சென்னை, மோடி அரசு அநாகரீக அணுகுமுறையைக் கடைபிடித்து ராகுல் காந்தியை கைது செய்ததாக தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் இளைஞர்கள் மீது தாக்குதல் நடைபெற்ற விவகாரத்தில் பிரதமர் மோடி, தர்மேந்திர பிரதானை பதவி நீக்க கோரி அவரது வீட்டின் அருகே தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்த கொடுமை நிகழ்ந்துள்ளது. மக்களவை எதிர்கட்சித் தலைவர் என்ற பொறுப்பில் இருக்கும் ராகுல்காந்தியை மோடி அரசு இத்தகைய அநாகரீக அணுகுமுறையை கடைபிடித்து கைது செய்ததை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கின்றேன். நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு தோல்வி காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்குப் பொறுப்பேற்று மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 20 ஆம் தேதி முதல் மாணவர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்ட சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கும் நாளில் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்வதாக அறிவித்தார். தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அவர் சில நாட்களில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதேநாளில், நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி நடத்திய ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது, அமித்ஷாவின் காவல்துறை காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல்களை நடத்தியிருக்கிறது. ஜனநாயக நாட்டில் ஊர்வலமாக சென்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தும் உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. மாணவர்கள் மீது தடியடி நடத்தியதில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் களத்தில் நின்று பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக போராட்டத்தில் ஈடுபட்டது ஆட்சியாளர்களை திக்குமுக்காடச் செய்துள்ளது. மாணவர்களின் எழுச்சியை சகித்துக் கொள்ள முடியாத பா.ஜ.க. அரசு இத்தகைய அடக்குமுறைகளை ஏவி வருகிறது. சர்வாதிகார நாட்டில் தான் இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கைகளை காண முடியும். ஆனால், மோடி ஆட்சியில் சர்வாதிகார அணுகுமுறையோடு மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க நினைக்கும் நடவடிக்கைகளுக்கு மோடி அரசு மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கிறேன். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/modi-government-adopts-an-uncivilized-approach-manickam-tagore-slams




