உழைப்பில் கிடைத்த 10 மூட்டை கடுகு, டன்கள் கணக்கிலான சோளம், நெல் என அனைத்தும் வெள்ளத்தோடு போயின. என்னிடம் இப்போது மிச்சமிருப்பது இந்த வெறுமை மட்டும்தான்" என நிலைகுலைந்து நிற்கிறார். காத்மாண்டுவில் உள்ள டி.யு மருத்துவமனை வாசலில், காணாமல் போன தங்கள் அன்புக்குரியவர்களின் படங்களைக் கையில் ஏந்தியபடி நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தவித்துக்கொண்டிருக்கின்றன. ``வாகனம் ஓட்டும் பணிக்காக ரசுவா பகுதிக்குச் சென்ற என் கணவர் நேற்றிரவு 8 மணி வரை பேசினார். காலை முதல் தொலைபேசி அணைக்கப்பட்டு வருகிறது," எனத் தன் கைபேசியில் உள்ள புகைப்படத்தைக் காட்டி ராம குமாரி ஸ்ரேஸ்தா அழுவது காண்போரின் நெஞ்சைப் பிழிகிறது. நேபாள் வெள்ளம் மணி ஸ்ரேஸ்தா பிஷ்வா என்பவரோ, தன் தம்பி, மைத்துனன், மாமா என நான்கு உறவுகளை ஒரே நாளில் இழந்துவிடுவோமோ என்ற அச்சத்துடனும், அவர்களை மீண்டும் காண்போம் என்ற நம்பிக்கையுடனும் காத்திருக்கிறார். "நான் வீட்டிலிருந்து கிளம்பிய ஒரு மணி நேரத்தில் நிலநடுக்கம் போன்ற ஒரு பெருஞ்சத்தம் கேட்டது. என் இல்லம் தரைமட்டமாகிவிட்டதை புகைப்படத்தில் பார்த்து அதிர்ந்துபோனேன். என் சகோதரி தேச்சன் தமாங் உயிருடன் மீட்கப்பட 10 சதவீத வாய்ப்பாவது கிடைக்க வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறேன்," என்கிறார் பயண வழிகாட்டியான சோனம் தோர்ஜி. வியாழக்கிழமை அதிகாலை முதல் மீட்புக்குழுவினர் இடுப்பளவு சேற்றில் நடந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வீடுகளை இழந்து தவிக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவு, தற்காலிக இருப்பிடம் மற்றும் அவசர மருத்துவ உதவிகள் உடனடியாகத் தேவைப்படுகின்றன. இயற்கையின் இந்த திடீர் சீற்றத்தால் நேபாளத்தின் எல்லைக் கிராமங்கள் முழுதும் இப்போது மரண அமைதியும், உறவுகளை இழந்த மனிதர்களின் ஓலமும் மட்டுமே எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன. நேபாள வெள்ளப்பெருக்கு: 160 பேர் பலி; 100 பேர் மாயம்; இந்தியர்களின் நிலை என்ன? | Latest Update முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/environment/disasters/nepal-flood-relatives-search-for-bodies-in-waist-deep-mud



