Fuld artikel
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் ‘ஆனந்த விகடனி’ல் ஒரு முறை விஜய் பற்றிய ஒரு கட்டுரையின் ஆரம்பம் இப்படி இருந்தது, “வருஷம் ஏற ஏற இந்த மனுஷனுக்கு மட்டும் வயசு குறைந்து கொண்டே போகுது” என்று. இன்றைக்கும் கூட இந்த வரிகள் அவருக்குப் பொருத்தமாக தான் இருக்கிறது. ஆரம்ப கால திரைப்படங்கள் அறிமுகத்திற்கும், அவருக்கான சில அனுபவங்களுக்கும் மட்டுமே அதிகம் உதவின. இயக்குநர் ‘விக்ரமனின்’, “பூவே உனக்காக” திரைப்படம் தான் விஜய் அவர்களை வெகுஜன மக்களிடம் வெகுவாக கொண்டு சேர்த்தது. அந்தத் திரைப்படத்திலிருந்து தான் பெண்களை, அதாவது கல்லூரி செல்லும் இளம் பெண்கள் முதற்கொண்டு குடும்பத் தலைவிகள் வரை ரசிகைகளாக மாற்றியது. எங்கள் கல்லூரி விடுதியில் எப்போதேனும் ஒரு முறை ஞாயிறு அரைநாள் ‘அவுட்டிங்’க்கு அனுமதி கொடுப்பார்கள். திருச்சியில், கோவில், சினிமா, கடைவீதி என்றுதான் தோழிகளுடன் வெளியில் செல்வதுண்டு. என் அக்கா & தோழிகள் விஜய் ரசிகைகளாக இல்லாமல் கிடைத்த நேரத்தில் ஒரு சினிமாவிற்கு போவோம் என்றுதான் “பூவே உனக்காக” படத்திற்கு சென்றிருக்கிறார்கள். பூவே உனக்காக விடுதிக்குத் திரும்பிய பின் படத்தைப் பற்றியும் விஜயை பற்றியும் அதிகம் பேசி சிரித்து ரசிகைகளாகி விட்டார்கள். அதற்குப் பின் வந்த “காதலுக்கு மரியாதை” படம் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்த படமாக, விஜயை தங்கள் வீட்டுப் பிள்ளையாக பார்க்க வைத்தது. பொங்கலுக்கு விடுதியிலிருந்து வீட்டுக்குச் செல்லும் முன், இந்தப் படத்தை, விஜய் இரசிகைகளின் பிடிவாதத்தால் அனைவரும் சேர்ந்து தியேட்டரில் பார்த்ததும், அதைப்பற்றி பேருந்திலும், கூட்டத்தைக் கூட பொருட்படுத்தாமல் பேசி மகிழ்ந்ததும் இன்றும் பசுமையான நினைவுகள். அதற்குப்பின் பல வெற்றிப் படங்கள். வியாபார ரீதியாகவும் மிகப் பெரிய மைல் கல் பதித்தார். ஒரு முறை, தூர்தர்ஷனில் “ஹம் ஆப்கே தில் மேன் ரஹ்தா ஹை” என்ற ஹிந்தி படம் போட்டார்கள். இந்தப் படத்தின் மறு உருவக்கம் தான் விஜயின் “பிரியமானவளே“ படம். அப்போது, “பிரியமானவளே“ படம் ரிலீசாகவில்லை. இந்த விஷயத்தை நான் சொன்னவுடன் தீவிர விஜய் இரசிகையான எங்கள் மாமாப்பெண் “ஹே அப்ப நாம இந்த படத்தைப் பார்க்கலாம்ப்பா” என்று சொல்லி, பிள்ளைகள் நாங்கள் அனைவரும் படம் பார்க்க அமர்ந்தோம். ஹிந்தி படம் பார்க்கும்போது, வீட்டில் இன்னொரு காமெடியும் நடக்கும். ஹிந்தி பட வசனங்களுக்கு தமிழ்ல அர்த்தம் சொல்றது என் தங்கச்சி தான். படத்துல பெரிய பெரிய வசனமா வரும். என் தங்கச்சி சின்ன சின்னதா சொல்லி முடிச்சுடும். எங்க மாமாவின் சின்னப்பெண், “என்ன நீ? அங்க அவ்ளோ பெருசு பெருசா பேசுறாங்க… நீ கொஞ்சமா தான் சொல்ற?” அப்படின்னு அடிக்கடி கேட்கும். “அதெல்லாம் அர்த்தம் அவ்வளவுதான்… பேசாம படத்தைப் பாரு.. எனக்கு புரிந்ததை வைத்து சொன்னா அதுல உனக்கு டவுட் வேற” என்று