ஆடி வந்தாலே அம்மன் கோயில் வழிபாடு, கூழ் ஊற்றுதல், முளைப்பாரி, ஆடிப்பெருக்கு, இவைதான் நம் நினைவுக்கு வரும். ஆனால் சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி, கரூர் உள்ளிட்ட கொங்கு மண்டல கிராமங்களில் ஆடி முதல் நாளை வரவேற்கும் ஒரு தனித்துவமான மரபு இருக்கிறது. அதுதான் 'தேங்காய் சுடும் நோன்பு!' மாலை சூரியன் மறையத் தொடங்கும் நேரம். வீட்டின் வாசலில் சிறு நெருப்பு மூட்டப்படும். குச்சியில் குத்தப்பட்ட தேங்காய்கள் மெதுவாக நெருப்பில் சுடப்படும். நெருப்பில் வெந்த தேங்காயின் மணம் ஊர் முழுக்க வீச, குழந்தைகள் அதைச் சுற்றி ஆர்வமாக நிற்க, பெரியவர்கள் பூஜைக்குத் தயாராவார்கள். தமிழகத்தின் பல பகுதிகளுக்குத் தெரியாத இந்த மணம், கொங்கு மண்ணின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்று. தேங்காய் மகாபாரதப் போரும் தேங்காய் சுடுதலும். மேலோட்டமாகப் பார்த்தால், இது ஒரு சமையல் முறை போலத் தோன்றும். ஆனால், இது ஒரு வழிபாடு. தமிழ் மாதங்களில் ஆடி ஒரு திருப்புமுனை தென்மேற்குப் பருவமழை தொடங்கும் காலம், விவசாயப் பணிகளுக்கான ஆயத்தக் காலம். எனவே, இயற்கை வளமாகவும், குடும்பம் நலமாகவும், விளைச்சல் சிறப்பாகவும் இருக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு இந்த வழிபாடு நடத்தப்படுகிறது. மகாபாரதப் போருடன் தொடர்பு இருக்கிறதா? கொங்கு நாட்டுப்புற நம்பிக்கையின்படி, மகாபாரதப் போர் ஆடி மாதம் முதல் நாளில் தொடங்கி, பதினெட்டாம் நாளில் முடிந்ததாக ஒரு வாய்மொழிக் கதை உண்டு. தர்மம் வெல்ல வேண்டும் என்ற எண்ணத்தில், மக்கள் விநாயகருக்குத் தேங்காயைச் சுட்டுப் படைத்ததாக அந்தப் பகுதி மக்கள் நம்புகின்றனர். இது வரலாற்றில் இடம்பெறாவிட்டாலும், தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் ஓர் அழகான நாட்டுப்புறக் கதை. பொதுவாகக் கோயில்களில் தேங்காயை உடைத்து வழிபடுவோம். இங்கே உடைப்பதில்லை. தேங்காயின் ஒரு கண்ணைத் துளைத்து, நீரை வெளியேற்றிவிட்டு, உள்ளே இனிப்பான பூரணத்தை நிரப்புகிறார்கள். பச்சரிசி, வெல்லம், பொட்டுக்கடலை, எள், பாசிப்பருப்பு, அவல் மற்றும் ஏலக்காய் என அனைத்தையும் சேர்க்கிறார்கள். நெருப்பின் சூட்டில் வெல்லம் உருகி, தேங்காயின் உள்ளேயே சுவை மிகுந்த பிரசாதமாக மாறிவிடும். சில இடங்களில் தேங்காய் துருவல், முந்திரி, திராட்சையும் சேர்ப்பார்கள். இது அவரவர் குடும்ப வழக்கத்தைப் பொறுத்தது. விநாயகர் 'அழிஞ்சில்' குச்சியின் ரகசியம்! இந்தச் சடங்கில் 'அழிஞ்சில்' மரக்குச்சிகளுக்கே முதலிடம். ஏன் தெரியுமா? ஈரப்பதம் அதிகம் இருப்பதால், அது உடனே தீப்பிடிக்காது. நீண்ட நேரம் தேங்காயைச் சுடுவதற்கு வசதியாக இருக்கும். அதேநேரம், சித்த மருத்துவ மரபில் அழிஞ்சில் மரத்திற்கெனத் தனி மருத்துவ குணங்கள் சொல்லப்படுகின்றன. அதைத் தேங்காயுடன் சுட்டு உண்ணும்போது, உடலில் ஒரு நலம் சேரும் என்பது பெரியவர்களின் நம்பிக்கை. ஒரு காலத்தில் இது கிராம மக்களை ஒன்றிணைக்கும் சமூக நிகழ்வாக இருந்தது. உறவினர்கள் கூடுவார்கள்; குழந்தைகள் நெருப்பைச் சுற்றி விளையாடுவார்கள். பெண்கள் பூரணம் தயாரிக்க, பெரியவர்கள் ஊர் கதைகளைப் பேசுவார்கள். அந்த ஒரு மாலை, ஒரு வீட்டின் விழாவாக இல்லாமல், அந்தத் தெருவின் விழாவாக மாறிவிடும். தேங்காய்க்குள் நிரப்பப்படும் இனிப்பு. அதை மெதுவாகச் சுடும் நெருப்பு. அதைச் சுற்றி நிற்கும் குடும்பம். இது வெறும் சமையலோ வழிபாடு மட்டும் அல்ல; ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்குக் கடத்தப்படும் பண்பாட்டு நினைவு. ஆடி முதல் நாளில் கொங்கு மண்டல கிராமங்களில் எழும் அந்தப் புகை, தேங்காய் சுடும் நெருப்பின் புகை மட்டுமல்ல. அது ஒரு வட்டாரத்தின் வரலாறு, நம்பிக்கை, உறவு. மண்ணோடு கலந்த அந்த வாழ்க்கை முறை இன்றும் அணையாமல் இருப்பதற்கான சாட்சி. தேங்காய் சுடும் நோன்பு என்பது ஒரு சடங்கு மட்டுமல்ல; கொங்கு மண்ணின் வாழும் பாரம்பர்யம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/spiritual/festivals/aadi-day-1-the-unique-coconut-roasting-festival-of-kongu-nadu-do-you-know-why




