சென்னை, சென்னை வெளிவட்ட சாலையை தனியாருக்கு வழங்க தி.மு.க. ஆட்சியில் உருவாக்கப்பட்ட ஒப்பந்தத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- “சென்னை வண்டலூர் முதல் மீஞ்சூர் வரையிலான 60 கி.மீ நீள சென்னை வெளிவட்டச் சாலையை ரூ.2526 கோடிக்கு தனியாருக்கு 25 ஆண்டுகளுக்கு வழங்கப்படவுள்ளதாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. 25 ஆண்டுகளில் ரூ.50 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டித்தரக் கூடிய வெளிவட்ட சாலையை அடிமாட்டு விலைக்கு தனியாருக்கு வழங்கும் தி.மு.க. அரசின் திட்டத்தை புதிய அரசும் அப்படியே செயல்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. சென்னையை கடந்து மற்ற நகரங்களுக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் சென்னை மாநகருக்குள் வருவதைத் தவிர்க்கும் வகையில் சென்னை வண்டலூரில் தொடங்கி நெமிலிச்சேரி வழியாக மீஞ்சூர் வரை மொத்தம் 60.15 கிமீ தொலைவுக்கான வெளிவட்டச் சாலை 2011&21 அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.2156.40 கோடி செலவில் இரு கட்டங்களாக அமைக்கப்பட்டது. சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் பெரும்பங்கு வகிக்கும் இச்சாலையை இப்போது தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் பராமரித்து வருகிறது. சென்னை வெளிவட்ட சாலையை பராமரித்து, சுங்கக்கட்டணம் வசூலிக்கும் ஒப்பந்தத்தை ரூ.2,000 கோடி என்ற அடிப்படை விலைக்கு தனியாருக்கு வழங்க முந்தைய தி.மு.க. அரசு முடிவு செய்தது. அந்த முடிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், அதை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 11-ந்தேதி அறிக்கை வெளியிட்டிருந்தேன். ஆனால், அதைப் பொருட்படுத்தாமல் ஒப்பந்தப்பணிகளை தி.மு.க. அரசு தொடர்ந்தது. அதன்பின் 11 மாதங்களாகி விட்ட நிலையில், சென்னை வெளிவட்டச் சாலையை தனியாருக்கு தாரை வார்க்கும் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும், ரூ.2,526 கோடிக்கு ஒரு தனியார் நிறுவனத்திற்கு அந்த ஒப்பந்தம் வழங்கப்படவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு அரசின் சொத்துகளை தனியார் நிறுவனத்திற்கு தரைமட்ட விலைக்கு தாரை வார்க்கும் இந்த முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த சாலையை அமைப்பதற்கான அடிக்கல் 2010-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டது. அ.தி.மு.க ஆட்சியில் இரு கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு முறையே 2014, 2021 ஆண்டுகளில் திறக்கப்பட்டது. 16 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்திற்காக வாங்கப்பட்ட கடனுக்கான வட்டியாக மட்டுமே பல நூறு கோடி ரூபாய் செலுத்தப்பட்டிருக்கும் நிலையில், திட்ட மதிப்பை விட வெறும் ரூ.369.60 கோடி மட்டுமே கூடுதலாக நிர்ணயம் செய்து ஒப்பந்தம் வழங்குவது பொருளாதாரப் படுகொலையாகவே இருக்கும். இதன் பின்னணியில் பேரங்களும், ஊழல்களும் நடந்திருக்கக் கூடும் என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன. தி.மு.க. ஆட்சி இப்படி ஒரு சீரழிவு ஒப்பந்தததை வழங்க முடிவு செய்ததை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், அதில் எந்த மாற்றத்தையும் செய்யாமல், தி.மு.க. அரசின் முடிவை த.வெ.க. அரசின் பின்பற்றுவது அதிர்ச்சியளிக்கிறது. சென்னை வெளிவட்ட சாலையை பராமரித்து, சுங்கக்கட்டணம் வசூலிப்பதற்கான ஒப்பந்தத்தை பெற்றுள்ள நிறுவனம், அடுத்த 25 ஆண்டுகளுக்கு சுங்கக்கட்டணத்தை வசூலித்துக் கொள்ளும். வெளிவட்ட சாலையில் இன்றைய நிலையில் சராசரியாக தினமும் 31 ஆயிரம் வாகனங்கள் பயணிக்கின்றன. இந்த சாலைக்கான சுங்கக்கட்டணம் கடந்த ஜூன் 1-ந்தேதிதான் உயர்த்தப்பட்டன. அதன்படி, குறைந்தபட்சமாக கார்களுக்கு ரூ.140 முதல் அதிகபட்சமாக 7 அச்சு சரக்கு வாகனங்களுக்கு ரூ.915 வரை சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சராசரியாக ஓரு வாகனத்திற்கு ரூ.350 என வைத்துக் கொண்டாலும் கூட ஆண்டுக்கு சுமார் ரூ.400 கோடி சுங்கக்கட்டணம் வசூலாகும். 25 ஆண்டுகளின் முடிவில் இந்த சாலையில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை 70 ஆயிரங்களை கடந்து விடும் என்பதால் சுங்கக்கட்டண வசூலும் ஆண்டுக்கு ரூ.4000 கோடி என்ற அளவைத் தாண்டி விடும். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இந்த சாலையிலிருந்து 25 ஆண்டுகளில் கிட்டத்தட்ட ரூ.50 ஆயிரம் கோடி வரை சுங்கக்கட்டணம் வசூலிக்க முடியும். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சாலையை வெறும் ரூ.2526 கோடிக்கு தனியாருக்கு தாரை வார்ப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை ரூ.2,100 பறக்கும் சாலை அமைப்பதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டதில் ரூ.700 கோடி ஊழல் நடந்திருக்கலாம் என்பதால் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. கரூரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதல்-அமைச்சர் விஜய், இந்தத் திட்டத்தின் பெயரைக் குறிப்பிடாமல் இரு மடங்கு தொகைக்கு வழங்கப்பட்டிருந்த சென்னை மேம்பாலம் திட்டத்திற்கான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்தார். அதே அளவுகோல்தான் இந்த ஒப்பந்தத்திற்கும் பயன்படுத்தபட வேண்டும். எனவே, சென்னை வண்டலூர் & மீஞ்சூர் இடையிலான வெளிவட்டச் சாலையை மிகக் குறைந்த தொகைக்கு தனியாருக்கு வழங்குவதற்காக தி.மு.க. ஆட்சியில் உருவாக்கப்பட்ட ஒப்பந்தத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். இந்த சாலை அரசின் பராமரிப்பிலேயே நீடிக்க வேண்டும்; அதில் சுங்கக்கட்டணம் ரத்து செய்யப்பட வேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/anbumani-ramadoss-has-stated-that-the-tamil-nadu-government-should-scrap-the-agreementformulated-during-the-dmk-regimeto-award-the-contract-to-a-private-entity-for-a-low-sum




