திருமணத்துக்குப் பிறகு ஒரு பெண் ஏன் தனது வீட்டை விட்டுவிட்டு கணவரின் வீட்டுக்குச் செல்ல வேண்டும், காதலில் சமத்துவம் பேசும் ஆண்கள், திருமணத்துக்குப் பிறகும் அதே சமத்துவத்தை ஏற்றுக்கொள்கிறார்களா - இந்த இரண்டு கேள்விகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கிறது இயக்குநர் இளன் நாயகனாக அறிமுகமாகியிருக்கும் ‘பியார் பிரேமா கல்யாணம்’. துபாயில் நல்ல வேலையில் இருக்கும் இளன், தமிழகத்தில் காதலித்துத் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற ஆசையில் தனது வேலையை விட்டுவிட்டு சென்னை வருகிறார். மறுபுறம், ‘Purple Pavi’ என்ற பெயரில் பிரபலமான சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சராக இருக்கும் பவித்ரா (சான்வி மேக்னா), பெற்றோர், தாத்தா, செல்லப்பிராணி, கனவு வேலை எனத் தனது வீட்டுடனும் குடும்பத்துடனும் ஆழமான பிணைப்புடன் வாழ்கிறார். Pyaar Prema Kalyanam Review இருவரும் சந்தித்துக் காதலித்து, திருமணமும் செய்துகொள்கிறார்கள். திருமணம் முடிந்ததும் கணவர் வீட்டுக்குச் செல்ல மறுக்கும் பவி, “நான் ஏன் என் வீட்டை விட்டுவர வேண்டும்?” என்று கேள்வி எழுப்புகிறார். இறுதியில் இளனே மனைவியின் வீட்டுக்குச் சென்று வாழ வேண்டிய சூழல் உருவாகிறது. திருமணத்துக்குப் பிறகு கணவர் வீட்டுக்குச் செல்லும் பெண்ணிடம் வழக்கமாக எதிர்பார்க்கப்படும் பொறுப்புகளையும் சமரசங்களையும் ஓர் ஆண் எதிர்கொண்டால் என்ன நடக்கும் என்பதை ஜாலியான ரொமான்டிக் காமெடியாகச் சொல்ல முயன்றிருக்கிறார் இளன். நடிகராக அறிமுகமாகியிருக்கும் இயக்குநர் இளன், துறுதுறுப்பான இளைஞர் வேடத்துக்குப் பொருந்துகிறார். நகைச்சுவைக் காட்சிகளை இயல்பாகக் கையாண்டு பாஸ் மார்க் வாங்கும் அவர், முக்கியமான உணர்வுபூர்வக் காட்சிகளில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தத் திணறுகிறார். தன்னம்பிக்கை, சுதந்திரச் சிந்தனை, குடும்பத்தின் மீதான பிணைப்பு, காதல் எனப் பவியின் பல பரிமாணங்களையும் இயல்பாக வெளிப்படுத்துகிறார் சான்வி மேக்னா. பவியின் அம்மாவாக ராதிகா சரத்குமார் தனது அனுபவத்தால் பல காட்சிகளைத் தூக்கி நிறுத்துகிறார். கண்டிப்பான தந்தையாக எம்.எஸ்.பாஸ்கரும் வழக்கம்போல கதாபாத்திரத்திற்கு நம்பகத்தன்மை சேர்க்கிறார். இளங்கோ குமரவேல், கீதா கைலாசம், செந்தில் உள்ளிட்டோர் குடும்பச் சூழலுக்கு இயல்பான உயிரோட்டத்தைக் கொடுக்கின்றனர். யோகி பாபுவின் கதாபாத்திரமும் நடிப்பும் எதிர்பார்த்த அளவு நகைச்சுவைக்குக் கைகொடுக்கவில்லை. Pyaar Prema Kalyanam Review யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்துக்குத் தேவையான உற்சாகத்தைக் கொடுத்தாலும், பாடல்கள் தனித்துத் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. முந்தைய இளன்–யுவன் கூட்டணியிலிருந்த மேஜிக் இதில் மிஸ்ஸிங்! தினேஷ் கே.பாபுவின் ஒளிப்பதிவு, ஒரு கலர்ஃபுல்லான ரொமான்டிக் காமெடிக்குத் தேவையான அழகைச் சேர்க்கிறது. ட்ரெண்ட்டுக்கு ஏற்ற பிரதீப் ஈ.