சேலம் திருவீதி ஆதிநாராயணன் செட்டியார் (1874 - 1937 ). மெட்ராஸ் மாகாண சட்ட கவுன்சில் கூட்டங்களில் பல்வேறு மக்கள் பிரச்னைகளுக்காக ஓங்கி குரல் கொடுத்தவர் சேலம் திருவீதி ஆதிநாராயணன் செட்டியார். காவிரி - மேட்டூர் திட்டத்தின் சட்டமன்ற நிகழ்வுகளில் இவருக்கு குறிப்பிடத்தக்க பங்கு உண்டு. அவரது வாழ்க்கை வரலாற்று நூலை மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ பி ஜே அப்துல் கலாம் அவர்களின் வழிகாட்டுதலின்படி கோவை கொடிசியா அரங்கில் “சிந்தனைக் கவிஞர் கவிதாசன்” அவர்கள் சமீபத்தில் வெளியிட்டார். இந்த நூலின் மூலம், திருவீதி ஆதிநாராயணன் செட்டியார் அவர்கள் குறித்த பல விவரங்களை அறிந்து கொள்ள முடிகிறது. அன்னார் அவர்கள் 1874 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி பிறந்தார். அவரின் தந்தையார் பெயர் டி. பட்டாபிராம செட்டியார். ஆதிநாராயணன் கும்பகோணத்தில் பள்ளிப் படிப்பு படித்தார். சென்னை கிறித்துவக் கல்லூரியில் மேற்படிப்பு. அவர் மனைவி பெயர் ஆதிலட்சுமி. மகன் ராதாகிருஷ்ணன். குடும்பத்துடன் அயர்லாந்து சென்று அங்கு டிரினிட்டி கல்லூரியில் சட்டப்படிப்பு படித்து அயர்லாந்து தேசிய பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பில் பட்டம் பெற்றார். மேலும் டப்ளினிலும், லண்டனிலும் படித்து பாரிஸ்டராக மாறினார். மெட்ராஸ் நீதிமன்றத்தில்1918-ல் தம்மை வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டாலும் வக்கீல் தொழிலைச் செய்யவில்லை. ராஜாஜியுடன் நட்பு கிடைத்து, இந்திய சுதந்திரப் போரில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். ராஜாஜி மற்றும் காந்திஜியுடன் நட்பு 1914 முதல் 1919 வரை அயர்லாந்தில் இருந்து விட்டு இந்தியா திரும்பினார். 1921-ல் சேலம் வந்த மகாத்மா காந்தி, ஆதிநாராயணன் செட்டியாரின் இல்லத்திற்கு விஜயம் செய்தார். சேலம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிக்கு தலைவராக இருந்து காங்கிரஸ் மாநாடுகளை நடத்தினார் ஆதிநாராயணன் செட்டியார். 1918-ல் சேலத்தில் நடந்த மாநாடு பெரும் வெற்றி பெற்றது. ராஜாஜி இவரை அதற்காக பெரிதும் புகழ்ந்தார். சைமன் கமிஷன் நிராகரிப்பு போராட்டத்தில் அவர் முன்னிலையில் நின்றார். 1923 லிருந்து 1930 வரை சுமார் ஏழு வருடங்கள் ஆதிநாராயணன் செட்டியார் மெட்ராஸ் சட்ட மேலவையில் வட ஆற்காடு மாவட்ட பிரதிநிதியாக தொடர்ந்து இரண்டு முறை இடம் பெற்றார். சட்ட மேலவை உறுப்பினராக அவர் திறம்பட பல்வேறு பணிகளை ஆற்றினார். அந்த வருடங்களில் தான் மேட்டூர் அணை கட்டப்பட்டு வந்தது. ராமானுஜத்துடன் ஆதிநாராயணன் செட்டியார் சட்டப்பேரவையில் மேட்டூர் அணை குறித்த ஆக்கப்பூர்வமான பல விவாதங்களில் கலந்து கொண்டு பேசினார். மேட்டூர் அணை கட்டுவதற்கு சிமெண்ட் பயன்படுத்துவது என்ற கொள்கை முடிவை எதிர்த்து மிக தீவிரமாக தனது எதிர்ப்பை பதிவு செய்தார். இது குறித்து அவர் ஆற்றிய உரைகள் சட்டமன்ற விவாதங்களில் பதிவாகி உள்ளன! பல்வேறு விஷயங்கள் குறித்த விவாதங்களிலும் இவரது பங்களிப்பு