Vollständiger Artikel
ஜியோ ஹாட்ஸ்டாரில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது 'ரெசார்ட்' சீரிஸ். அந்த சீரிஸில் முக்கிய கதாபாத்திரங்களாக நடிக்கும் தன்யா மற்றும் விஷ்ணு பாலாவை நம் டெலி விகடன் சேனலுக்காகப் பேட்டி கண்டோம். மறைந்த இயக்குநர் கே. பாலசந்தரின் பேரன் மற்றும் நடிகை கீதா கைலாசத்தின் மகன்தான் விஷ்ணு பாலா. Resort Series - Jio Hotstar தன்யா பேசியபோது, "முதல்ல, இந்த சீரிஸ் மக்களுக்கு கனெக்ட் ஆகுமானு சந்தேகம் இருந்தது. இது புது வகையான கதைக் களம் என்பதால் தொடக்கத்திலேயே இவ்வளவு வரவேற்பு கிடைக்கும்னு நாங்க எதிர்பார்க்கல. இந்த சீரிஸ்ல என்னோட கதாபாத்திரம் என்னோட நிஜ வாழ்க்கை பண்புகளுக்கு நேர் எதிரானது. கதாபாத்திரத்துக்காக நான் ரொம்ப அமைதியா, பொறுமையா, நிதானமா இருந்தேன். ஆனா, நிஜத்துல நான் எப்போதும் துருதுருனு ஜாலியாகத்தான் இருப்பேன்." என்றவர், "ஒரு சீன் நடிக்கிறதுக்கு முன்னாடி அந்த சீனை எப்படி இன்னும் மேன்மைப்படுத்தலாம்னு நானும் விஷ்ணுவும் பேசிப்போம். அதனால எங்களுக்கு அந்த சீன் நடிக்கும் போது உண்மையான ஃபீல் கிடைக்கும். வேணிக்கும் விக்கிக்கும் இடையில் ஏற்பட்ட பிரேக்கப் சீன் இரவு ரெண்டு மணிக்கு எடுக்கப்பட்டது. நாங்க காலையில 9:00 மணியிலிருந்து ஷூட் பண்ணதால ஏற்கனவே ரொம்ப சோர்வா இருந்தோம். அதுகூட இயக்குநர் பிரவீன் பென்னட் சார் 'கனவே கனவே' பாட்டு போட்டு எங்களைத் தயார்படுத்தினார். அதனால அந்த சீன் அரை மணி நேரத்துல எடுத்து முடிச்சிட்டோம். நடிகை அனு இந்த ப்ராஜெக்ட்டை விட்டு விலகினதுனால கதையில கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டது. கதை முழுசா சமையல் சார்ந்து இருக்கிறதால, வெங்காயம் வெட்டுவது, சமைக்கும்போது நெருப்பு உண்டாக்குவது, தொடர்ந்து பல மணி நேரம் நிற்க வேண்டியது போன்ற சீன்கள் எனக்கு நிறைய அமையும். மேக்கப்பும் கலையாம இந்த மாதிரி சீன் நடிக்கிறது கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும். ஆனா, டேக் முடிஞ்சதும் சமைச்சு வெச்சிருக்கும் உணவை நாங்க எல்லாரும் சேர்ந்து சாப்பிடுவது மகிழ்ச்சியா இருக்கும்." என்றார். Resort Series Actors - Vishnu & Dhanyaa அவரைத் தொடர்ந்து பேசிய விஷ்ணு, "இந்த சீரிஸ்ல என்னோட கதாபாத்திரத்தை நிறைய பேர் திட்டுறாங்க. ஆனா, அது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாதான் இருக்கு. இவ்வளவு பேர் கதைகூட கனெக்ட் ஆகி, ரசிச்சுப் பாக்குறதுனாலதான் என் மேல கோவம் வருது. என்னோட கதாபாத்திரம் மக்களோட கோபத்தைச் சம்பாதிக்கிற மாரிதான் எழுதப்பட்டு இருக்கு. இந்த சீரிஸுக்காக, படப்பிடிப்பைத் தொடங்குவதற்குப் பத்து நாட்களுக்கு முன்னாடி இந்தக் குழுவோட ஆக்டிங் ஒர்க் ஷாப்ல கலந்துகிட்டேன். அதுல நிறைய தெளிவும் கிடைச்சது. தொடக்கத்துல, வேணிக்கும் விக்கிக்கும் நடுவுல சண்டை அதிகமா இருந்தது. அது எங்களுக்கு நடிக்கவும் சுலபமா இருந்தது. நான் பொதுவாகவே ரொம்ப அமைதியான பையன். எனக்குக் கத்துறது, சண்டை போடுறது மாதிரியான சீன்ஸ்ல நடிக்கும் போது புதுசாவும் சுவாரஸ்யமாவும் இருக்கு. நிறைய மக்கள் விக்கி வில்லனா இருக்கிறதைத்தான் விரும்புறாங்க. தலைவாசல் விஜய் சார்கூட இணைந்து நடிக்கிறது நிறைய அனுபவத்தைக் கொடுக்குது. அவரைப் பார்த்து நிறைய கத்துக்குறோம். கூடவே, அது என்னுடைய நிறைகுறைகளையும் சொல்லித் தருது. கதை முழுக்க சமையல் தொடர்பாயிருக்கிறதால ஒரே உணவே பலமுறை சமைக்க வேண்டியது இருக்கும். Resort Series Actors - Vishnu & Dhanyaa சமையல் கலைஞர் ஜோ, இந்த சீரிஸுக்காகக் கடினமான உழைப்பு போட்டிருக்காரு. அவரு சமைச்சு குடுக்குறதையும் தாண்டி எங்களுக்கும் சமையல் தொடர்பா நிறைய சொல்லித் தருவார்." என்றவர்தான், மறைந்த இயக்குநர் கே. பாலசந்தரின் பேரன். அது பற்றிப் பேசுகையில், "எனக்கு என் தாத்தா அடையாளத்தைப் பயன்படுத்திக்காமல் வரணும்னுதான் நான் முயற்சி பண்ணிட்டு இருக்கேன். அதை நான் பயன்படுத்தினாலும் எனக்கு பிரஷர் ஆகிடும். என்னை நம்பி வாய்ப்புகள் கொடுக்கணும். அதுக்கான முயற்சிகள்லதான் இருக்கேன்." எனப் பகிர்ந்துகொண்டார். முழு பேட்டியை காண கீழே இணைக்கப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்யவும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständiger Artikel — Link unten