ராகவ்வின் படத்தொகுப்பு, காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்தினாலும், சில இடங்களில் அவை அளவுக்கு அதிகமான வேகத்தில் கடப்பதால் உணர்வுகள் அழுத்தம் பெறாமல் போகின்றன. கோபி ஆனந்த் மற்றும் ஸ்ரீனிவாஸ் கலிங்காவின் கலை இயக்கம், பவி மற்றும் இளனின் வீடுகளைத் தனித்துவமாக வடிவமைத்து, இரு குடும்பங்களின் வாழ்க்கை முறைகளையும் வேறுபடுத்தி காட்டுகிறது. Bethlehem Kudumba Unit Review: க்யூட் நிவின் பாலி, ஸ்வீட் மமிதா - மற்றுமொரு அடிபொலி மலையாள சினிமா! படத்தின் மையக்கருவே அதன் முக்கியமான பலம். இளனுக்குத் தனது வீடும் குடும்பமும் முக்கியம்; பவிக்கும் அப்படித்தான். ஆனாலும், திருமணத்துக்குப் பிறகு பவி மட்டும் தனது உலகத்தை விட்டுவிட்டு வர வேண்டும் என்பதை இளன் இயல்பான ஒன்றாக எடுத்துக்கொள்கிறார். இந்த முரண்பாட்டின் வழியே திருமண உறவுக்குள் மறைந்திருக்கும் பாலினப் பாகுபாடுகளைக் கேள்விக்குட்படுத்துகிறது படம். சமையல் செய்வது, துணி துவைப்பது, மளிகைப் பொருள்கள் வாங்குவது, குடும்பத்தைப் பராமரிப்பது போன்றவை ஏன் பெண்களின் வேலைகளாக மட்டுமே பார்க்கப்படுகின்றன? ‘ஹவுஸ் ஹஸ்பண்ட்’ ஆக இருப்பது ஏன் ஆண்மைக்கு இழுக்காகக் கருதப்படுகிறது? திருமணத்துக்குப் பிறகு நிகழும் மாற்றங்களும் சமரசங்களும் ஏன் இருவருக்கும் சமமாக இருப்பதில்லை? இப்படிப் பல முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது படம். ஆனால், அவற்றைத் தேவையான அழுத்தத்துடனும் தீவிரத்துடனும் விவாதிக்காததால், அவை வெறும் சம்பிரதாய காட்சிகளாகவே நின்றுவிடுகின்றன. Pyaar Prema Kalyanam Review இந்தக் கருத்துகளை ஆழமாக அணுகுவதற்குப் பதிலாக, பழைய மாமியார்–மருமகள் மோதல் காட்சிகளில் பாலினத்தை மட்டும் மாற்றிவிடுகிறது திரைக்கதை. வீட்டு வேலை செய்யும் இளனை நகைச்சுவைப் பொருளாக்குவதும், பாத்திரம் கழுவும் மகனை அவரது அம்மா பெண் உடையில் கற்பனை செய்வதும் படம் பேச நினைக்கும் கருத்துக்கே எதிராக நிற்கின்றன. பாலினம் சார்ந்த பழைய கற்பிதங்களை உடைக்க வேண்டிய படம், நகைச்சுவைக்காக அதே கற்பிதங்களைப் பாலின மாற்றம் மட்டும் செய்து மீண்டும் பயன்படுத்துவது பெரும் முரண். முக்கியமான கேள்விகளை எழுப்பும் ‘பியார் பிரேமா கல்யாணம்’, அவற்றை ஆழமாக விவாதிக்கும் படைப்பாக இல்லாமல், ‘பியார் பிரேமா காமெடி’யாகவே நின்றுவிடுவது ஏமாற்றம்! Ram and Leela Review: ஃபேன்டஸி ஐடியா ஓகே; ஆனால் காமெடியும் திரைக்கதையும் புதுமை சேர்க்கின்றனவா?மொத ராத்திரி விமர்சனம்: கலகல காமெடி விருந்தும், மொய் வைக்கப்படும் மெசேஜும்! கல்யாணம் களைகட்டுகிறதா? இளன் தனது புதிய குடும்பச் சூழலை எதிர்கொள்ளும் சில காட்சிகள் மட்டும் காமெடியில் தப்பிக்கின்றன. ஆனால், காதல் அத்தியாயம் ‘ஃபாஸ்ட் ஃபார்வர்டில்’ நகர்வதும், அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பதை எளிதில் கணிக்க முடிவதும் சலிப்பை ஏற்படுத்துகின்றன. பெரும்பாலான காட்சிகள் வழக்கமான ரொமான்டிக் காமெடி ஃபார்முலாவுக்குள் வரிசைகட்டி நிற்பதால், படத்தின் மையக்கரு ஏற்படுத்த வேண்டிய தாக்கமும் குறைந்துவிடுகிறது. Pyaar Prema Kalyanam Review கதாபாத்திரங்களின் மனமாற்றங்களும் இயல்பாக நிகழ்வதில்லை. பிரதான ஆணாதிக்கக் கதாபாத்திரம் ஒன்று இறுதியில் மனம் மாறுவதற்கெல்லாம் காரணமே சொல்லப்படவில்லை. இப்படியான மாற்றங்களைச் சம்பவங்களின் வழியே பார்வையாளர்களுக்கு உணர்த்துவதற்குப் பதிலாக, வசனங்களின் மூலமாக மட்டுமே கடத்த முயற்சி செய்கிறது படம். இதனால் இறுதியில் படம் என்ன தீர்வை முன்வைக்கிறது என்பதிலும் தெளிவின்மையே மிஞ்சுகிறது. மொத்தத்தில், இன்னும் அழுத்தமாகவும் தெளிவாகவும் சொல்லப்பட்டிருந்தால், இந்தக் கல்யாணத்துக்கு நாமும் மனதார அட்சதை போட்டிருக்கலாம்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://cinema.vikatan.com/kollywood/elan-and-saanve-megghana-starrer-pyaar-prema-kalyanam-netflix-movie-review



