புதுடெல்லி, ‘அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்’ திரைப்படத்திற்கு பிறகு ‘மார்வெல் சினிமேட்டிக் யூனிவர்ஸ்’ வரிசையில் பல்வேறு திரைப்படங்களும், வெப் தொடர்களும் வந்திருந்தாலும், ரசிகர்களை எதுவும் பெரிதாக திருப்திப்படுத்தவில்லை. அயர்ன் மேன், கேப்டன் அமெரிக்கா போன்ற ஓ.ஜி. சூப்பர் ஹீரோக்கள் இல்லாதது, பலவீனமான திரைக்கதை போன்ற காரணங்களால் கடந்த சில வருடங்களாக ‘மார்வெல்’ வரிசை திரைப்படங்கள் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. இருப்பினும் ‘ஸ்பைடர் மேன்’ மீது மட்டும் ரசிகர்களுக்கு எப்போதுமே ஒரு தனி பிரியம் உண்டு. குறிப்பாக 2021-ம் ஆண்டு வெளியான ‘ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம்’ திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. டோபி மெகுவய்ர், ஆண்ட்ரூ கார்பீல்ட் மற்றும் டாம் ஹாலண்ட் என மொத்தம் 3 ஸ்பைடர் மேன்கள் ஒரே படத்தில் தோன்றி, ரசிகர்களை குஷிப்படுத்தினர். இந்நிலையில், ‘எம்.சி.யூ.’ வரிசையில் சமீபத்தில் வெளியான ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ திரைப்படம், மார்வெல் ரசிகர்களுக்கு சரியான தீனியாக அமைந்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் இந்த படம் சக்கைப் போடு போட்டது. இந்திய திரைப்படங்களுக்கு இணையாக ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். வழக்கமாக இந்தியாவில் ஹாலிவுட் படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் கூட்டம் உண்டு. குறிப்பாக 'அவெஞ்சர்ஸ்', 'அவதார்', 'ஸ்பைடர் மேன்' போன்ற பிரமாண்ட படங்கள் வெளியாகும்போது அந்த வரவேற்பு இன்னும் அதிகமாக இருக்கும். இப்போது அந்த ரசிகர்களின் ஆதரவுடன் இந்திய பாக்ஸ் ஆபீஸில் புதிய வரலாற்றையே எழுதியிருக்கிறது டாம் ஹாலண்ட் நடித்துள்ள ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே'. இந்தியாவில் ரூ.500 கோடி நிகர வசூலைக்கடந்த முதல் ஹாலிவுட் படம் என்ற சாதனையை இது படைத்துள்ளது. கடந்த ஜூலை மாதம் 30-ந்தேதி வெளியான இந்தப் படம், முதல் நாளில் இருந்தே வசூலில் வேகம் காட்டியது. முதல் வாரத்தில் ரூ.334.75 கோடியையும், இரண்டாவது வாரத்தில் ரூ.108.65 கோடியையும் வசூலித்தது. மூன்றாவது வாரத்தில் மேலும் ரூ.32 கோடி கிடைத்தது. அடுத்தடுத்த வாரங்களில் வசூல் வேகம் குறைந்தபோதும், திரையரங்குகளில் படம் 'ஹவுஸ் புல்'. அதன் பலனாக ஏழு வாரங்களில் இந்தியாவில் சுமார் ரூ.500 கோடி நிகர வசூலை எட்டியுள்ளது. மொத்த வசூல் சுமார் ரூ.598 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் மட்டுமின்றி இந்தி, தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளிலும் இந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆங்கில பதிப்பு சுமார் ரூ.276 கோடியையும், இந்தி பதிப்பு ரூ.181 கோடிக்கும் அதிகமாகவும் வசூலித்துள்ள நிலையில், தமிழ் பதிப்பும் ரூ.25 கோடிக்கும் அதிகமான வசூலைப் பதிவு செய்துள்ளது. இதற்கு முன்பு இந்தியாவில் அதிக வசூல் செய்த ஹாலிவுட் படங்களின் பட்டியலில் 'அவதார்: தி வே ஆப் வாட்டர்', 'அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்', 'அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார்'. ‘ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம்' போன்ற படங்கள் முன்னணியில் இருந்தன. தற்போது அவற்றையெல்லாம் கடந்து, ரூ.500 கோடி என்ற புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே. இந்தியா மட்டுமின்றி உலக அளவிலும் படத்திற்கு பிரமாண்ட வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படத்தின் உலகளாவிய வசூல் சுமார் 2.4 பில்லியன் அமெரிக்க டாலர்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/spider-man-brand-new-day-creates-history-grossing-rs-500-crore-in-india


