திருவொற்றியூர், சென்னை திருவொற்றியூரில் பட்டினத்தார் குருபூஜை ஊர்வலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பட்டினத்தார் குரு பூஜை சென்னை திருவொற்றியூரில் கடற்கரையோரம் அமைந்துள்ள பிரசித்திபெற்ற பட்டினத்தார் கோவிலில், மகான் பட்டினத்தாரின் நட்சத்திர குருபூஜை விழா நடைபெற்றது. விழாவையொட்டி காலையில் தியாகராஜசாமி வடிவுடையம்மன் கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க, பள்ளி மாணவ-மாணவிகள் தேவார திருமுறைகளை பல்லக்கில் வைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். சைவ சமய பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் வகையில் திருமுறை பாராயணத்துடன் தொடங்கிய இந்த ஊர்வலம், சன்னதி தெரு வழியாக பட்டினத்தார் கோவிலை வந்தடைந்தது. அங்கு வேத மந்திரங்கள் முழங்க நட்சத்திர விழா தொடங்கியது. சிறப்பு அபிஷேகம் தொடர்ந்து, மூலவர் சன்னதியில் எழுந்தருளியுள்ள பட்டினத்தாருக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், தேன் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. பின்னர் பட்டாடை அணிவித்து, பலவகை மலர்களால் அலங்கரித்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் சைதாப்பேட்டை அருள்பிரகாசம், திருவொற்றியூர் செந்தில்குமார், முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், பா.ஜ.க. மாவட்ட துணை தலைவர் ஜெய்கணேஷ் உள்பட சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஊர்வலம் மாலையில் உற்சவமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் நடைபெற்றது. வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவமூர்த்தி சப்பரத்தில் எழுந்தருள, கைலாய வாத்தியம், சங்கநாதம், மேளதாளம் முழங்க வீதி உலா நடைபெற்றது. திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலை சுற்றியுள்ள நான்கு மாடவீதிகளிலும் உற்சவமூர்த்தி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். குரு பூஜை விழாவையொட்டி காலை முதல் மாலை வரை பட்டினத்தாரின் வாழ்க்கை வரலாறு, துறவறம், சிவபக்தி, ஆன்மிக சிந்தனைகள் மற்றும் அவருடைய திருவாக்குகளின் சிறப்புகளை எடுத்துரைக்கும் ஆன்மிக சொற்பொழிவுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பட்டினத்தாரின் போதனைகளை கேட்டறிந்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் உதவி கமிஷனர் நற்சோனை மற்றும் ஊழியர்கள் செய்து இருந்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/devotional/pattinathar-guru-puja-procession-in-thiruvottiyur-chennai