மிரட்டும் என் தங்கச்சி. பிரியமானவளே #VikatanReview படம் முடிந்த பின் படுக்க செல்லும் முன் எங்கள் வீட்டு தீவிர விஜய் இரசிகை சோக கீதம் வாசித்தது. என்னவென்று விசாரித்த போது, “என்னப்பா… இந்த படத்துல இப்படி ஒரு வருஷம் அக்ரீமெண்ட் எல்லாம் போடுறாங்க… கிழவிங்க எல்லாம் விஜய திட்டுமே.” அப்படின்னு ஒரு கவலையுடன் புலம்பியது. ‘அடப்பாவி’ என்று நாங்கள் கிண்டல் செய்தோம். தீவிர ரசிகர்களாக இல்லாவிட்டாலும் கூட எல்லாருடைய மனதிலும், நம்ம வீட்டுப் பையன் என்ற எண்ணத்திற்கு மேலும் வலு சேர்த்தது “கில்லி” திரைப்படம். அதில், ‘அண்ணன் தங்கை சண்டை’, ‘அப்பாவி அம்மாவை செல்லமாக ஏய்க்கும் மகன்’, ‘நம்பிக்கை கொடுக்கும் நண்பன்’, ‘வில்லனிடம் காட்டும் வேகம்’ என்று மிக இயல்பாக மிகைத்தன்மை இல்லாமல் நடித்திருந்தது தான் மக்களின் மனதில் பெரிய இடத்தை கொடுத்தது. எல்லா நடிகர்களுக்கும் எல்லா விதமான பாவனைகளும் இயல்பாக பொருந்தி விடுவதில்லை. அப்பாவித்தனம், அடப்பாவித்தனம், குறும்புத்தனம், திமிர்த்தனம், அடாவடித்தனம், சாகசம் செய்யும் ஹீரோயிசம் என அனைத்துமே இவருக்கு இயல்பாக பொருந்திப் போவது தான் இவருக்கு மிகப்பெரிய பலம். அதைவிட ஆகச் சிறந்த பலம்… “நடனம்”. விஜயின் நடனத்தை விரும்பாதவர்களே இருக்க முடியாது. குத்துப்பாட்டுக்கு எல்லாம் கூட மிக நன்றாகத்தான் ஆடுவார். ஆனாலும் கூட அவரின் அழகான நளினமான நடன அசைவுகள் தான் “அப்பப்பா… அபாரம்” ரகமாக, அதிகம் வசீகரிக்கும். 90களில் வந்த படங்கள் முதற்கொண்டு சமீபத்தில் வந்த ‘அரபிக்குத்து’, அதற்குப் பின்னும் கடைசியாக மேடையில் ஆடியது வரை, நடனத்தில் காட்டும் நளினம் கடவுள் அவருக்குக் கொடுத்த கொடை. சக நண்பர்களும், நடிகர்களும் பொது வெளியில் கூட, அவரின் நடனத்திறமைக் குறித்த, தங்களின் அதிகபட்ச பொறாமையை சந்தோஷமாக வெளிப்படுத்துவதுண்டு. நடுவில் சில படங்கள் அதிக ஹீரோயிசம் மட்டும் காட்டி விமர்சனத்திற்கு உள்ளான போது, ரசிகர்கள் மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் கூட மீண்டும் அவரின் நல்ல படங்களைப் பார்க்க ஆசை இருந்தது. விகடனில் கூட அதை பற்றி விஜய்க்கு சுட்டிக்காட்டி ஒரு கட்டுரை வெளி வந்திருந்தது. எங்கள் வீட்டு இரசிகையை தான் நாங்கள் கிண்டல் செய்வோம். “என்ன உங்க தலைவர் படம் எப்படி இருக்கு?” அப்படின்னு. உடனே அது “உங்களுக்கும் விஜய் டான்ஸ் தானப்பா பிடிக்கும்.. அப்புறம் ஏன் இப்படி சொல்றீங்க?” என்று அவருக்குக் கொடி பிடிக்கும். “புலி” படம் ஒரு பெருவெற்றி பெறாத படம் என்று சொல்வார்கள். ஆனால் குழந்தைகளிடம் அவரை அதிகமாக கொண்டு சேர்த்ததில் அந்த படத்திற்கு மிகப்பெரிய பங்கு உண்டு. என் தோழிகள் பலரின் பிள்ளைகள் மீண்டும் மீண்டும் அந்த படத்தை சிரித்து ரசித்துப் பார்த்ததை பலமுறை சொல்ல கேட்டிருக்கிறேன். இதுபோல ஏதோ ஒரு வகையில், அனைத்து தரப்பினரின் மனதிலும் அவர் இடம் பிடித்திருக்கிறார். அவரின் இரசிகர்களைத் தாண்டி, நிறைய