மாண்டெக் சிங் அலுவாலியா தலைமையிலான குழு, மாநிலத்தின் சொந்த வரி வருவாயையும், வரி அல்லாத வருவாயையும் அதிகரிப்பதற்கான வழிமுறைகள் குறித்து அரசுக்கு ஆலோசனைகள் வழங்க உள்ளது. தமிழ்நாட்டின் நிதி மேலாண்மை குறித்து நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த வெள்ளை அறிக்கையில் மாநிலத்தின் நிதி நிலைமை உள்ளபடியே பிரதிபலித்தது. ஒரு மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறை என்பது, அரசின் அன்றாட செலவுகளைச் சமாளிக்க வருவாய் எந்த அளவுக்கு போதாமல் இருக்கிறது என்பதைக் காட்டும் அளவீடாகும். எளிமையாகச் சொன்னால், வருமானத்துக்கும், அன்றாட செலவுகளுக்கும் இடையிலான வித்தியாசமே வருவாய் பற்றாக்குறை. அதேபோல், நிதிப் பற்றாக்குறை என்பது, அரசின் மொத்த செலவுக்கும், கடன் அல்லாத அனைத்து வருவாய்களுக்கும் இடையிலான வித்தியாசமாகும். அதாவது, அரசு சம்பாதிப்பதைவிட அதிகமாகச் செலவிடும் நிலையையே நிதிப் பற்றாக்குறை என்கிறோம். இந்தப் பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்காகவே அரசு கடன் வாங்குகிறது. அந்தக் கடனுக்கான வட்டியையும் ஆண்டுதோறும் செலுத்தவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இந்தக் கணக்கின்படி, கடந்த நிதியாண்டில் தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை ரூ.78,324 கோடியாக இருந்தது. இது மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.22 சதவீதமாகும். மாநில வரலாற்றிலேயே இது மிக அதிகபட்ச வருவாய் பற்றாக்குறையாகும். மாநில அரசின் மொத்தக் கடன் தற்போது ரூ.10 லட்சத்து 42 ஆயிரத்து 858 கோடியாக இருக்கிறது. நாட்டில் உள்ள மாநிலங்களில் அதிகம் கடன் வாங்கிய மாநிலம் தமிழ்நாடுதான். இந்தக் கடனுக்காக ஆண்டுதோறும் ரூ.67,050 கோடி வட்டியாகச் செலுத்தவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அரசின் வருவாயில் ஒவ்வொரு நான்கு ரூபாயிலும், ஒரு ரூபாய் வட்டிச் செலவுக்கே செல்கிறது. இந்த நிலை இதோடு முடிவடையப் போவதில்லை. 2026-27-ம் நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை சுமார் ரூ.90,500 கோடியை எட்டும் என்றும், நிதிப் பற்றாக்குறை ரூ.1 லட்சத்து 64 ஆயிரம் கோடியை நெருங்கக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதனால், கடனும் அதற்கான வட்டிச் சுமையும் மேலும் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, தமிழக அரசின் வருவாயைப் பெருக்கும் நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படவேண்டிய அவசர அவசியம் ஏற்பட்டுள்ளது. அதன் முதல் நடவடிக்கையாக, டாஸ்மாக் கொள்முதல் முறைகளில் மாற்றங்களைச் செய்து, வேறு வழிகளில் சென்றுகொண்டிருந்த பணப்பாய்ச்சலை அரசுக் கஜானாவுக்கு திருப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அரசின் வருவாயைப் பெருக்கும் வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து பரிந்துரைகள் வழங்குவதற்காக மத்திய திட்டக்குழுவின் முன்னாள் துணைத் தலைவரும், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முன்னாள் தலைவருமான மாண்டெக் சிங் அலுவாலியா தலைமையில் 6 நிபுணர்களைக் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்தக் குழு, மாநிலத்தின் சொந்த வரி வருவாயையும், வரி அல்லாத வருவாயையும் அதிகரிப்பதற்கான வழிமுறைகள் குறித்து அரசுக்கு ஆலோசனைகள் வழங்க உள்ளது. மேலும், வருவாய் கசிவுகள், வரி ஏய்ப்பு, வருவாய் வசூலிக்கும் துறைகளில் உள்ள நிர்வாகத் திறமையின்மை ஆகியவற்றைத் தடுக்க தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதையும் பரிந்துரைக்கும். 3 மாதங்களுக்குள் தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கக் குழுவுக்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு அளிக்கும் பரிந்துரைகளை தமிழக அரசு நடைமுறைப்படுத்தும்போது, மாநிலத்தின் நிதி நிலையை மேம்படுத்துவதோடு, வருவாய்க் கசிவுகளையும் அடைக்கும் நடவடிக்கைகள் உறுதியாக முன்னெடுக்கப்படவேண்டும். அதாவது அடைக்கவேண்டியதை அடைத்தால்தான் கிடைக்கவேண்டியது கிடைக்கும். அதன்மூலம், லஞ்சமில்லா அரசு என்ற பெயருடன், பற்றாக்குறையைக் குறைத்த அரசு என்ற நற்பெயரையும் பெறும் திசையை நோக்கி அரசு பயணிக்கத் தொடங்கிவிட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/others/thalayangam/the-tamil-nadu-governments-effort-to-boost-revenue




