Fuld artikel
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே கமுககுடி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினரைச் சார்ந்த 380-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஆனால், அவ்வூரில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக சுடுகாட்டிற்குச் செல்ல சாலை வசதி என்பதே கிடையாது. இதனால் இறந்தவர்களின் உடலானது விளைநிலங்கள் வழியாக எடுத்துச் செல்லும் அவல நிலையானது அரங்கேறியுள்ளது. நன்னிலம் அருகேயுள்ள கமுககுடி கிராமத்தைச் சேர்ந்த வினித் என்ற வாலிபர் சமீபத்தில் காலமானார். அவரது உடலை அடக்கம் செய்வதற்காக மயானத்திற்கு எடுத்துச் செல்ல சாலை வசதியின்மையால் உறவினர்களும் கிராம மக்களும் வேறு வழியின்றி, இடுப்பளவு பயிர்கள் வளர்ந்துள்ள விளைநிலங்கள் மற்றும் சேறும் சகதியுமான வயலின் வழியாக வினித்தின் உடலை ஆபத்தான முறையில் தோளில் சுமந்து சென்ற அந்த வீடியோ காட்சியானது தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பார்ப்போரைப் பதைபதைக்கச் செய்ததோடு இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. வயல் வழியாக எடுத்துச் செல்லப்படும் சடலம் இதுக்குறித்து சம்பவ இடத்திற்குச் சென்று விசாரித்தபோது அந்த கிராமத்தை சார்ந்த இரா.செந்தில்நாதன் நம்மிடையே பேச தொடங்கினார். "எங்கள் ஊரில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகவே சுடுகாட்டிற்குச் செல்ல சாலை வசதி இல்லை. இதனால், நாங்கள் இறந்தவர்களின் உடலை வயலின் வழியேதான் எடுத்து செல்வோம். இப்படி எடுத்து செல்வதால், ஒவ்வொரு இறப்பின் இறுதி ஊர்வலமும் மிகுந்த சிரமும் அதித சவாலை ஏற்படுத்தும் விதமாகதான் அமைகின்றன. வயலின் வழியே எடுத்து செல்லவதால் விஷ ஜந்துகள் ஏதேனும் கடித்துவிடுமோ என்ற அச்சமும் எங்களுக்கு அவ்வபோது ஏற்படுவது உண்டு. அறுவடைக்காலங்களில் இறப்பு ஏற்பட்டாலும் முற்றிய நெற்கதிர்களைச் சேதபடுத்தும் விதமாகத்தான் இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்லும் சூழலானது உருவாகிறது. இதனால், விளைநிலங்களும் முற்றிய கதிர்களும் பெருமளவில் பாதிக்கப்படுகின்றன. வெயில் காலங்களில் கூட ஏதோ பயிர் சேதமடைவது மட்டும்தான். இதுவே மழைக்காலங்களில் இறப்பு நேர்ந்தால், சேறு, சகதியுமான விளைநிலங்களில், இறந்தவர்களின் உடலை எடுத்துச்சென்று அடக்கம் செய்து வருவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும். இதுக்குறித்து கிராமசபைக் கூட்டங்கள் முதல் ஆர்டிஓ மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வரையிலும் பல இடங்களில் மனு கொடுத்து இருக்கின்றோம். அதுமட்டுமா, பல செய்தி சேனல்கள் மூலமாகவும் இறந்தவர்களின் உடலை இறுதி ஊர்வலம் கொண்டு செல்வதில் உள்ள நடைமுறை சிக்கல்களை வீடியோ காட்சிப் பதிவுகளாகவும் வெளியிட்டு இருக்கிறோம். இவற்றையெல்லாம் பார்த்ததவுடன் ஆர்டிஓ, வட்டாட்சியர் எல்லாம் வந்து பார்வையிட்டு நடவடிக்கை எடுக்கிறோம் என்று சொல்வார்கள். ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுத்ததே கிடையாது. இனிமேலாவது எங்களை அலட்சியப்படுத்தாமல், விரைவில் சுடுகாட்டிற்குச் செல்ல முறையான தார் சாலை அமைத்துக் கொடுத்து, எங்களின் நீண்டநாள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்" என்றனர். இதுகுறித்து நன்னிலம் வட்டாட்சியர் தனசேகரனிடம் கூறியதாவது, "இந்தப் பிரச்னையானது 50 ஆண்டுகளுக்கு மேலாக இருந்துக்கொண்டுதான் இருக்கிறது. சுடுகாட்டிற்கு வயலின் வழியே விளைநிலங்களைச் சேதப்படுத்தி செல்வதைத் தவிர வேறு வழியில்லை. மேலும் வயலின் வரப்பில் இருந்து கிழக்கு பகுதியில் ஆறு அடி அகலமும், மேற்கு பகுதியில் ஆறு அடி அகலமும், 40 மீட்டர் நீளமும் கொண்ட நிலமானது புதிய தார் சாலை அமைக்க தேவைப்படுகிறது. வரும் திங்களன்று நிலத்தின் இரு தரப்பு உரிமையாளர்களிடமும் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி சாலை அமைப்பதற்கான வேலையை முன்னெடுக்க உள்ளோம்" என்று கூறினார். இப்பிரச்னை குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் முதலமைச்சரின் தனிப்பிரிவு வரை பலமுறை மனுக்கள் அளித்தும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இனிமேலும் காலம் தாழ்த்தாமல் கமுககுடி கிராம மக்களின் இந்த அரை நூற்றாண்டு கால அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க, மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் உடனடியாகச் சுடுகாட்டுக்கு சாலை அமைத்துத் தர வேண்டும் எனச் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். பாக்யராஜ் : `உதவியாளர்களை ‘முருகா’ன்னு தான் அழைப்பார்!' - ‘பாக்யா’ அனுபவம் பகிரும் தஞ்சை ரவிராஜ் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Fuld artikel — se linket nedenfor



