கன்னியாகுமரி, கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள ஈத்தங்காட்டை சேர்ந்தவர் சபரிவர்மன் (வயது 33). மாற்றுத்திறனாளி வியாபாரியான இவர் தனது வீட்டின் அருகே பெட்டிக்கடை நடத்தி வந்தார். அவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்ததாக கூறி, தென்தாமரைக்குளம் போலீசார் கடந்த 9-ந்தேதி சபரிவர்மனை கைது செய்து சிறையில் அடைத்தனர். அங்கு விசாரணை கைதியாக அடைக்கப்பட்டிருந்த அவர், கடந்த 13-ந்தேதி சிறையில் வைத்தே அடித்துக் கொல்லப்பட்டார். அவரை சிறை வார்டன்கள் 3 பேர் மற்றும் 8 விசாரணை கைதிகள் சேர்ந்து கை கால்களை கட்டிப்போட்டு கொடூரமான முறையில் அடித்து கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. இதுகுறித்து நேசமணிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகர்கோவில் சிறையின் வார்டன், தலைமை வார்டன், சிறைக் காவலர் மற்றும் 8 கைதிகள் என மொத்தம் 11 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சிறை காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, நாங்குநேரி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். நாகர்கோவில் சிறையில் இருந்த 8 கைதிகளிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அந்த 8 கைதிகளும், பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர். இந்த நிலையில் சபரிவர்மன் கொலையில் கைது செய்யப்பட்டிருக்கும் கைதிகளில் அரவிந்த், அஜய் மற்றும் ஜெகன் ஆகிய 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர். இதற்காக போலீசார் தரப்பில் நாகர்கோவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதே நேரத்தில் சபரிவர்மன் கொலை நடந்த நாகர்கோவில் சிறையில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் சபரிநாதன் கொலை நடந்த அறையில் இருந்து தடயங்கள் மற்றும் ரேகைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே சபரிவர்மனின் செல்போன் மாயமாகியிருக்கும் விவரம் வெளியானது. அந்த செல்போனில் சில முக்கிய வீடியோ ஆதாரங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அவரது செல்போன் யாரிடம் உள்ளது? என்பது தெரியாத நிலையில், அதை தேடி கண்டுபிடிக்கும் பணியிலும் போலீசார் ஈடுபட்டனர். இந்த நிலையில் சபரிவர்மன் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி தமிழக டி.ஜி.பி. உத்தரவு பிறப்பித்துள்ளார். இதைத்தொடர்ந்து சபரிவர்மன் கொலை வழக்கு விசாரணை உடனடியாக கன்னியாகுமரி மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. சபரிவர்மன் கொலை வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம், நேசமணி நகர் போலீசார் ஒப்படைத்துள்ளனர். அதனை பெற்றுக்கொண்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்க உள்ளனர். முதற்கட்டமாக அவர்கள் சபரிவர்மனின் மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். அதன்பிறகு கைது செய்யப்பட்டிருக்கும் சிறை வார்டன்கள் மற்றும் கைதிகளை காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/nagarkovil-prisoner-sabarivarman-murder-case-transferred-to-cbcid