பெருமளவில் இருந்துள்ளது. மேலும் சிறை கைதிகள் படிக்க புத்தகங்கள் உள்ளிட்ட எழுது பொருள்கள் கொடுக்க அரசாங்கம் முன் வந்ததை வரவேற்றார். விவசாயிகளின் நண்பனாக விளங்கியவர். ஆங்கில அரசாங்கம் பொதுமக்களின் நலன்களுக்கு எதிராக அவர்களது உரிமையை பாதிக்கும் விஷயங்களை முன்னெடுக்கும் போது, அவர் அரசை எதிர்த்துப் போராட தயங்கவில்லை. சட்டமன்றத்தில் அவர் எழுப்பிய கேள்விகள் மற்றும் உரைகள் இந்திய மக்களின் நலனில் அவருக்குள்ள அக்கறையை வெளிப்படுத்துகிறது. அன்றைய வட ஆற்காடு மாவட்ட விவசாயிகள் சம்பந்தப்பட்ட பாலாறு நீர் பாசன விஷயத்தில் அவர் காட்டிய முனைப்பு, கமிட்டி அமைப்பதில் அவர் காட்டிய தீவிரம் போன்றவை மிகவும் பாராட்டத்தக்க வகையில் அமைந்தன.1934 ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி நந்தி ஆற்றுக்கு அருகில் "மகா நந்தி" யில் நடைபெற்ற அகில இந்திய சுதேசி கண்காட்சியை திறந்து வைத்து ஆற்றிய உரையில் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு பல ஆலோசனைகளை குறிப்பிட்டு பேசினார். சிறப்பான ஒரு செய்தியாக ஆதிநாராயணன் செட்டியார் கணிதமேதை ராமானுஜத்தின் நண்பராகவும் திகழ்ந்தார். கணிதமேதை ராமானுஜத்துடன் நட்பு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ராமானுஜத்தின் நட்பு அவருக்கு கிடைத்தது. செப்டம்பர் 1916-ல் ஆதி நாராயணன், கணித மேதை ராமானுஜத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இதற்கு சாட்சியாக வழங்குகிறது. இவர்களுடன் கே.ஆனந்தராவ், ஆதனூர் சூரிய நாராயண சாஸ்திரி மற்றும் டென்னதி சூரிய நாராயணன் ஆகிய நண்பர்களும் உடன் இருந்த அபூர்வ புகைப்படம் இது. ராமானுஜத்துடன் ஆதிநாராயணன் செட்டியார் பின்னாளில் உடல் நலம் பாதிக்கப்பட்ட கணித மேதை ராமானுஜனை தனது மயிலாப்பூர் எட்வர்ட் “எலியட்ஸ் ரோடு” பங்களாவில் தங்க வைத்து அவருக்கு சகல வசதிகளை செய்து கொடுத்து குணமடைய சிகிச்சை அளித்தார்.1919 ஏப்ரல் ஆறாம் தேதி ரௌலட் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடத்த முன் வந்த போது மெட்ராஸில் போராட்டம் நடத்த ராஜாஜி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அதில் ஆதிநாராயண செட்டியாரும் ஒரு உறுப்பினர். அவருடன் டாக்டர் பி.வரதராஜுலு நாயுடு, ஈ.வெ.ராமசாமி (பெரியார்), டாக்டர் T.S.S.ராஜன் மற்றும் திரு.வி.க ஆகியோரும் பங்கு பெற்றது குறிப்பிடத்தக்கது. சுதந்திர எழுச்சிப் போராட்டத்தில் ஆதிநாராயணன் செட்டியாரின் பங்கு அளப்பரியது. 1921- 22-ல் ராஜாஜி சிறையில் இருந்த போது “ஜெயில் டைரி” என்ற தலைப்பில் அவர் எழுதிய குறிப்புகள் பின்னாளில் புத்தகமாக வெளிவந்தது. அதில் ராஜாஜி தனது நண்பர் ஆதிநாராயணன் செட்டியாரை குறித்து பல இடங்களில் குறிப்பிட்டு எழுதி உள்ளார். பாரதியார் விஜயம் காந்திஜி 1919 மார்ச் மாதம் சென்னைக்கு வந்தபோது கதீட்ரல் சாலையில் உள்ள ராஜாஜியின் வீட்டில் 45 நாட்கள் தங்கினார். அப்போது ஒரு நாள் மதியம் 2 மணிக்கு காந்தியடிகளின் அறைக்குப் புயல் போல ஒருவர் நுழைந்தார். அவர்தான் மகாகவி சுப்பிரமணிய பாரதியார்! “மிஸ்டர் காந்தி, இன்று