சென்னை ஐஐடி-யில் எலக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் படித்தவர், இன்று உலக செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியில் மிக முக்கியக் குரலாகவும் கவனம் ஈர்க்கும் விஞ்ஞானிகளில் ஒருவராகவும் வலம் வருகிறார். கால்டெக் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், அறிவியல் ஆராய்ச்சியில் AI பயன்பாட்டை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் ஆய்வாளராகவும் செயல்பட்டு வரும் அனிமா ஆனந்த்குமார், பிரபல 'டைம்' (TIME) வெளியிட்டுள்ள 2026-ம் ஆண்டுக்கான 'TIME100 AI' பட்டியலில் பெருமையுடன் இடம்பெற்றுள்ளார். யார் இந்த அனிமா ஆனந்த்குமார்? கர்நாடகாவின் மைசூரைச் சேர்ந்த அனிமா ஆனந்த்குமார், சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT Madras) எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படித்தவர். 2004-ல் தனது பட்டப்படிப்பை முடித்த அவர், பின்னர் அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தின் (Cornell University) உயர் கல்வியைத் தொடர்ந்தார். அங்கு முனைவர் பட்டம் பெற்ற பிறகு எம்.ஐ.டி-யில் (MIT) ஆராய்ச்சியாளராகப் பணியாற்றினார். தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகத்தில் (Caltech) கம்ப்யூட்டிங் அண்ட் மேத்தமேட்டிக்கல் சயின்சஸ் துறையின் பிரென் பேராசிரியராகச் செயல்பட்டு வருகிறார். இதற்கு முன்பு 'அமேசான் வெப் சர்வீசஸ்' (AWS) மற்றும் 'என்விடியா' (NVIDIA) போன்ற முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களிலும் AI ஆராய்ச்சியில் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். அறிவியலுக்காக AI! இன்று AI பெரும்பாலும் சாட்பாட்கள் (Chatbots), இமேஜ் ஜெனரேஷன் (Image Genration )போன்ற பொதுவான பயன்பாடுகளுடன் மக்களிடம் அறிமுகமாகியுள்ளது. ஆனால், அனிமா ஆனந்த்குமாரின் ஆராய்ச்சி இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. இயற்பியல் மற்றும் அறிவியல் சார்ந்த சிக்கல்களைத் தீர்க்க AI எப்படிப் பயன்படுத்தப்படலாம் என்பதில்தான் அவரது முக்கியக் கவனம் உள்ளது. குறிப்பாக, 'நியூரல் ஆபரேட்டர்கள்' (Neural Operators) மற்றும் 'ஃபோரியர் நியூரல் ஆபரேட்டர்கள்' தொடர்பான அவரது ஆய்வுகள், சிக்கலான அறிவியல் கணக்கீடுகளை மின்னல் வேகத்தில் செய்யும் புதிய வழிகளை உருவாக்கியுள்ளன. பாரம்பரிய கணினி முறைகளில் அதிக நேரம் எடுக்கும் வானிலை, திரவ இயக்கம் மற்றும் பிற இயற்பியல் சிமுலேஷன்களை AI உதவியுடன் வேகமாக கணிக்க முடியுமா என்பதற்கான ஆராய்ச்சிகளில் அவர் முக்கியப் பங்காற்றியுள்ளார். வானிலை முன்னறிவிப்பில் புதிய சாத்தியம் அவரது ஆராய்ச்சிக் குழு உருவாக்கியுள்ள 'ஃபோர்காஸ்ட்நெட்' (FourCastNet) போன்ற AI அடிப்படையிலான வானிலை முன்னறிவிப்பு மாதிரிகள், உலகளாவிய வானிலை மாற்றங்களை விரைவாக ஆய்வு செய்வதற்கான புதிய சாத்தியங்களை உருவாக்கியுள்ளன. பாரம்பரிய முறைகளில் அதிக கணினி வளங்களும் நேரமும் தேவைப்படும் நிலையில், AI உதவியுடன் பல்வேறு வானிலை நிலவரங்களை மிகக் குறுகிய நேரத்தில் கணக்கிட்டு ஆய்வு செய்ய முடியும். எதிர்காலத்தில் புயல், வெப்ப அலை உள்ளிட்ட தீவிர வானிலை நிகழ்வுகளை முன்கூட்டியே துல்லியமாகப் புரிந்துகொள்வதிலும் இதுபோன்ற தொழில்நுட்பங்கள் முக்கியப் பங்கு வகிக்கலாம். TIME100 AI என்றால் என்ன? செயற்கை நுண்ணறிவின் எதிர்காலத்தில் தாக்கம் செலுத்தி வரும் உலகின் முக்கிய நபர்களை அடையாளப்படுத்தி 'டைம்' (TIME) வெளியிடும் பட்டியல்தான் 'TIME100 AI'. இதில் AI ஆராய்ச்சியாளர்கள் மட்டுமின்றி, தொழில்நுட்ப நிறுவனத் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் இந்தத் துறையின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்துபவர்களும் இடம்பெறுகின்றனர். 2026 பட்டியலில் இடம்பெற்றுள்ள அனிமா ஆனந்த்குமார், AI-யை வெறும் டிஜிட்டல் உலகிற்குள் மட்டும் சுருக்கிவிடாமல், அறிவியல் கண்டுபிடிப்புகளை வேகப்படுத்தும் மாபெரும் கருவியாக மாற்றும் பணிக்காகக் கவனம் பெற்றுள்ளார். ஆராய்ச்சியிலிருந்து உலகளாவிய கொள்கை வரை. AI ஆராய்ச்சிக்கு அப்பாலும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் எதிர்காலப் பயன்பாடுகள் தொடர்பான உலகளாவிய விவாதங்களிலும் அனிமா ஆனந்த்குமார் தீவிரமாகப் பங்காற்றி வருகிறார். ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலாளரின் அறிவியல் ஆலோசனைக் குழுவிலும் (Secretary-General's Scientific Advisory Board) இவர் இடம்பெற்றுள்ளார். சென்னை ஐஐடியில் தொடங்கிய இவரது கல்விப் பயணம், இன்று AI, அறிவியல் ஆராய்ச்சி மற்றும் உலகளாவிய அறிவியல் கொள்கை எனப் பல தளங்களில் விரிந்துள்ளது. மனிதர்களைப் போலப் பேசும் AI-க்கு அப்பால், இயற்கை உலகைப் ஆழமாகப் புரிந்துகொள்ளவும் அறிவியல் சிக்கல்களைத் துரிதமாகத் தீர்க்கவும் AI எப்படி உதவும் என்ற கேள்விக்கான அத்தியாவசியப் பதில்களைத் தேடும் அனிமா ஆனந்த்குமாரின் பயணம் பலருக்கும் உத்வேகம் தருவதாகும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/technology/time100-ai-how-anima-anandkumar-is-reshaping-ai



