சென்னை, கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயலில், பல ஆண்டுகளாகத் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் தமிழர்களின் குடியிருப்புகள் இடித்து அகற்றப்பட்டிருப்பதாக வந்துள்ள செய்திகள் பேரதிர்ச்சியை ஏற்படுத்துவதாக வேல்முருகன் தெரிவித்துள்ளார். வீடுகளை இடிப்பது வளர்ச்சியா? இது தொடர்பாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- உரிகம் ரெயில்வே மேம்பாலப் பணிக்காக சுமார் 20 க்கும் மேற்பட்ட வீடுகள் அகற்றப்பட்டுள்ளன. இங்கு வசித்தவர்கள் முன்னாள் பாரத் கோல்டு மைன்ஸ் லிமிடெட் (BGML) தொழிலாளர்களின் குடும்பங்கள் என செய்திகள் தெரிவிக்கின்றன. நிர்வாகம் சில வீடுகள் அங்கீகரிக்கப்பட்டவை என்றும், மற்றவை ஆக்கிரமிப்புகள் என்றும் கூறியுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் போதிய கால அவகாசமும் மாற்று குடியிருப்பும் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர். பல ஆண்டுகளாக வாழ்ந்த மக்களின் உரிமைகளை முறையாகப் பரிசீலிக்காமல், மாற்று இடம் வழங்காமல் வீடுகளை இடிப்பது வளர்ச்சியா? அல்லது வாழ்வுரிமையைப் பறிக்கும் நடவடிக்கையா? கோலார் தங்கவயலின் வளர்ச்சிக்காக தலைமுறைகள் உழைத்த தமிழ்த் தொழிலாளர்களின் குடும்பங்களே இன்று தங்கள் வாழ்விடத்தை இழக்கும் நிலைக்குத் தள்ளப்படுவது வேதனைக்குரியது. இதற்கிடையே, அனூர் வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் வனத்துறை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவமும் ஏற்கெனவே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், உண்மை முழுமையாக வெளிக்கொணரப்பட்டு, தவறு செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். தமிழர்களின் குடியிருப்புகள் அகற்றம் ஒருபுறம் தமிழர்கள் உயிரிழக்கும் சம்பவம். மறுபுறம் நீண்டகாலமாக வாழ்ந்த தமிழர்களின் குடியிருப்புகள் அகற்றப்படுவது, கர்நாடகத்தில் தமிழர்களின் பாதுகாப்பும் வாழ்வுரிமையும் கேள்விக்குறியாக்கப்படுகிறதா? இந்த இரு சம்பவங்களுக்கும் நேரடி தொடர்பு இருப்பதாகக் கூறுவதற்கான ஆதாரம் இல்லாவிட்டாலும், கர்நாடகத்தில் தமிழர்கள் தங்களது வாழ்விடங்களில் இருந்து படிப்படியாக வெளியேற்றப்படுகிறார்களா? என்ற அச்சம் எழுவதைத் தவிர்க்க முடியாது. எனவே, கர்நாடக அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு எங்களது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம். பாதிக்கப்பட்ட குடும்பங்களின் குடியிருப்பு உரிமைகளைப் பாதுகாப்பதுடன், மாற்று இடம் மற்றும் உரிய மறுவாழ்வு வழங்க வேண்டும். தமிழ்நாடு முதல்-அமைச்சர் உடனடியாகத் தலையிட்டு, கர்நாடக அரசுடன் பேசி, கோலார் தங்கவயல் தமிழர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசும் இவ்விவகாரத்தில் தலையிட்டு, கர்நாடகத்தில் நீண்டகாலமாக வாழ்ந்து வரும் தமிழர்களின் உயிர், உடைமை மற்றும் குடியிருப்பு உரிமைகளைப் பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சட்டரீதியான நடவடிக்கை தேவை தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் உரிமை மீறல்கள் மீண்டும் நடைபெறாத வகையில், உரிய கண்காணிப்பையும் சட்டரீதியான பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டியது அரசுகளின் கடமை. கர்நாடக மண்ணில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் தமிழர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதி மற்றும் மறுவாழ்வை உறுதி செய்யவும், இனிவரும் காலங்களில் தமிழர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் உரிமை மீறல்கள் நடைபெறாத வகையில் கடுமையான சட்டரீதியான மற்றும் நிர்வாகரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு முதல்-அமைச்சரையும், மத்திய அரசையும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/is-the-karnataka-government-attempting-to-evict-tamils-from-their-ancestral-homes-velmurugan