மாலை 5:30 மணிக்கு திருவல்லிக்கேணியில் ஒரு கூட்டத்தில் நான் பேச இருக்கிறேன். நீங்கள் அதில் கலந்து கொள்ள முடியுமா?” எனக் கேட்டதாக பல சான்றுகள் ஏற்கனவே பதிவாகியுள்ளன. தனது உதவியாளரிடம் கலந்து விட்டு தனக்கு அன்று மாலை வேறு ஒரு அலுவலை ஒப்புக் கொண்டுள்ளதாக காந்திஜி கூறி அந்தக் கூட்டத்தை “நீங்கள் நாளைக்கு தள்ளி வைக்க முடியுமா?” என்று பாரதியிடம் கேட்க அதற்கு பாரதியார் “சாத்தியமில்லை, மிஸ்டர் காந்தி நான் புறப்படுகிறேன். நீங்கள் துவங்க உள்ள போராட்டத்தை நான் ஆசீர்வதிக்கிறேன்” எனக் கூறிவிட்டு வேகமாக அறையை விட்டு சென்றதாக ஆதாரக் குறிப்புகள் உண்டு. காந்தி, ராஜாஜியிடம் இப்போது வந்த இந்த நபர் யார் என்று விசாரிக்க, அவர் “இவர் தான் சுப்பிரமணிய பாரதி” என்று கூற காந்திஜி, ராஜாஜியிடம்,“இவர் ஒரு பொக்கிஷம். இவரை நாம் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று கூறினாராம். அப்போது காந்தியுடன் அந்த அறையில் இருந்தவர்கள் ராஜாஜி, உதவியாளர் மகாதேவ தேசாய், தீரர் சத்தியமூர்த்தி, ரங்கசாமி ஐயங்கார், எழுத்தாளர் ராமசாமி (வ.ரா) மற்றும் இங்கு நாம் குறிப்பிடும் திருவாளர் ஆதிநாராயணன் செட்டியார். அன்றைய மெட்ராஸ் மாகாணம் என்பது தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கேரளா மற்றும் கர்நாடகத்தின் சில பகுதிகளை உள்ளடக்கிய பெரும் பகுதி. விவசாயிகள் கூட்டுறவு இயக்கம், கைத்தொழில்களை வளர்க்கும் பணி மற்றும் பெண்கள் தொழில் தொடங்கி முன்னேற வாய்ப்புகள் போன்றவற்றை முன்னின்று நடத்தினார். அணை ஓசை - 7 931-ல் மதுவிலக்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவரது பங்களா சேலம் நகரின் வடகிழக்கு பகுதியில் இருந்தது. அதற்கு “பாராமகால்” என்று பெயர். தமது செல்வத்தை தேச விடுதலைக்கு செலவழித்தார். ஆதிநாராயணன் செட்டியார் “ரூரல் லைஃப்” என்ற பத்திரிக்கை ஆசிரியராகவும் இருந்தார்.1937 நவம்பர் 5ஆம் தேதி காலமானார். அவரது பெரும் பங்கு சட்ட மேலவை மூலம் மேட்டூர் அணை கட்டுமானத்தில் பெரும் பங்கு வகித்தது. விவாதங்களில் கலந்து கொண்டு, தனது கருத்துக்களை தெளிவாக எடுத்துரைத்து ஆக்கப்பூர்வ பங்களிப்பை நல்கியதில் இவர் முக்கியமானவர். ஆதிநாராயணன் செட்டியார் அவர்களின் கொள்ளுப் பேரன் டாக்டர். V.G. மோகன் பிரசாத் தற்போது கோவையில் V.G.M.,ஹாஸ்பிடல் என்ற பன்னோக்கு மருத்துவமனை ஒன்றை நிறுவி நடத்தி வருகிறார். மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருந்தவர் இவர். அவரை நேர்காணல் செய்து உரையாடியதில் ஆதிநாராயணன் செட்டியார் குறித்த பல தகவல்களை பெற முடிந்தது, ஓர் நல்வாய்ப்பு! மேட்டூர் திட்டத்துக்கு எதிர்ப்பு 1927-ம் ஆண்டு மார்ச் மாதம் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில், மெட்ராஸ் மாகாண சட்டமன்றத்தில் “மைனர் இரிகேசன்” எனப்படும் சிறிய பாசனத் திட்டங்களுக்கு ரூ.13,27,200 நிதி ஒதுக்கீடு செய்வதற்கான தீர்மானம் தொடர்பாக பரவலான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதம், மேட்டூர் போன்ற