பேருக்கு அவர் மீது ஒரு பிடித்தமும் அன்பும் உண்டு. இந்த அன்பு தான் இன்று ஓட்டாக மாறியிருக்கிறது. ஒருவர் மீது குறைந்தபட்ச, அடிப்படையான அன்போ, நல்லெண்ணமோ இல்லாவிட்டால், “பிள்ளைகள் சொன்னார்கள்”, “பேரப்பிள்ளைகள் சொன்னார்கள்” என்பதற்காக, இத்தனை வருடப் பழக்கத்தை மாற்றி ஓட்டு போட்டிருக்க மாட்டார்கள். எந்த வகையிலும் தாங்கள் கொஞ்சம் கூட விரும்பாத ஒருவருக்கு, பிள்ளைகள்/ பேரப்பிள்ளைகள் சொன்னதற்காக ஓட்டு போடுவார்களா என்ன? “போடா வேலையை பார்த்துக்கிட்டு.. உனக்கென்ன தெரியும் ஓட்டு, ஆட்சி, அரசியல் பத்தியெல்லாம்?” என்று அலட்சியம் தானே செய்திருக்க முடியும். அன்பிற்குரிய விஜய் அவர்களே, “நாளைய தீர்ப்பி”ல் தொடங்கி, “மாண்புமிகு மாணவன்” என்பதிலிருந்து இன்று “மாண்புமிகு முதல்வர்” என்ற உங்களது இந்தப் பயணத்தில், பெரும்பாலானோரின் இளகிய நெகிழ்வான அன்பையும், நம்பிக்கையையும் சம்பாதித்து இருக்கிறீர்கள். அந்த அன்பின் பரிசு தான் இன்றைய அரியாசனம். ஏதோ ஒரு அவமானத்தின், வலியின், ஆவேசம் தான் உங்களை இந்த இடத்திற்கு உந்தி தள்ளியிருக்கிறது என்று தோன்றுகிறது. வானத்தை வில்லாக வளைப்பது போன்ற இந்த பெருவெற்றியை, கவிஞர் ‘வாலி’ யின் வார்த்தைகள் கொண்டு வர்ணிப்பது மிகப்பொருத்தமாக இருக்கும். “வியந்தது வான்; மகிழ்ந்தது மண்; இசைத்தது காற்று - இன்னிசைப் பண்!! உண்மையிலேயே எல்லோருமே, ஏதோ ஒரு விதத்தில் இந்த அசாத்திய வெற்றிக்கு ஆச்சரியப்பட்டார்கள்…. சந்தோஷப்பட்டார்கள்…. கொண்டாடினார்கள். எப்படி இருந்தாலும் ஒரு மாற்றத்திற்கான முகவரியாக மக்கள் அளித்திருக்கும் “இன்றைய தீர்ப்பு”, நன்மைக்கான, நல்ல முன்னேற்றத்திற்கான பாதையை காட்டும் என்று நம்புகிறார்கள். அவர்கள் மீதான உங்கள் அன்பும், அக்கறையும், உண்மை என்றும், அதை மனதிற்கு மிகவும் நெருக்கமாகவும் உணர்கிறார்கள். யாருமே எதிர்பார்க்காத ஒரு பெருவெற்றி, பேரன்பின் வெற்றி. தங்களை நம்பி, தங்களின் பின் வந்தவர்களையும், அரசவையில் இருப்பவர்களையும், அனுபவமும், நேர்மையும், நல்லெண்ணமும் கொண்ட அதிகாரிகளின் துணைகொண்டு சரியாக நடந்து, வழி நடத்தி, ஆச்சரியங்களை அதிகப்படுத்திக் கொண்டே செல்வதில் தான் வெற்றிக்கான உண்மையான பலனும் சந்தோஷமும் ஒளிந்திருக்கிறது. முதல்வரான பின் வரும் முதல் பிறந்தநாள். பெருங்கடமை உங்கள் முன்னால். அனைத்து சவால்களையும் சமாளித்து, சாதனைகளாக மாற்ற எல்லாம் வல்ல இறையருள் உங்களுக்கு துணையிருக்க வேண்டுகிறோம். வாழ்த்துகிறோம். இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் விஜய் சார்!! வாழ்க வளமுடன்!! என்றும் அன்புடன் உங்கள் நடனத்தின் பெரும் ரசிகை, சியாமளா கோவிந்தராஜு, திருச்சி. வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...! Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Fuld artikel — se linket nedenfor



