சென்னை, கண்துடைப்பு நாடகங்களை நிறுத்திவிட்டு, அறிவியல் பூர்வமான, வெளிப்படையான, முறையான சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்துங்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- சாதிவாரி கணக்கெடுப்பு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த துளியும் மனமில்லாத ஆர்.எஸ்.எஸ்./மோடி அரசு, சமூகநீதியைத் திட்டமிட்டே சீர்குலைத்துத் தோற்கடிக்க ஒரு மோசடி நாடகத்தை அரங்கேற்றி வருகிறது. "யாருடைய மக்கள்தொகை எவ்வளவோ, அதற்கேற்பவே அவர்களின் உரிமையும் பங்கும் அமைய வேண்டும்" என்ற முழக்கத்தோடு, 50% இடஒதுக்கீட்டு உச்சவரம்பை உடைத்து, விளிம்புநிலை மக்களுக்கு அவர்களின் உண்மையான பிரதிநிதித்துவத்தையும் அதிகாரப் பகிர்வையும் பெற்றுத்தரவே ராகுல் காந்தி 2023யில் நியாய யாத்திரையை முன்னெடுத்தார். அந்த யாத்திரையின் மக்கள் எழுச்சிக்கும் எதிர்க்கட்சி தலைவரின் அழுத்தத்திற்கும் பணிந்து சாதிவாரி கணக்கெடுப்பை ஏற்றுக்கொள்வது போல் காட்டிக்கொண்டு, களத்தில் அதை முழுமையாகக் குளறுபடி செய்து கெடுப்பதுதான் ஆர்.எஸ்.எஸ். மற்றும் மோடி-ஷா கூட்டணியின் நயவஞ்சக சித்தாந்தத் திட்டம். இந்தியாவில் முதல்முறையாக டிஜிட்டல் முறையில் சாதியை எண்ணுகிறோம் என்று தம்பட்டம் அடித்துவிட்டு, உத்தரகண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் மலைக்கிராமங்களில் அவசரக் கோலமாகத் தொடங்கியுள்ள கணக்கெடுப்பே இந்த நிர்வாக அலங்கோலத்திற்கு அப்பட்டமான சாட்சி. களப் பணியாளர்களுக்கு முறையான வழிகாட்டலோ, நிலையான செயல்பாட்டு நெறிமுறைகளோ கிடையாது. 40 கேள்விகளைக் கேட்பதாகக் கூறிச் செல்லும் கணக்கெடுப்பாளர்கள் எந்தவொரு ஆவணச் சரிபார்ப்பும் இன்றி, ஆதார் அட்டை விவரங்களைக்கூட முறையாகப் பதிவு செய்யாமல் செயலியில் தானாக ஒரு 'டிக்' அடித்துவிட்டுச் செல்கிறார்கள். இடஒதுக்கீட்டு உரிமைக்கு ஆபத்து இதைவிடப் பேராபத்து என்னவென்றால், 1931-ல் 4,147 ஆக இருந்த சாதிகள், 2011 SECC-யில் வரைமுறையற்ற திறந்தவெளிக் கேள்விகளால் 46.7 லட்சமாகச் சிதறிப் பயனற்றதாகிவிட்டது என உச்சநீதிமன்றத்தில் பாஜக அரசே பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. SC (1,208) மற்றும் ST (730) பிரிவுகளுக்கு மத்திய அரசிடம் தெளிவான பட்டியல் இருப்பதைப் போல, OBC சாதிகளுக்கான பட்டியலை வைத்து ‘இரண்டடுக்கு வகைப்பாடு’ முறையை அமல்படுத்தாமல், மீண்டும் அதே திறந்தவெளிக் கேள்விகளைத் திணிக்கிறார்கள். இதனால் ஒரு சாதியே பல நூறு சாதிகளாகச் சிதறடிக்கப்பட்டு OBC மக்களின் உண்மையான எண்ணிக்கை திட்டமிட்டு அழிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. இந்தக் குளறுபடியான முறையால் தமிழ்நாட்டின் 69% இடஒதுக்கீடு உட்பட நாட்டின் அனைத்து மாநிலங்களில் உள்ள OBC இடஒதுக்கீட்டு உரிமைகளும் ஒட்டுமொத்தமாக நிலைகுலைந்து பெரும் ஆபத்தில் சிக்கியுள்ளன. பீகாரிலும் தெலங்கானாவிலும் வெற்றிகரமாகச் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பின்னணியில், மத்திய அரசுக்கு உண்மையான நோக்கமிருந்தால் ஒன்றியப் பட்டியலிலுள்ள OBC சாதிகள் மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையப் பட்டியலிலுள்ள 252 சாதிகளைக் கொண்டு அறிவியல் பூர்வமாகத் தரவுகளைத் திரட்டியிருக்க வேண்டும். ஆனால், "சாதிவாரி புள்ளிவிவரங்கள் நம்பகத்தன்மையற்றவை" என்ற போலிக் காரணத்தைக் காட்டி இடஒதுக்கீட்டு உச்சவரம்பை உடைக்கும் வாய்ப்பையும், விளிம்புநிலை மக்களின் உரிமைகளையும் ஒழித்துக்கட்டுவதே மோடி அரசின் சதி. இந்தக் கணக்கெடுப்பைத் தொடங்குவதற்கு முன்பே இதில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், காங்கிரஸ் தலைவர் கார்கேவும், பிரதமருக்குக் கடிதம் எழுதிய பிறகும், எவ்வித முன்னேற்பாடுகளுமின்றி இந்த நாடகத்தை மோடி அரசு துவக்கியுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. சாதிவாரி கணக்கெடுப்பு அல்ல இப்படி அறிவியல் பூர்வமற்ற முறையில் எடுக்கப்படும் இந்தத் தரவுகள் மீண்டும் ஒரு பயனற்ற சாதிவாரி கணக்கெடுப்பாகவே அமையப் போகிறது. மக்களின் கோடிக்கணக்கான வரிப்பணத்தை பாழாக்கிவிட்டு, இறுதியில் "தரவுகள் நம்பகத்தன்மையற்றவை" என்று கூறி, இதை வெளியிடாமல் மூடி மறைப்பதே இவர்களின் திட்டம்! மோடி அரசே, நீங்கள் நடத்துவது சாதிவாரி கணக்கெடுப்பு அல்ல; மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் சமூகநீதிக்கு எதிரான அப்பட்டமான அரசியல் ஏமாற்று வித்தை! கண்துடைப்பு நாடகங்களை நிறுத்திவிட்டு, அறிவியல் பூர்வமான, வெளிப்படையான, முறையான சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்துங்கள்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/modi-government-has-absolutely-no-intention-of-conducting-a-caste-based-census-manickam-tagore