பெரிய திட்டங்களுக்கே பெரும்பாலான நிதி செலவிடப்படும் நிலையில், கிராமப்புற விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு தேவைப்படும் சிறிய நீர்ப்பாசன திட்டங்கள் புறக்கணிக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகளோடு அமைந்திருந்தது நமக்கு வியப்பைத் தருகிறது. மேட்டூர் திட்டத்துக்கு எதிர்ப்புகள் இருந்தது விவாதங்களின் மூலம் நமக்குத் தெரிய வருகிறது. உறுப்பினர் ஆதி நாராயணன் செட்டியார் தீர்மானத்தை முன்மொழிந்து வைத்தவர். “மேட்டூர், பைக்காரா போன்ற பெரிய திட்டங்கள் முக்கியமாயினும், ஏழை விவசாயிகளுக்கு தேவையானது சிறிய பாசனத் திட்டங்களே” என்றார் அவர். அரசாங்கம் மிகுந்த வரி வசூலித்தாலும், குளங்கள் மற்றும் குடிமராமத்துக்கு உரிய பராமரிப்பு செய்யாததால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர் என்று கடுமையாக விமர்சித்தார். உதாரணமாக, வடஆற்காடு மாவட்டத்தில் சில பாசனப் பகுதிகளில் 18-லிருந்து 22 அடி உயரம் மணல் சேர்ந்து தூர் வாரப்பட வேண்டிய நிலையில் உள்ளது என்றும், பெரிய ஏரியான காவேரிப்பாக்கம் பாசன ஏரியில் சுமார் 18 அடிக்கு வண்டல் மண் படிந்துள்ளது, தூர் வார வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது என்று கடுமையாக சாடினார். 1927-28 ஆண்டுக்கான பட்ஜெட்டில் மிகக் குறைந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 75 ஆண்டுகளாக செப்பனிடப்படாமல் இருக்கிறதெனவும், அரசாங்கம் விவசாயிகளுக்கு ஆதரவாக இல்லை எனவும் குறை கூறினார். “அரசு, கலெக்டர்களை அழைத்து குளிர் நிறைந்த சூழலில் உதக மண்டலத்தில் ரகசிய மாநாடு போட்டு கூட்ட கவுன்சிலில் எடுத்த ஒருமனதான தீர்மானம் விவசாயிகளுக்கு ஆதரவாக இல்லை என்று கூறி விடலாம். இது எவ்வளவு காலம் தொடர முடியும்? கூட்டுறவு சங்கத்திடமும் கடன் வாங்கி விதை விதைத்தாலும் ஒரு விவசாயி அனைத்தையும் இழந்து அவரிடத்தில் இருந்து ஒரு சொட்டு ரத்தம் கூட கிடைக்காத நிலை வரும். மேலும் ஒரு விஷயத்தை கூற விரும்புகிறேன். பஞ்ச காப்பீட்டு நிதி உள்ளது என்று நம்புகிறேன். இந்த நிதியிலிருந்து எப்போதாவது யாருக்காவது உதவி பெறுவதற்கு வாய்ப்பு இதுவரை கிடைத்துள்ளதா? ஆனால் இந்த நிதி நல்ல நோக்கத்துடன் துவக்கப்பட்டது. பயன்படுத்தாமல் வெறுமனே இருந்தால் அவை இருப்பதன் பயன் என்ன? இந்த நிதியை ரத்து செய்துவிடலாம் என்று உறுப்பினர்களை கேட்டுக்கொள்கிறேன். கடன் வாங்கி விதை விதைத்தாலும் ஒரு விவசாயி அனைத்தையும் இழந்து அவரிடத்திலிருந்து ஒரு சொட்டு ரத்தம் கூட கிடைக்காத நிலை வரும் என்று விமர்சனம் செய்து வருத்தமுடன் தெரிவித்தது அவையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது”. (அப்போதிலிருந்து இன்றைய காலம் 2026 வரை நூற்றாண்டு கடந்தாலும் விவசாயிகளின் நிலைமை, அவர்களின் வாழ்வாதாரம் இன்றும் மாறாமல் அவர்களின் கண்களில் கண்ணீரை தான் பார்க்க நேரிடுகிறது. பொதுவாகவே, தமிழ்நாட்டின் நீர்நிலைகள் குளம், ஏரி, அணைகளில் வண்டல் மண் படிந்து தூர் வாராமல் பல ஆண்டுகளாக இந்த விஷயம் கவனிக்கப்படாமல் இருக்கிறது. சில சமயங்களில் அரசு, இலவசமாக மண்ணை வெட்டி வாரி எடுத்துச் செல்லலாம் என்று அறிவித்து இருந்தாலும், அதற்கும் பணம் செலவாவது மற்றும் நீர்நிலைகளில் போதுமான ஏற்பாடுகள் இல்லாத காரணத்தால் தூர் வாரும் பணிகள் சுணங்கிக் கிடக்கிறது. 