வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் இந்தியாவின் முதல் உள்நாட்டு ரோட்டாவைரஸ் தடுப்பூசி உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றிய உலகப் புகழ்பெற்ற இந்திய மருத்துவர், விஞ்ஞானி, தீநுண்மி ஆய்வியல் வல்லுநர் (வைராலஜிஸ்ட்) மருத்துவர்.ககன்தீப் காங் அவர்களின் குடும்பப் பூர்வீகம் பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா நகரமாகும். மருத்துவர்.ககன்தீப் காங் அவர்களின் தந்தை குர்பஜன் சிங் காங், இந்திய இரயில்வேயில் இயந்திரப் பொறியாளராகப் பணியாற்றினார். அவரது தாயார் பரம்ஜித் காங், ஆங்கில மொழி மற்றும் வரலாற்றுப் பாடங்களை கற்பித்த பள்ளி ஆசிரியையாக இருந்தார். தந்தையின் இந்திய இரயில்வேப் பணியில் அடிக்கடி இடமாற்றம் ஏற்பட்டதால் 1962-ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் நாள் இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா நகரில் ககன்தீப் காங் பிறந்தார், வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவின் பல நகரங்களில் வளர்ந்த ககன்தீப் காங் பள்ளிப் பருவத்தில் சுமார் பத்து பள்ளிகளில் கல்வி பயின்றார். பள்ளி இறுதிக் கல்வியை கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற லா மார்டினியர் பெண்கள் பள்ளியில் 1978-ஆம் ஆண்டு முதல் 1980-ஆம் ஆண்டு வரை பயின்று முடித்தார். பள்ளிகளை அடிக்கடி மாற்றியதால் ஏற்பட்ட கல்வி இடைவெளியை நிரப்பும் நோக்கில் உயிரியல், இயற்பியல், வேதியியல் தொடர்பான எளிய சோதனைகளையும் கூறாய்வுகளையும் மேற்கொள்ளும் வகையில்அவரது தந்தை வீட்டிலேயே சிறிய அறிவியல் ஆய்வகத்தை அமைத்துக் கொடுத்தார். இது அவரது அறிவியல் ஆர்வத்திற்கு வலுவான அடித்தளமாக அமைந்தது. பள்ளிக் கல்விக்குப் பிறகு இயற்பியல் துறையில் படிக்க வேண்டும் என்பதே அவரது விருப்பமாக இருந்தது. ஆனால், அவரது தாயாரின் வலியுறுத்தலின்படி மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வில் பங்கேற்றார். தேர்வில் வெற்றி பெறுவேன் என்ற எதிர்பார்ப்பு இல்லாமல் எழுதிய அந்தத் தேர்வில், வேலூர் கிறித்தவ மருத்துவக் கல்லூரியின் சேர்க்கைப் பட்டியலில் உயர்ந்த இடத்தைப் பெற்று மருத்துவக் கல்வியில் சேர்ந்தார். மருத்துவர்.ககன்தீப் காங் அவர்களின் உயர்கல்வி மற்றும் மருத்துவ ஆராய்ச்சிப் பயணம் பெரும்பாலும் தமிழ்நாட்டின் வேலூரில் அமைந்துள்ள கிறித்தவ மருத்துவக் கல்லூரியிலேயே நடைபெற்றது. 1981-ஆம் ஆண்டு இளநிலை மருத்துவப் படிப்பில் சேர்ந்து 1987-ஆம் ஆண்டு மருத்துவரானார். 1991-ஆம் ஆண்டு அதே கிறித்தவ மருத்துவக் கல்லூரியில் மருத்துவ நுண்ணுயிரியலில் முதுநிலை மருத்துவப் பட்டத்தைப் பெற்றார். குழந்தைகளுக்கான குடல் நோய்த்தொற்றுகள், வயிற்றுப்போக்கு நோய்கள் குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு 1998-ஆம் ஆண்டு கிறித்தவ மருத்துவக் கல்லூரியில் முனைவர் பட்டத்தைப் பெற்றார். முனைவர் பட்டத்திற்குப் பிறகு இங்கிலாந்தின் இலண்டன் நகரிலுள்ள ராயல் ஃபிரீ மருத்துவமனை மற்றும் மருத்துவப் பள்ளியில் குடல் நோயியல் தொடர்பான சிறப்புப் பயிற்சி பெற்றார். அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம், ஹூஸ்டன் நகரிலுள்ள பேய்லர் மருத்துவக் கல்லூரியில், புகழ்பெற்ற வைரஸ் ஆய்வாளர் மேரி எஸ்டெஸ் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் தீநுண்மி (வைரஸ்) ஆய்வியல் துறையில் முனைவர் பட்டத்திற்குப் பிந்தைய ஆய்வுப் பயிற்சியை நிறைவு செய்தார். மருத்துவர்.ககன்தீப் காங் அவர்கள், வேலூரிலுள்ள கிறித்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணராகப் பணியாற்றிய மருத்துவர்.மேத்யூ ஜோசப்பை 1989-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். சட்டப்படி பதிவு திருமணம், கிறிஸ்தவ முறைப்படி பெங்களூரில் நடைபெற்ற திருமணம், சீக்கிய மரபின்படி ஆனந்த் காரஜ் திருமணச் சடங்குடன் டெல்லியில் நடைபெற்ற திருமணம் என மூன்று விதமாக இவர்களின் திருமணம் நடைபெற்றது. முனைவர் பட்ட ஆய்வின்போது அர்ஜுன், தேஜ் என்ற இரண்டு மகன்கள் பிறந்த நிலையில், குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பையும், அறிவியல் ஆராய்ச்சியையும் ஒரே நேரத்தில் சிறப்பாக மேற்கொண்டு முனைவர் பட்டத்தை வெற்றிகரமாக முடித்தார். 