Vollständiger Artikel
பா.ம.க-வில் மருத்துவர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையேயான மோதல் ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வந்த நிலையில், நேற்று மதியம் அன்புமணி தன்னுடைய மனைவி சௌமியா மற்றும் மகள்களுடன் தைலாபுரம் தோட்டத்திற்கு வருகை புரிந்தார். அப்போது அவர்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மருத்துவர் ராமதாஸ் அன்புமணியைக் கட்டிப் பிடித்து கண்கலங்கியதும், அதன் பிறகு அன்புமணி உள்ளிட்டவர்கள் ராமதாஸ் மற்றும் அவரது மனைவி காலில் விழுந்து ஆசி வாங்கிய வீடியோ காட்சிகளும் வெளியாகின. அதையடுத்து அங்கிருந்து பனையூர் கிளம்பிய அன்புமணியிடம், `இரண்டு அணிகளாக இருக்கும் பா.ம.க ஒன்றாக இணையுமா?' என்று எழுப்பிய கேள்விக்கு, `இனி நல்லதே நடக்கும்' என்று கூறிவிட்டுச் கடந்தார். ராமதாஸ் - அன்புமணி அதையடுத்து, `இரண்டு அணிகளும் ஒன்றிணைந்துவிட்டது' என்று பா.ம.க தொண்டர்கள் கொண்டாடி வரும் சூழலில், அன்புமணி தரப்பு குழப்ப நிலையில் கையைப் பிசைந்து கொண்டிருக்கிறது. ஏனென்றால் இந்தக் கொண்டாட்டம் நிரந்தரமானதா அல்லது தற்காலிகமானதா என்பது மருத்துவர் ராமதாஸ் வாய் திறக்கும் வரைதான் என்று அன்புமணிக்குத் தெரியும். பா.ம.க இரண்டு அணிகளாகப் பிரிந்தவுடன் நடந்த நிகழ்வு அது. 2025 ஆகஸ்ட் 15-ம் தேதி இரவு தைலாபுரம் தோட்டத்தில் தாய் சரஸ்வதி அம்மாளின் பிறந்தநாளில், மருத்துவர் ராமதாஸ், அன்புமணி, சௌமியா அன்புமணி ஆகியோர் கேக் ஊட்டிக் கொண்டாடும் புகைப்படங்கள் வெளியாகின. அதைத் தொடர்ந்து `அனைத்தும் முடிந்துவிட்டது. அய்யாவிடம் ஆசி பெற்ற சின்ன அய்யா' என்று சமூக வலைதளங்களில் கொண்டாடித் தீர்த்தனர் அன்புமணி ஆதரவாளர்கள். ஆனால் அடுத்த நாளே செய்தியாளர்களை அழைத்த மருத்துவர் ராமதாஸ், ``அன்புமணி என்னிடம் ஆசியெல்லாம் பெறவில்லை. வணக்கம் என்று சொன்னார் அவ்வளவுதான்' என்று கூறி அன்புமணி தரப்பு உருட்டல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஆனால் நேற்றைய சந்திப்பு மிகவும் உணர்ச்சிகரமானதாக இருந்தாலும், அன்புமணி குழப்பத்துக்குக் காரணம் அந்த சந்திப்பை ராமதாஸின் மகள் ஸ்ரீகாந்தி புறக்கணித்ததுதான். குடும்ப உறவுகளிடம் பேச வேண்டியதைப் பேசி, நேரம் உட்பட அனைத்தையும் திட்டமிட்டபிறகுதான் தைலாபுரம் சென்றார் அன்புமணி. அதனால்தான் முக்கிய குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அங்கிருந்தனர். ஆனால் மருத்துவர் ராமதாஸால் செயல் தலைவராக அறிவிக்கப்பட்ட அவரது மூத்த மகள் ஸ்ரீகாந்தியும், அவரது மகன் முகுந்தனும் அந்த சந்திப்பைத் தவிர்த்தனர். மருத்துவர் ராமதாஸ், ஸ்ரீகாந்தி அதேபோல அன்புமணி வெளியேறிய பிறகு மகன் முகுந்தனுடன் தைலாபுரம் வந்தார் ஸ்ரீகாந்தி, அதேவேகத்தில் வெளியேறினார். அதன்பிறகு அன்று மாலையே தைலாபுரம் தோட்டத்தில் வாடிப்போன முகத்துடன் செய்தியாளர்களைச் சந்தித்த .பா.ம.க.