2026-ல் அமைந்துள்ள புதிய அரசு இதில் கவனம் செலுத்தி, தகுந்த ஆலோசனை பெற்று, அனைத்து நீர்நிலைகளிலும் தூர் வாரும் பணியை மேற்கொண்டால், நீர்நிலைகளில் அதிகளவு தண்ணீர் தேக்கி வைக்க இயலும். அது மட்டுமன்றி விவசாயிகள் பெரும் பலனடைவார்கள். மேட்டூர் அணையில் தூர் வாரினால் பல டி.எம்.சி அளவு நீர் கூடுதலாக சேமிக்க முடியும் என்பது கண்கூடு!) அன்றைய சட்டமன்றத்தில், சீதாராம ரெட்டியார் முந்தைய ஆண்டு அதிக நிதி ஒதுக்கப்படும் என்ற வாக்குறுதியை அரசு காப்பாற்றவில்லை என்றார். இவ்வாண்டு நிதி குறைக்கப்பட்டிருப்பது விவசாயிகளுக்கு அநீதி என்றும், மேலதிக நிதி ஒதுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். P.C. எத்திராஜுலு நாயுடு நீர்வள ஆதாரங்கள் புறக்கணிக்கப்பட்டு, குடிநீர் தேவைக்குக் கூட மக்கள் 8 அல்லது 10 மைல் தூரம் நடந்து சென்று எடுத்து வர வேண்டிய நிலை உள்ளது என்றும் ஒவ்வொரு ஆண்டும் போதிய நிதி ஒதுக்கினால் மட்டுமே குளங்கள் சரியாக பராமரிக்கப்படலாம் எனவும், குடிநீர்ப் பிரச்சினை கூட தீரலாம் எனவும் வலியுறுத்தினார். பரசுராமராவ், நிதி மாவட்டங்களுக்கு மிகச் சிறிய அளவாகவே சென்றடைகிறது என்றார். பஞ்சம், மழைப்பொழிவு குறைபாடு போன்ற சூழ்நிலையில், பழைய காலத்தில் முகமதியர் மற்றும் பிரிட்டிஷாரின் ஆரம்ப காலத்தில் உருவாக்கப்பட்ட குளங்கள் பராமரிக்கப்படாமல் இருப்பது கேவலமானது. அரசு நீண்ட கால திட்டம் வகுத்து ஒழுங்காகச் செயல்பட வேண்டும் என காட்டமாக வேண்டுகோள் விடுத்தார். அடுத்த நாள் 18.03.1927 அன்றும் விவாதம் தொடர்ந்தது. ஆர். சீனிவாச ஐயங்கார் மாகாணத்தில் 30,000 குளங்கள் இருந்தாலும் ஒவ்வொன்றுக்கும் மிகக் குறைவான நிதி மட்டுமே வழங்கப்படுகிறது. ஒதுக்கப்பட்ட நிதியை சமமாக 26 மாவட்டங்களுக்கும் பிரித்தால் ஒரு மாவட்டத்துக்கு 30000 முதல் 40000 ரூபாய் மட்டுமே கிடைக்கும். அதன்படி, வட ஆற்காட்டில் ஒரு குளத்திற்கு ரூ.4 மட்டுமே கிடைக்கிறது என்பதைக் குறிப்பிடும் வகையில் அரசு வேடிக்கையாக நிதி ஒதுக்குகிறது என்று சாடினார். சுப்பிரமணிய பிள்ளை, திருநெல்வேலியில் விவசாயிகள் தாங்களே நன்கொடை அளித்து குளங்களை பராமரிக்க வேண்டிய நிலை இருப்பதாக கூறினார். இது அநியாயம், அரசு தன் கடமையை விவசாயிகளிடம் தள்ளி விடக் கூடாது என்று கண்டித்தார். முத்துரங்க முதலியார், செம்பரம்பாக்கம் ஏரி பல ஆண்டுகளாக வறண்டு கிடப்பதாகக் குறிப்பிட்டார். குறைந்தபட்சம் தனது மாவட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து, கூடுதல் நிதி ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டார். எல்லப்பா செட்டியார், சேலம் மாவட்டம் புறக்கணிக்கப் பட்டுள்ளதாகவும், புறம்போக்கு நிலங்களை ஏரிகளாக மாற்றி குடிநீர் மற்றும் பாசன வசதி செய்யலாம் என்றும் யோசனை