1991-ஆம் ஆண்டு விரிவுரையாளராக தனது பணியைத் வேலூர் கிறித்தவ மருத்துவக் கல்லூரியில் தொடங்கினார். பின்னர் பேராசிரியராகவும், இரைப்பை மற்றும் குடல் அறிவியல் துறையின் மூத்த பேராசிரியராகவும் உயர்ந்தார். குடல் நோய்கள், குழந்தைகளின் வயிற்றுப்போக்கு, தடுப்பூசிகள் தொடர்பான உலகத் தரமான ஆராய்ச்சி மையமாக வேலூர் கிறித்தவ மருத்துவக் கல்லூரியின் வெல்கம் அறக்கட்டளை ஆராய்ச்சி ஆய்வகத்தை வழிநடத்தி வளர்ச்சியடையச் செய்தார். 2016-ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு வரை இந்திய அரசின் உயிரித் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் மாற்றுச் சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றினார். 2023-ஆம் ஆண்டு முதல் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் உலகளாவிய சுகாதாரப் பிரிவில் இயக்குநராக குடல் நோய்கள், நோயறிதல், மரபணு ஆய்வு மற்றும் தொற்றுநோயியல் தொடர்பான உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் திட்டங்களை வழிநடத்தி வருகிறார். உலகச் சுகாதார அமைப்பின் தடுப்பூசிக் கொள்கை தொடர்பான உயர்மட்ட அறிவியல் ஆலோசனைக் குழுக்களில் உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார். தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்திற்கான தடுப்பூசி தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் தலைவராகவும் செயல்பட்டுள்ளார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்திய அரசின் பல்வேறு அறிவியல் ஆலோசனைக் குழுக்களில் உறுப்பினராக இருந்து, பொதுச் சுகாதார வழிகாட்டுதல்களை வழங்கினார். குழந்தைகளுக்கு ஏற்படும் கடுமையான வயிற்றுப்போக்கு மரணங்களுக்குக் காரணமான ரோட்டாவைரஸ் பற்றிய தீவிர ஆராய்ச்சிகளை மேற்கொண்ட மருத்துவர்.ககன்தீப் காங் இந்தியாவின் முதல் உள்நாட்டு ரோட்டாவைரஸ் தடுப்பூசியான 'ரோட்டாவாக்' உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றினார். இதனால், ககன்தீப் காங் அன்போடு "இந்தியாவின் தடுப்பூசித் துறையின் வழிகாட்டித் தாய்" (வேக்ஸின் காட் மதர் ஆஃப் இந்தியா) என்று அழைக்கப்படுகிறார். 400 ஆண்டுகால வரலாற்றுப் பாரம்பரியம் மிக்க லண்டன் ராயல் சொசைட்டியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியப் பெண் விஞ்ஞானி இவரே. ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள கிராமப்புறக் குழந்தைகள், சுகாதாரமற்ற சூழலில் வாழும் மக்களின் குடல் நோய்கள் குறித்து மருத்துவர்.ககன்தீப் காங் நடத்திய விரிவான கள ஆய்வுகள் இந்திய பொதுச் சுகாதாரக் கொள்கைகளில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி, லட்சக்கணக்கான ஏழைக் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற உதவின. மருத்துவம், உயிரியல், அறிவியல் துறையில் செய்த சாதனைக்காக இன்போசிஸ் விருதும் உலகளாவிய பொதுச் சுகாதாரப் பங்களிப்பிற்காக கனடா கார்ட்னர் உலகளாவிய சுகாதார விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்தியாவின் பிரபல பொதுச் சுகாதார மருத்துவ நிபுணர்களுடன் இணைந்து "டில் வீ வின் – கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம்" (Till We Win) என்ற நூலை எழுதினார். உலகின் பல நாடுகளுக்குச் சென்று மருத்துவ ஆராய்ச்சிகளில் பங்கேற்றிருந்தாலும், எளிமையான வாழ்க்கை முறையையே கடைப்பிடித்தார். வேலூரில் பணியாற்றிய காலத்தில் பெரும்பாலும் மிதிவண்டி மற்றும் பொதுப் போக்குவரத்தையே பயன்படுத்தி பயணம் செய்தார். வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம். இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே. Link: விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம். உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/literature/the-vaccine-godmother-of-india-and-pioneer-of-rotavac




