சென்னை, ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் தாக்கம் சமுதாயத்தின் அனைத்து மட்டங்களிலும் ஆழமாக வேரூன்றிவிட்டது. வனத்துறையிலும் இப்போது ஏ.ஐ. தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பல ரெயில் பாதைகள் வனப்பகுதிகளுக்கு நடுவே செல்கின்றன. அந்த பகுதிகளில் யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் ரெயில் பாதையைக் கடக்கும்போது, சீறிப்பாய்ந்து வரும் ரெயில் மோதி உயிரிழக்க நேரிடுகின்றது. அதிலும் குறிப்பாக, கோவையில் இருந்து கேரளாவுக்குச் செல்லும் பல ரெயில்கள் மதுக்கரையைக் கடக்கும்போது, பல வன விலங்குகள் ரெயிலில் அடிபட்டு உயிரிழக்கின்றன. மதுக்கரையில் இருந்து கேரளம் நோக்கிச் செல்லும் ரெயில்கள் பயன்படுத்துவது 'ஏ பாதை' என்றும், கேரளத்தில் இருந்து மதுக்கரைக்கு வரும் ரெயில்கள் பயன்படுத்துவது 'பி பாதை' என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பாதையில் தண்டவாளத்தைக் கடக்க முற்படும் யானைகள், சிறுத்தைகள், காட்டெருமைகள், மான்கள் போன்ற விலங்குகளைக் கண்டறிந்து, அவற்றை வேறு வழிக்குத் திருப்பும் வகையில் எச்சரிக்கை ஒலி எழுப்பும் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்ட கேமராக்கள் மற்றும் கருவிகள் மதுக்கரை வனச்சரகத்தில் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ளன. இந்த அமைப்பின் முக்கிய வசதியாக, தண்டவாளத்தை ஒட்டிய வனப்பகுதிக்குள் அமைக்கப்பட்டுள்ள 12 கோபுரங்களில் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் கூடிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் இமைகளை மூடாமல் விழித்துக்கொண்டே இருக்கும் திறன் கொண்ட இந்தக் கேமராக்கள் மூலம் வன விலங்குகள் இரவு, பகலாக கண்காணிக்கப்படுகின்றன. அவற்றின் நடமாட்டம் அந்தப் பகுதியில் சுற்றி வரும் வன ரோந்துக் குழுவினருக்கு தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் உடனடியாக அங்கு அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதைகளை நோக்கி யானைகளை திருப்பி அனுப்புகிறார்கள். இதுமட்டுமல்லாமல், கடந்த பிப்ரவரி மாதம் 24 மணி நேர டிரோன் கண்காணிப்புப் பிரிவு ரூ.8.67 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த டிரோன்கள், கண்காணிப்புக் கோபுரங்களில் உள்ள கேமராக்களால் கூட கண்டுபிடிக்கமுடியாத மறைவான இடங்கள், அடர்ந்த புதர்களையும் துல்லியமாக மோப்பம் பிடித்துவிடும். மேலும், 2.5 கி.மீ. தொலைவில் விலங்குகளின் நடமாட்டம் இருந்தால், அதையும் காட்டிக்கொடுத்துவிடும். சிறகுகள் இன்றி பறக்கும் இந்த டிரோன்கள் தண்டவாளம் அருகே ஏதாவது விலங்குகள் இருப்பதை கண்டுபிடித்தால், உடனடியாக தேனீக்கள் ரீங்காரமிடுவது, சிங்கத்தின் கர்ஜனை, பட்டாசு வெடிக்கும் சத்தம் போன்று பல்வேறு எச்சரிக்கை ஒலிகளை எழுப்புகின்றன. இதனால் ஆபத்து என்பதை உணர்ந்துகொண்டு யானைகள் மற்றும் பிற விலங்குகள் காட்டுக்குள் சென்றுவிடுகின்றன. இந்தக் கருவிகள் மூலம் கடந்த பிப்ரவரி முதல் ஜூன் மாதம் வரை 701 எச்சரிக்கைகள் எழுப்பப்பட்டுள்ளன. இந்தத் தனி அமைப்பு தொடங்கப்பட்ட 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இதுவரை 43,356 எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 7,592 யானைகள், 212 சிறுத்தைகள், 669 காட்டெருமைகள், 21,612 மான்கள் ரெயிலில் அடிபடாமல் தங்கள் பாதையை மாற்றிச் சென்று உயிர் பிழைத்துள்ளன. நமது ஏ.ஐ. அமைப்பு பணிகளின் வெற்றியை அறிந்து, மத்தியபிரதேசம், ஆந்திரா, மேகாலயா போன்ற மாநிலங்களின் வனத்துறைகளும் இந்தத் தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்த விருப்பம் காட்டியுள்ளன. இதுபோலவே, தென்காசி வனக்கோட்டத்திலும் மனிதர்கள்-யானை மோதலைத் தடுக்க ஏ.ஐ. கேமராக்கள் பொருத்தப்பட்டு, வனப்பகுதியை விட்டு யானைகள் வெளியேறுவது கண்டறியப்பட்டதும் வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் அனுப்பும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை விரிவுபடுத்தினால், அன்பு மொழியை மட்டும் பேசும் வனங்களின் சொந்தக்காரர்களான விலங்குகளின் உயிர்களை மட்டுமின்றி மனித உயிர்களையும் காப்பாற்ற முடியும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/others/thalayangam/ai-technology-a-lifesaver-for-wild-animals