தெரிவித்தார். மேட்டூர் போன்ற பெரிய திட்டங்களை விட, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சிறு பாசனத் திட்டங்களுக்கு வருடாந்திர நிதி ஒதுக்க வேண்டும் என்றார். மேட்டூர் அணை ஒரு குறிப்பிட்ட மாவட்டத்திற்கு மட்டும் பயன்பெறும் வகையில் கோடான கோடி ரூபாய் ஒதுக்கி செலவழித்து திட்டங்கள் வகுத்து செயல்படுவதை விட (காவிரி – மேட்டூர் அணை திட்டத்தை குறிப்பிடுகிறார்) நீண்ட கால திட்டமாக சுமார் பத்து அல்லது அதற்கு மேல் வருடங்களுக்கான திட்டங்கள் தீட்டப்பட்டு ஒரு வருடத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒதுக்கப்பட்டு சிறிய பாசன வசதிகளை நிறைவேற்றிட முயல வேண்டும் என்றார். சல்தானா, சிறிய பாசனப் பணிகளை அரசு புறக்கணிக்கிறது என்று கூறினார். 1912-ல் கூட மெட்ராஸ் மாகாணத்தில் 10 மில்லியன் ஏக்கர் கிணறு பாசனத்தில் இருந்தது, இன்று அதே நிலையே உள்ளது என்று எடுத்துக்காட்டி, அரசு தீவிர அக்கறை செலுத்த வேண்டும் என்றார். நாகன் கெளடா, வறட்சி காலங்களில் கிணறுகள் வற்றி விடுவதால், ஆழ்துளை கிணறு (போர்வெல்) முறையை அரசு ஊக்குவிக்க வேண்டும் என்றார். அதுவே சிறிய பாசனத் திட்டங்களுக்கு வழிவகுக்கும் எனக் கூறினார். சுமார் 100 வருடங்களுக்கு முன்பாகவே ஆழ்துளை கிணறுகள் நம் நாட்டில் அறிமுகம் ஆகி விட்டது தெரிகிறது. (100 ஆண்டுகளாக ஆழ்துளை கிணறுகள் மூலம், தொடர்ந்து நீரை பூமியிலிருந்து உறிஞ்சி வெளியேற்றி வருகிறோம் என்பதை நினைவில் கொள்க!) கோட்டி ரெட்டி, அரசு சிறு பாசன வசதிகளை எங்கும் செய்யவில்லை, கிராமங்கள் புறக்கணிக்கப்படுகின்றன என்றார். இத்திட்டங்களில் செலவழிப்பது வீணாகாது, மாறாக மக்களுக்கு குடிநீர், பாசன நீர் ஆகியவற்றை வழங்கும் என்று வலியுறுத்தினார். கே. கிருஷ்ணன், சி. ஓபிரெட்டி, ஆர். மாதவன் நாயர், எம். கிருஷ்ணன் நாயர் போன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் போதுமான மழை இருந்தாலும், நீர் கடலில் கலந்து போய்விடுகிறது என்றனர். மழை இல்லாத சீசன்களில் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். எனவே மக்களுக்கு சிறிய பாசன வசதி அவசியம் என்றனர். எல். கே. துளசிராம், மதுரை மாவட்டத்தில் குளம், ஏரிகள் பராமரிப்பு பொறுப்பு முன்னாள் ராணுவ வீரர்களிடம் வழங்கப்பட்டிருப்பதை எதிர்த்து, அது அரசே மேற்கொள்ள வேண்டும் என்றார். ஹரி சர்வோத்தம ராவ், நிதி மிகக் குறைவாக இருப்பதால் எதற்கும் பயன்படவில்லை என்று கண்டித்தார். எனக்கு ஒரு கதை ஞாபகத்துக்கு வருகிறது. ஒரு ஏழை மனிதன் ஒரு கஞ்சனிடம் சென்று நெய்யை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று கேட்டார். அதற்கு கஞ்சன் நெய் முகந்து வாருங்கள் அது போதும் என்றான். இந்த பதிலில் திருப்தி அடையாத ஏழை வேறு ஒருவரிடம் சென்று கேட்டார். அதற்கு இரண்டாமவன் அதை கண்களால் பாருங்கள் திருப்தி அடைந்து விடுவீர்கள் என்றான்! இது போலத்தான் இருக்கிறது எங்கள் மாவட்ட நிலைமை என்று கடுமையாக சாடினார். மர்ஜோரி பேங்க்ஸ், வருவாய் துறை உறுப்பினர் (அரசு தரப்பு பதில்) சிறிய பாசனத் திட்டங்கள் என்பது 250 ஏக்கருக்கு உட்பட்ட நிலங்களுக்கு மட்டும் என்று விளக்கினார். ஒதுக்கீடு சிறிய கிராமப்புற வேலைகளுக்கு எனவும் விவரமாக எடுத்துரைத்தார். திரு.