வின் மூத்த தலைவர் ஜி.கே.மணி, ``தற்போது கட்சியில் ஒரு மாவட்டத்திற்கு இரண்டு பொறுப்பாளர்கள் எனப் பிரிந்து இருப்பதை மறுக்கவில்லை. அவர்கள் மீண்டும் ஒன்றாகச் சேரும் போது அடிமட்ட தொண்டர்களுக்கு மனக்கசப்பு இருக்கத்தான் செய்யும்" என்று கசப்பை மென்றது போல முடித்தார். அதேபோல, ``மருத்துவர் ராமதாஸுக்கும், அன்புமணிக்கு இடையேயான மோதலில் என்னைப் போல பலர் வீழ்ந்தோம். பாதிக்கப்பட்டோம். என் மீது தாக்குதல் முயற்சிகள் கூட நடந்தது. அதையெல்லாம் மறந்து இன்று இருவரும் இணைந்திருக்கின்றனர். அதில் எங்களுக்கு மகிழ்ச்சிதான்" என்று மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் வார்த்தைகளை உதிர்த்திருக்கிறார் முன்னாள் எம்.எல்.ஏ அருள். இதுகுறித்து நம்மிடம் பேசிய பா.ம.க-வின் மூத்த நிர்வாகி ஒருவர், ``மருத்துவர் ராமதாசுக்கும் அன்புமணிக்கும் இடையேயான பிரச்னைக்கு முக்கிய காரணி சௌமியாதான் என்பது கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் தெரியும். கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது மகளையும் சிறப்பாக `கவனிக்க' நினைத்தார் ராமதாஸ். ஆனால் அந்த முயற்சிக்கு தடை விதித்துவிட்டார் சௌமியா. இருவருக்குமான மோதலின் துவக்கப்புள்ளி அதுதான். அதனால்தான் முகுந்தனையும், ஸ்ரீகாந்தியையும் கட்சிக்குள் இழுத்து வந்தார் ராமதாஸ். அப்படி இருந்தும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டனர் உறவினர்கள். அன்புமணியும் அந்த முயற்சியை பாசிட்டிவாக முடிக்க நினைத்தார். ஆனால், `கரை ஒதுங்கிய கப்பலில் ஏன் ஏற வேண்டும்?' என்று அதையும் தவிர்த்தது சௌமியா தரப்பு. அதன்பிறகுதான் சசிகலாவுடன் கூட்டணி வைத்தார் ராமதாஸ். சௌமியா அன்புமணி இந்தத் தேர்தல் முடிவுகள்தான் ராமதாஸ் - அன்புமணி இருவரையும் யோசிக்க வைத்தது. தேர்தல் தோல்விக்குப் பிறகு ஜி.கே.மணியும், சேலம் முன்னாள் எம்.எல்.ஏ அருளும் தைலாபுரத்தை எட்டிக்கூடப் பார்க்காததால் நொந்துபோயிருந்தார் ராமதாஸ். அதேபோல, கூடுதல் எம்.எல்.ஏக்களைப் பெற்றிருந்தால் அமைச்சரவைக்குள் சென்றிருக்கலாம் என்று நினைத்தார் அன்புமணி. அதன்பிறகுதான் இணைவது குறித்து உறவினர்களிடம் பேசியிருக்கிறார் அன்புமணி. அதனடிப்படையில்தான், தோட்டத்திற்கு வந்தார் அன்புமணி. அதேசமயம் அதுகுறித்து முன்பே தகவல் கூறியிருந்தும், அன்புமணியையும், அவரது குடும்பத்தினரையும் புறக்கணித்தார் ஸ்ரீகாந்தி. அன்புமணி அங்கிருந்து சென்றபிறகு வந்த ஸ்ரீகாந்தியிடம், `அனைத்தையும் நான் சரி செய்கிறேன்’ என்று கூறியிருக்கிறார் ராமதாஸ். அதற்கு, `நீங்க எல்லோரும் ஒன்னா நல்லா இருங்க அதுபோதும்’ என்று இறுகிய முகத்துடன் சென்றுவிட்டார்" என்கிறார்கள். பாமக: `தொண்டர்களுக்கு மனக்கசப்பு இருக்கும்தான்!’ – ராமதாஸ், அன்புமணி சந்திப்பு குறித்து ஜி.கே.மணி முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständiger Artikel — Link unten




