திருப்பூர், தொடரும் பஞ்சு விலை உயர்வால், நூல் விலையும் அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜவுளி தொழில்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர். நூல் விலை உயர்வு இந்திய பருத்தி கழகத்தின் தவறான அணுகுமுறையால், பருத்தி பஞ்சு விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக, ஜவுளி தொழில்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர். நடப்பு சீசன் தொடக்கத்தில், ரூ.54 ஆயிரத்துக்கும் குறைவாக இருந்த ஒரு கேண்டி (356 கிலோ) பஞ்சு விலை, 11 மாதங்களில், ரூ.21 ஆயிரத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதனால், ஒசைரி நூல் விலையும், கிலோவுக்கு ரூ.72 வரை உயர்த்தப்பட்டுள்ளது. செயற்கை விலை உயர்வு இதுகுறித்து நூற்பாலை உரிமையாளர்கள் கூறியதாவது:- “நடப்பு பருத்தி ஆண்டில் (2025 அக்டோபர் முதல் 2026 செப்டம்பர் வரை) பஞ்சு உற்பத்தி குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்திக் கொண்ட இடைத்தரகர்கள் அதிகளவில் பஞ்சை கொள்முதல் செய்து இருப்பு வைத்து, செயற்கையாக விலையை உயர்த்தி வருகின்றனர். மேலும், மத்திய அரசு பஞ்சு இறக்குமதிக்கான வரிவிலக்கு சலுகையை காலதாமதமாக அறிவித்ததால், பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி, இதர செலவுகள் நீங்கலாக ஒரு கேண்டி பஞ்சு விலை ரூ.71 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் ஏற்பட்ட பஞ்சு விலை உயர்வை கணக்கில் எடுத்தால், நூல் விலை கிலோவுக்கு ரூ.92 வரை அதிகரித்திருக்க வேண்டும். இருப்பினும், ஜவுளி உற்பத்தியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, கிலோவுக்கு ரூ.72 மட்டுமே உயர்த்தியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளனர். விலை நிர்ணயம் மேலும் இதுதொடர்பாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் சுப்பிரமணியன் கூறும்போது, “நூல் விலை அடிக்கடி உயர்த்தப்படுவதால் ஏற்றுமதி வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய பருத்திக் கழகம் தினசரி பஞ்சு விலையை நிர்ணயம் செய்வதை தவிர்த்து, மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே விலையை நிர்ணயிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட வேண்டும். மேலும், இடைத்தரகர்களின் தலையீட்டால் பஞ்சு விலை செயற்கையாக உயர்வதைத் தடுக்க, இந்திய பருத்திக் கழகம் நூற்பாலைகளுக்கு மட்டுமே பஞ்சை விற்பனை செய்யும் வகையில் அரசு கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும்” என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/rising-yarn-prices-from-cotton-cost-surge-export-trade-hit