மர்ஜோரி பேங்க்ஸ், அரசு சார்பில் அனைத்து உறுப்பினர்களின் கேள்விகளுக்கும் விடையளித்த பின்னரும் சி.வி வெங்கடரமண ஐயங்கார் விடாமல் இறுதி வாதத்தை கீழ்க்கண்டவாறு வைத்தார். “நான் வறண்ட கோயம்புத்தூர் மாவட்டத்தின் பிரதிநிதியாக உள்ளேன். இதே போலத்தான் மற்ற அனைத்து மாவட்டங்களும் வறண்ட மாவட்டங்களாக இருக்கிறது. முன்பு, மாண்புமிகு சட்ட உறுப்பினர் சி. பி. ராமசாமி அய்யர் அவர்கள் அளித்த பாலும், தேனும் கலந்த வாக்குறுதிக்கு நன்றி! அணை ஓசை மேட்டூர் திட்டத்தில் இருந்து ஒரு சொட்டு நீர் கூட கிடைக்காமல் நாங்கள் சிறு பாசன பணிகளை நம்பியே உள்ளோம். சிறிய பாசனப் பணிகள் அனைத்தும் ஏழைகளின் வேலையாகத்தான் கருதப்படுகின்றன. எனவே, அரசு இதற்கு முன் வர வேண்டும். கோயம்புத்தூர் மாவட்டத்தில் பாழடைந்த ஏரி மற்றும் குளங்கள் நிறைய உள்ளன. பொது வரி செலுத்துவோர் பார்வையில் மேற்கண்ட பாழடைந்த குளம், ஏரிகள் சீரமைக்கப்பட வேண்டும். வெள்ளத்தின் காரணமாக வண்டல் படிதல் குளங்கள் பாழாவதற்கு முக்கிய காரணமாக அமைகின்றது. ஒரு மூத்த அதிகாரி தெரிவித்த வகையில் முன்பெல்லாம் மழை நீர், குளம், ஏரி மற்றும் கிணறுகளில் நிரம்பும். அதன் பிறகு அதிகமாக வரும் வெள்ளம் ஆற்றில் கலந்து சென்று கடலில் கலக்கும். ஆனால், தற்போது பாசன ஏரி, குளங்கள் உட்பட பாசன அமைப்புகளில் வண்டல் மண் படிந்து இருப்பதால் ஒவ்வொரு துளி மழை நீரும் பூமியில் விழுந்தவுடன் அவை நேராக அருகில் உள்ள ஆற்றில் ஓடிச் சென்று கலந்து கடலை நோக்கி சென்று விடுகிறது. மேலும், பெரும் சேதங்களை விளைவிக்கிறது. அந்த சேதங்களை சரி செய்ய அரசாங்கம் பெரும் நிதி செலவழிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறது. எனவே, வெள்ளச் சேதாரங்களை தடுக்க சிறிய பாசன அமைப்புகள் அனைத்தையும் பராமரிக்க பெரிய அளவிலான தொகை செலவழிக்கப்பட்டு, அந்த பாசன நீர் நிலைகளில் உள்ள சேதாரங்களை செப்பனிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு செயல்பட வேண்டும். 250 ஏக்கருக்கு உட்பட்ட பகுதிகள் சிறு பாசனத் திட்ட அளவுகோல் என்ற வரையறைக்கு முற்றுப்புள்ளி வைத்து அந்த அளவை உயர்த்த வேண்டும். இந்த விஷயத்தில் அரசு சாதாரண விவசாயிகளை காப்பாற்ற முன்வர வேண்டும். பொதுப்பணித்துறை எப்போதும் வண்டல் படிந்து இருப்பதை அகற்ற உதவி எதுவும் செய்வதில்லை. ஏராளமான பாசனக் கூட்டங்களில் பொதுப்பணித் துறையிடம் நாங்கள் வண்டல் மண்ணை தூர்வார வைத்த கோரிக்கைகள் வீணாகப் போய் விடுகிறது. அடுத்த சிறந்த யோசனை ரயத்துக்களே வண்டல் மண் அகற்ற அவர்களுக்கு அனுமதி வழங்குவது மட்டுமே! சுண்ணாம்பு Vs சிமெண்ட். கான்கிரீட் இயந்திரங்கள் `டெண்டர்' - காரசார விவாதம்! | அணை ஓசை 25 இது சாத்தியமில்லை என்று மறுக்கும் பொதுப்பணித்துறை இதற்கு சில சட்ட திட்டங்களை தளர்த்த முன்வர வேண்டும். விவசாயிகள் நீர் நிலைகளை அதிக