சென்னை, கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி தலைவர் ஈ.ஆர். ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- இந்தியாவிலேயே லாரி தொழிலுக்கு முன்னோடியாக இருக்கும் மாவட்டம் நாமக்கல். இன்று நாமக்கல், சங்ககிரி, திருச்செங்கோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லாரி தொழிலில் அதிக அளவில் ஈடுபட்டிருக்கிறார்கள். கொங்கு மண்டலத்தில் பிரதான தொழிலாகவே லாரி தொழில் இருந்து வருகிறது. குறிப்பாக நாமக்கல்லில் இந்தியாவில் இருந்து எந்த தொழிற்சாலைகளுக்கு பொருட்கள் ஏற்றி செல்ல வேண்டும் என்றாலும் அதற்கு உண்டான கனரக வாகனங்களின் பிரசித்தி பெற்ற இடமாக நாமக்கல் திகழ்கிறது. அதுமட்டுமின்றி தென்னிந்தியாவிற்கு சப்ளை செய்யப்படும் சமையல் கேஸ் வாகனங்கள் எல்பிஜி லாரிகள் நிறைந்த பிரதான பகுதியாகவும் நாமக்கல் உள்ளது. இம்மாவட்டத்தை சேர்ந்த திருச்செங்கோடு ரிக் வாகனங்கள் அகில உலக அளவில் தன் ஆதிக்கத்தை செலுத்தும் சிறப்பு மிக்க பகுதியாகவும் உள்ளது. அதேபோல சேலம் மாவட்டம், சங்ககிரியில் பொருட்களை ஏற்றிச் செல்லும் டாரஸ் லாரிகள் நிறைந்த பகுதியாகவும் உள்ளது. இதுபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் லாரி தொழிலை நம்பி பல லட்சக்கணக்கான குடும்பங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வாழ்ந்து வருகின்றனர். இத்தொழிலை நம்பி அரசு வங்கிகள், அரசு உதவி பெறும் வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள் லாரிகள் மூலம் வருவாய் ஈட்டி வருகிறது. இவ்வளவு சிறப்பும், பலமும் கொண்ட லாரி தொழில் பிற தொழில்களை காட்டிலும் அரசுக்கு முன்கூட்டியே வரி செலுத்தி வருமானத்தை தருகிற நிலையில் இருக்கிறது. இத்தொழில் நன்றாக இருந்தால் தான் நடுத்தர ஏழை மக்கள் பயன்படுத்தும் அன்றாட பொருட்களின் விலையை கட்டுக்குள் கொண்டு வர இயலும். அதனால்தான் போக்குவரத்து துறைக்கு என்று தனியாக அமைச்சகம் செயல்படுகிறது. லாரி உரிமையாளர்கள் லாரி தொழிலில் உதிரிபாகங்கள் விலை உயர்வு, வளைகுடா போரின் காரணமாக டீசல் விலை உயர்வு, ஆன்லைன் வரிவிதிப்பு, காலாவதியான சுங்கச்சாவடி, நடைமுறையில் உள்ள சுங்கச்சாவடி, ஜிபிஎஸ் (வாகன கண்காணிப்பு கருவி) கட்டாயம் பொருத்த வேண்டும் என்ற உத்தரவு, ஓட்டுனர்கள் பற்றாக்குறை போன்றவற்றால் லாரி தொழில் பாதிப்படைந்து இருக்கிறது. இதனைத் தாண்டி இன்றைய லாரி உரிமையாளர்களின் கோரிக்கையான FC மற்றும் புதிய வாகனங்கள் பதிவு செய்யும் RC உள்ளிட்ட ஆவணங்கள் தபால் வழியில் தருவதை தவிர்த்து முன்பு போல் நேரடியாக தர வேண்டும் என்ற கோரிக்கை இப்படி எத்தனையோ கோரிக்கைகளை லாரி உரிமையாளர்கள் வைத்துக் கொண்டிருக்க அவர்களுக்கும் அரசுக்கும் ஏதோ ஒரு இணைப்பு இல்லாமல் மாற்றான் தாய் பிள்ளைகள் போல் அரசு வருவாயை பெற்றுக்கொண்டு லாரி உரிமையாளர்களை கண்டுகொள்ளாத நிலையில் உள்ளது. லாரி போக்குவரத்து இதனைப் போக்க லாரி சங்கங்களுடன் போக்குவரத்து துறை அமைச்சர் இணக்கமான போக்கை கையாள வேண்டும். இப்பொழுது புதிதாக பொறுப்பேற்றுள்ள அதுவும் போக்குவரத்து நகரத்தின் மையப் பகுதியில் உள்ள போக்குவரத்து துறை அமைச்சர் தான் பொறுப்பேற்றதிலிருந்து லாரி சங்கங்களை சந்திக்கவே இல்லை. சம்பந்தப்பட்ட லாரி தொழில் பிரச்சினைகளைப் பற்றி ஆய்வுக் கூட்டங்களை உடனே நடத்த வேண்டும். லாரி சங்கங்களையும், துறை அதிகாரிகளையும் அழைத்து கருத்துக்களைக் கேட்டு பிரச்சினைகளை தீர்க்க அமைச்சர் முயற்சிக்க வேண்டும். போக்குவரத்து துறை அமைச்சர் இதற்கு மேலும் தாமதிக்காமல் லாரி தொழிலை காப்பாற்ற முன்வர வேண்டும். லாரி போக்குவரத்தை நம்பி பல்வேறு துறை சார்ந்த தொழில்களும் இயங்குகின்ற காரணத்தால் ஏற்படுத்தும் தாமதம் மற்ற தொழில்களையும் பாதிக்கும். தமிழகத்தினுடைய பொருளாதார வளர்ச்சி தடைபட முக்கிய காரணமாக இது அமைந்து விடும். போக்குவரத்து துறை எந்த அளவிற்கு பயணிகள் பேருந்து மீது கவனம் செலுத்துகிறதோ அதைவிட அதிகமான கவனத்தை லாரி போக்குவரத்தின் மீதும் செலுத்த வேண்டும். தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி தன் கையில் இருக்கிறது என்பதை உணர்ந்து போக்குவரத்து துறை அமைச்சர் துரிதமாக செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/the-problem-of-lorry-workers-must-be-resolved-immediately-er-easwaran




