மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ‘மாற்றம்’ என்ற முழக்கத்தோடு ஆட்சிக்கு வந்த புதிய அரசு, 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறது. ஏற்கெனவே, மாநில நிதிநிலை அழுத்தத்தில் இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், கூடுதல் கடன் சுமையை உருவாக்காமல் எந்தளவுக்கு இந்த அரசு சமநிலையைப் பேணப்போகிறது என்ற கேள்வியோடு நிபுணர்களும், வழங்கப்பட்ட வாக்குறுதி களில் எதையெல்லாம் அறிவிக்கப்போகிறார்கள் என்ற கேள்வியோடு மக்களும் இந்த பட்ஜெட்டை எதிர்நோக்கியிருந்தார்கள். இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதில் கிடைத்ததா என்பது மற்றுமொரு கேள்வியாகி இருக்கிறது. ஒரு மாநிலத்தின் பட்ஜெட் என்பது வெறும் வரவு - செலவுக் கணக்கு அல்ல. நிலையான வருவாயை உருவாக்குவது முதல் பொருளாதார வளர்ச்சி வரையிலான முக்கியத் திட்டமிடல் அது. வருவாய் இல்லாமல் நலத்திட்டங்கள் நீண்டகாலம் நீடிக்க முடியாது. வருவாய் வளர, முதலீடுகள் அதிகரிக்கப்பட வேண்டும். முதலீடுகள் அதிகரிக்க, தொழில்கள் வளர வேண்டும். அதன் வழியாகவே வேலைவாய்ப்புகள் உருவாகும். இதுதான் நிலையான பொருளாதார வளர்ச்சி நிலை. அந்தக் கோணத்தில், தமிழகத்தின் வளர்ச்சிக்கு அச்சாணியாக விளங்கும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (MSME) துறைக்கு இன்னும் அதிக முக்கியத்துவம் அளித்திருக்கலாம். மாநிலத்தின் உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் வேலைவாய்ப்பில் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கும் இந்தத் துறைக்கு கூடுதல் முதலீட்டு ஊக்கங்கள், தொழில்நுட்ப மேம்பாடு, சந்தை விரிவாக்கம் மற்றும் நிதி அணுகலை வலுப்படுத்தும் அறிவிப்புகள் இன்னும் இடம்பெற்றிருந்தால், அது நீண்டகால வளர்ச்சிக்கு கைகொடுத்திருக்கும். அதேநேரம், செயற்கை நுண்ணறிவு நகரம் உருவாக்கும் முயற்சி, ஜவுளித் துறைக்கான திறன் மேம்பாட்டு நிறுவனம் போன்ற திட்டங்கள் எதிர்காலப் பொருளாதாரத்தை நோக்கிய பார்வையைப் பிரதிபலிக்கின்றன. விளையாட்டு மற்றும் இளைஞர் நலனுக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்பட்டிருப்பதும் மனித வள மேம்பாட்டுக்கான சிறந்த அணுகுமுறை. ஆனால், எதிர்காலத் தமிழகத்தின் பொருளாதார வெற்றியை நிர்ணயிக்கப் போவது மூன்று அம்சங்கள்தான். வளர்ச்சி, வேலைவாய்ப்பு, மக்களின் வாழ்க்கைத் தரம். இவற்றை மையமாகக் கொண்ட திட்டங்களே முக்கியம். நிர்வாக ரீதியில் செய்யப்படும் மாற்றங்கள், வருவாய் இழப்புகளைச் சரிசெய்யும் நடவடிக்கைகள் போன்றவை பலன் அளித்தால் மட்டுமே, வேகமாக வளரும் மாநிலம் என்ற பெயர் தமிழ்நாட்டுக்கு நிலைத்திருக்கும். தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் இலக்கு என்பது, வேலைவாய்ப்பு உருவாக்கம், தொழில் விரிவாக்கம், உற்பத்தித் திறன் உயர்வு, முதலீட்டு ஈர்ப்பு மற்றும் மனித வள மேம்பாடு ஆகியவற்றின் கூட்டுத்தொகைதான். இவற்றில் எதிலும் பின்தங்கிவிடாமல் செயல்பட வேண்டும் அரசு. இன்னும் காலம் இருக்கிறது. எதிர்பார்ப்புகள் நிறைவேறும் என்று நம்புவோம்! -ஆசிரியர் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/government-and-politics/tamilnadu-budget-review