கொள்ளளவு சேர்த்து வைக்க விரும்புகிறார்கள். அப்போதுதான் அருகில் உள்ள அவர்களது நிலங்களில் உள்ள கிணறுகளில் நீர் நிரம்பி பயிரிட முடியும் என்பதை அதுவும் குறிப்பாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் மிகுந்த கவனத்துடன் இதை செயல்படுத்த வேண்டும்” என்றார். இவ்விவாதத்தின் மூலம், சிறு பாசனத் திட்டங்கள் 1920களில் மிக மோசமான நிலையில் இருந்ததை அறியலாம். பெரும் திட்டங்களுக்கு மட்டுமே நிதி வழங்கி, சிறிய திட்டங்களை புறக்கணித்தது பற்றி பல உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்து, குறிப்பாக மேட்டூர் திட்டம் சில மாவட்டங்களுக்கு மட்டுமே நன்மை தரும், ஆனால் மாகாணம் முழுவதும் உள்ள விவசாயிகள் சிறு பாசன வசதிகளை நம்பியே உள்ளனர் என்ற வாதம் மூலம் தெளிவாக தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினர். இந்தத் தீர்மானம் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. ஆனால், எதிர்ப்பு அதிகமானதாக இருந்ததால் தீர்மானம் தோல்வியடைந்தது. மேற்கண்ட விவாதம் மூலம் சுமார் 100 வருடங்களுக்கு முன்பு மெட்ராஸ் மாகாணத்தில் சிறிய அளவிலான நீர்ப்பாசன வசதி குறைவாக இருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இதனால், பெரும்பாலான உறுப்பினர்கள் காவிரி - மேட்டூர் திட்டம் செயல்படுத்த முனையும் போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த வண்ணம் மற்ற பாசன திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். பெருமளவில் நிதி ஒரே திட்டத்தில் முடக்கப்படுவதையும், ஆனால் இந்தத் திட்டத்தின் மூலம் சில மாவட்டங்களில் குறிப்பாக தஞ்சாவூர் போன்ற டெல்டா மாவட்டங்கள் மட்டுமே பயனடைகிறது என்ற ஆதங்கமும் அவர்களது வாதங்கள் எடுத்துக்காட்டுகிறது. அதுமட்டுமன்றி விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளுடன் 2026-ம் வருடத்திலும் நீரின்றி தவித்து வருவது கண்கூடு! தமிழ்நாடு அரசு ஓர் ஒருங்கிணைந்த செயல்பாட்டின் மூலம் காவிரி டெல்டா விவசாயிகளின் துயர் துடைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. கோடிக்கணக்கான தமிழக மக்களின் குடிநீர் தேவையையும் இந்தத் திட்டமும், காவிரி ஆறும் பூர்த்தி செய்கிறது என்ற உண்மையையும் உணர்ந்து அரசும், அதிகாரிகளும், மக்களும்கூட ஒன்றிணைந்து செயல்படுவது மிக, மிக அவசியம். மேட்டூர் அணையில் சேமித்து வைக்கப்படும் ஒவ்வொரு துளி நீரும் பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டிய கால சூழ்நிலையில் தமிழக மக்கள் அனைவரும் உள்ளனர் என்பதை உணர வேண்டும். தொடரும். காவிரி நன்னீர் சிறப்பு பொருள்: தலைவியானவள், காவிரிப் பேராற்றின் நீர்ப்பெருக்கு போல விளங்கும் நின் மார்பினை மிகுதியாக விலக்கத் தொடங்கினாளே! என்று தலைவனை பார்த்து தோழி கூறுவதாக அமைந்துள்ளது.“காவிரி மலிர்நிறை அன்னநின் மார்பு நனிவிலக்கல் தொடங்கி யோளே…” / ஐங்குறுநூறு முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/science/history/anai-osai-mettur-dam-construction-series-26




