பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் வெப்பநிலை இயல்பைவிட அதிகரித்து காணப்பட்டால் அது எல்நினோ என்று அழைக்கப்படுகிறது. அதுவே கடலின் வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக இருந்தால் அதை சூப்பர் எல்நினோ என்று சொல்கிறார்கள். ஸ்பானிஷ் மொழியில் இதை குட்டிப்பையன் என்கிறார்கள். எல்நினோ, சூப்பர் எல்நினோ ஏற்பட்டால் அதன் பாதிப்பால் கடலின் மேற்பரப்பில் ஏற்படும் வெப்பக்காற்று ஆசியாவை நோக்கி நகராமல், அமெரிக்காவின் கடற்கரை பகுதிகளை நோக்கி முன்னேறுகிறது. இதன் காரணமாக இந்தியா உள்பட ஆசிய நாடுகளில் பருவமழை பாதிப்பு தொடங்கிவிட்டது. இந்தியாவில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தைவிட கடந்த மாதம் 40 சதவீதம் குறைவாக பெய்திருக்கிறது. இந்தியாவின் மொத்த விவசாயமே இந்த பருவமழையை எதிர்பார்த்துத்தான் இருக்கிறது. 40 சதவீதம் மழை குறைந்ததால் நாட்டில் இப்போது சாகுபடி பரப்பு 23 சதவீதம் சரிவை கண்டுள்ளது. கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் அங்கிருந்து நமக்கு வரவேண்டிய நீர் வராததால் மேட்டூர் அணையின் நீர் இருப்பும் குறைந்துவிட்டது. வழக்கமாக ஜூன் 12-ந்தேதி திறந்து விடப்படவேண்டிய மேட்டூர் அணை இன்றளவும் திறக்கப்படாததால் காவிரி மட்டுமல்ல, அதன் உப நதிகள், கால்வாய்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான நீர் நிலைகளும் இப்போது நீரின்றி வறண்டு கிடக்கின்றன. இந்தநிலையில் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் 22,051 சிறுபாசன ஏரிகள், 69,777 குளங்கள் மற்றும் ஊரணிகளை தூர்வாரும் நல்ல திட்டத்தை ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் அறிவித்துள்ளார். இந்த நீர் நிலைகள் தற்போது 125 நாள் வேலை திட்டம் (முந்தைய 100 நாள் வேலை திட்டம்), அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட நிதியின் கீழ் பராமரித்து, புனரமைக்கப்படுகின்றன. ஆனால் இந்த திட்டங்களின் நிதி அதற்கு போதுமானதாக இல்லை. எனவே தனியார் நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் பங்களிப்பை வழங்க உதவி கோரப்பட்டுள்ளது. அதாவது தனியார் நிறுவனங்கள் தங்களது சொந்த நிதியிலோ, பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு நிதியின் மூலமாகவோ நீர்நிலைகளை தூர்வாரி புனரமைக்கலாம். இந்த பணிகளை செய்து பழக்கமில்லை, ஆனால் அதற்கு தாங்களாக முன்வந்து நிதி உதவி செய்ய விரும்புகிறோம் என்று நினைத்தால், அதற்கான தொகையை மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கவேண்டும். மாவட்ட கலெக்டர் தலைமையில் அரசுத்துறைகளே அந்த பணிகளை மேற்கொள்ளும். நிதி மட்டுமின்றி தனியார் நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் தூர்வாரும் பணிகளுக்காக எந்திரங்கள், பொருட்களையும் வழங்கலாம். வெட்ட வெட்ட வளர்ந்துகொண்டே இருக்கும் கருவேல மரங்கள் முளைத்து பாழ்படுத்திக்கொண்டிருக்கும் அனைத்து நீர் நிலைகளையும் தூர்வாரி அதன் இயல்பான கொள்ளளவுக்கு மீட்டெடுப்பதே இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கம் என்று அமைச்சர் ஆனந்த் அறிவித்துள்ளார். இந்த திட்டத்துக்கு கொடை வள்ளல்கள், கல்வி நிறுவனங்கள், அரசு சாரா அமைப்புகள் உதவிக்கரம் நீட்டினால் நீர்நிலைகள் மராமத்து செய்யப்பட்டு, அடுத்த வடகிழக்கு பருவமழை முடிந்தவுடன் அனைத்து நீர் நிலைகளிலும் தண்ணீர் நிரம்பி கடல்போல் காட்சியளிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த பணிகளில் ஊழலுக்கு கிஞ்சித்தும் இடம் இல்லை என்று அமைச்சர் ஆனந்த் அளித்த உறுதி காய்ந்த பயிர் மீது மழைத்துளி விழுவது போன்று நம்பிக்கையை தந்திருக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/others/thalayangam/dry-ponds



